‘கொடைக்கானலில் குங்குமப்பூ உற்பத்தி’ - ஒரு ஏக்கர் நிலத்தில் ரூ.4 லட்சம் வரை வருமானம் ஈட்டும் விவசாயி!
இந்தியாவில் வெள்ளியை விட காஸ்ட்லியான பொருளாக குங்குமப்பூ உள்ளது. மேலும் இது உலகிலேயே காஸ்ட்லியான மசாலா பொருளாகும். குறிப்பாக காஷ்மீரில் தயாராகும் குங்குமப்பூவிற்கு உலகம் முழுவதும் மவுசு அதிகம்.
இந்தியாவில் வெள்ளியை விட காஸ்ட்லியான பொருளாக குங்குமப்பூ உள்ளது. மேலும், இது உலகிலேயே காஸ்ட்லியான மசாலா பொருளாகும். குறிப்பாக காஷ்மீரில் தயாராகும் குங்குமப்பூவிற்கு உலகம் முழுவதும் மவுசு அதிகம்.
கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் காஷ்மீரில் இருந்து வரும் குங்குமப்பூவின் விலை ஒரே ஆண்டில் ஒரு கிலோவுக்கு ₹2 லட்சத்தில் இருந்து ₹3 லட்சமாக உயர்ந்துள்ளது என்பதே அதற்கான சிறந்த உதாரணம். இதற்கு காரணம் காஷ்மீரி குங்குமப்பூ மட்டுமே உலகிலேயே GI குறியிடப்பட்ட குங்குமப்பூ ஆகும்.
குங்குமப்பூவுக்கு எப்போதுமே ஒரு சிறப்பு மார்கெட் உள்ளது. உலக அளவில் குங்குமப்பூ உற்பத்தில் ஈரான் முதலிடத்தில் உள்ளது, அதற்கு அடுத்தப்படியாக ஆப்கானிஸ்த்தான், கிரீஸ், மொராக்கோ, ஸ்பெயின், ஜப்பான், இந்தியா உள்ளது. இருப்பினும், இந்தியாவின் காஷ்மீரில் உற்பத்தி செய்யப்படும் குங்குமப்பூ உலக அளவிலான தேவையில் வெறும் 5 சதவீதத்தை மட்டுமே சரி செய்யக்கூடியதாக உள்ளது.
ஆண்டுக்கு இந்தியாவின் குங்குமப்பூ தேவை 100 டன்கள் ஆகும். ஏனெனில் இங்கு மசாலா, அழகு சாதனங்கள், மருத்துவம் போன்ற பல்வேறு விஷயங்களுக்கு குங்குமப்பூ பயன்படுகிறது. ஆனால் காஷ்மீரில் 8-9 மெட்ரிக் டன்கள் உற்பத்தி செய்யபடுகிறது இங்கு உற்பத்தி செய்யப்படும் குங்குமப்பூ குறைந்த அளவில் உள்ளதால் ஆண்டுக்கு பல ஆயிரம் கிலோ வெளிநாட்டில் இருந்து வாங்கும் நிலை உள்ளது.
இந்தியாவிலேயே காஷ்மீரில் விளையக்கூடிய குங்குமப்பூவை, மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் விவசாயி ஒருவர் விளைவித்து சாதனை படைத்திருக்கிறார். அதுவும் ஒன்றல்ல, இரண்டல்ல மொத்தம் 9 வருடங்கள் இதற்காக பாடுபட்டிருக்கிறார். கொடைக்கானல் விவசாயிக்கு இப்படியொரு யோசனை வந்தது எப்படி என பார்க்கலாம்...
கொடைக்கானல் விவசாயி:
மலைகளின் இளவரசி என்று அழைக்கபடும் கொடைக்கானல் மலை பயிர்களுக்கு பெயர் பெற்றது. இங்கு உருளை கிழங்கு, பீட்ரூட், காலிபிளவர், பீன்ஸ், கேரட், புரோக்கோலி போன்ற பல்வேறு வகையான காய்களை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.
தற்பொழுது இந்தியாவில் காஷ்மீருக்கு அடுத்தபடியாக மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கொடைக்கானலில் விளைவித்து விவசாயி ஒருவர் சாதனை படைத்துள்ளார். மேல் மலை கிராமமான கவுஞ்சி மற்றும் பூண்டி மலை கிராமங்களில் மூர்த்தி என்ற விவசாயி கடந்த 2014 ஆன் ஆண்டு முதல் தொடர்ந்து முயற்சி செய்து தற்போது வெற்றிகரமாக குங்குமப்பூ சாகுபடி செய்து வருகிறார்.
2014ம் ஆண்டு காஷ்மீரில் இருந்து ஒரு கிலோ குங்குமப்பூ விதை கிழங்குகளை வாங்கி வந்த மூர்த்தி, பசுமை குடில் அமைத்து அதனை விளைவிக்க ஆரம்பித்தார். தனது ஒரு ஏக்கர் நிலத்தில் பயிர் செய்த இவர், தற்போது ஒரு கிலோ குங்குமப்பூ விதை கிழங்குகளை 40 கிலோவாக உருவாக்கி அசத்தியுள்ளார்.
“இந்திய வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் இதற்கான பயிற்சி மற்றும் அறிவுரைகளை பெற்றேன். மேலும் காஷ்மீருக்கு அடுத்தபடியாக குங்குமப்பூ பயிரிட கொடைக்கானல் சீதோஷ்ண நிலை மற்றும் குளிர் முக்கிய காரணமாக அமைந்தது. ஒரு ஏக்கர் நிலத்தில் காய்கறிகள் பயிரிட்டால் சில ஆயிரங்கள் மட்டுமே கிடைக்கும், ஆனால் குங்குமப்பூ சாகுபடியில் ஒரு ஏக்கர் நிலத்தில் சுமார் நான்கு லட்சம் வரை சம்பாதிக்க முடிகிறது. குங்குமப்பூ சாகுபடிக்கு 55 நாட்கள் முதல் 60 நாட்கள் போதுமானது,” என்கிறார்.
தற்பொழுது கொடைக்கானலில் விளையக்கூடிய குங்குமப்பூ காஷ்மீரை காட்டிலும் தரம் உயர்ந்ததாக இருப்பதாகவும், மேலும் கொடைக்கானலில் விளையும் குங்குமப்பூவுக்கு சந்தையில் நல்ல விலை கிடைப்பதாகவும் விவசாயி மூர்த்தி தெரிவித்துள்ளார்.