இயற்கை விவசாயத்தில் நெல், சிறுதானியம், வாழைச் சாகுபடியில் அசத்தும் விஏஓ!
படைத்தவன் கடவுளெனில்... உழுது, விதைத்து, உண்பவர் கைகளுக்கு நஞ்சில்லா உணவாகக் கொடுப்பவனும் கடவுளே! என்பதே விஏஓ பாரதியின் கொள்கை.
படைத்தவன் கடவுளெனில்... உழுது, விதைத்து, உண்பவர் கைகளுக்கு நஞ்சில்லா உணவாகக் கொடுப்பவனும் கடவுளே! என்பதே விஏஓ பாரதியின் கொள்கை.
பாரதி சின்னஞ்சிறு பிள்ளையாக புதுக்குளம் அணை பக்கம் சுற்றித் திரிந்த போதே விவசாயத்தின் மீது ஒரு வித காதல் உணர்வு இருந்து கொண்டே வந்துள்ளது.
"என்னுடைய சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் தர்மத்துப்பட்டி, அப்பா கிராம உதவியாளரா இருந்தாரு. எங்களுடைய குடும்பம் ஏழ்மையானது. +2 வரை உள்ளூரிலேயே படித்தேன். அதுக்குப்பிறகு உயர்கல்வி படிக்க வசதி இல்லாததால உள்ளூர் தொலைக்காட்சியில் பணியாற்றிக்கொண்டே அதில் கிடைத்த சம்பளத்தை வைத்து கல்லூரிப் படிப்பை தொடர்ந்தேன் என்கிறார் பாரதி.
கல்லூரிப் படிப்பை முடித்த பின்னர் சென்னையில் தனியார் தொலைக்காட்சியில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. உடனடியாக சென்னைக்குப் புறப்பட்டு போய் வேலையில் சேர்ந்துட்டேன். பேச்சுலர் வாழ்க்கையை சக்சஸ்ஃபுல் சிங்கிலாக ஜாலியாக என்ஜாய் செய்தேன்.
சொந்த சமையல், நினைத்தும் கூட பார்த்திராத தீயp பழக்கங்கள் இல்லை என்பதால் சம்பாத்தியத்தில் பெரும் பகுதியை சேமித்து வைத்திருந்தேன் என தனது வாழ்க்கைப் பக்கங்களை புரட்டிப் போடுகிறார் பாரதி சுப்பிரமணி.
'நூல் நயம் பழகு' எனக்கு மிகவும் பிடித்த வார்த்தை. சின்ன வயதில் இருந்தே நூலகம் சென்று புத்தகங்களோடு பேசுவது பெருமகிழ்ச்சியைத் தரும். இயற்கை விவசாயத்தில் வெற்றி பெறும் விவசாயிகளின் வாழ்க்கைக் கதைகளைத் தேடித் தேடிப் படிப்பேன். செய்தியாளர் பணி, நண்பனாக நூல்கள் என சென்னை வாழ்க்கை நகர்ந்து கொண்டிருந்த போது தான் அந்த துக்க செய்தி வந்தது.
திடீரென அப்பா எங்களை நிர்கதியாய் விட்டுச் செல்ல, அப்பாவின் அரசாங்க வேலை வாரிசு என்ற முறையில் எனக்குக் கிடைத்தது. இந்தப் பணியில் சேர விருப்பமில்லை என்றாலும் அம்மாவின் சொல்லைத் தட்ட முடியாமல் விஏஓ பணியில் சேர்ந்து சொந்த ஊரிலேயே அரசாங்கப் பணியைத் தொடங்கினேன்.
நகரத்து வாழ்க்கைக்கு விடை கொடுத்து சொந்த ஊருக்கே வந்ததும் மனதிற்குள் இருந்த விவசாயி எட்டிப் பார்க்கத் தொடங்கினான். என்னுடைய சேமிப்பு, வங்கிக் கடன் என பணம் ஏற்பாடு செய்து எங்க ஊருலயே 50 சென்ட் நிலத்தை வாங்கினேன். மலையடிவாரத்துல ரொம்ப நாள் விவசாயம் செய்யாம கிடந்த பூமி என்னுடைய இயற்கை விவசாயத்திற்கு தோதாய் அமைந்தது.
நான் இயற்கை விவசாயம் செய்யப்போவதை அறிந்து என்னுடைய குடும்பத்தார் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். நாங்க கூட்டுக் குடும்பமா இருக்கோம். பெரியப்பா எங்களுக்கு வழிகாட்டி, என் அண்ணன் பிர்லா கோளரங்கத்தில் பணியாற்றுகிறார். அவரும் விடுமுறைக்கு ஊருக்கு வந்து விவசாயப் பணியில் எங்களுடன் சேர்ந்து கொள்வார். பெரியப்பா முழு நேரமாக தோட்டத்தை பார்த்துக் கொள்கிறார்.
அம்மா, மனைவி என எல்லோருமே வயலில் இறங்கி வேலை செய்வார்கள். இதில் ஆத்ம திருப்தி கிடைப்பதோடு எங்களுக்கான உணவை நாங்களே விளைவிக்கிறோம் என்ற பெருமையும் இருக்கிறது என்கிறார் பாரதி.
வயல்ல முதல் விளைச்சலே சிறுதானியங்களான கம்பு, சோளம். மயில் இரையாக உண்டது போக எஞ்சி இருந்ததை எடுத்து கம்பங்கூழ் செய்து ஊரில் தெரிந்தவர்களுக்கு கொடுத்தோம். இயற்கை விவசாய கம்மங்கூழின் ருசி அவர்களை கட்டிப் போட நிறைய பேர் கம்பு கேட்டு வந்தாங்க.
அடுத்ததா, ஒரு ஏக்கர்ல கோ-51 ரக நெல்லை நடவு செஞ்சு இயற்கை முறையில சாகுபடி செஞ்சதுல, கிடைத்த பத்து மூட்டை நெல்லை வீட்டுத் தேவைக்கு வைத்துக் கொண்டோம். சிறுதானியங்கள், அரிசிக்கு அடுத்தபடியா நிலக்கடலை, கத்திரிக்காய்னு சாகுபடி செஞ்சோம். எதிர்பார்த்த மகசூல் இல்லாட்டியும் நஞ்சில்லா சுவையான உணவுப் பொருளை விளைவித்து சாப்பிடும் திருப்தி இருந்தது.
ரெண்டு வெள்ளாமை முடிஞ்சதுக்குப் பிறகு, ஐம்பது சென்ட் நிலத்துல 100 நாட்டுப் பலாக் கன்னுகளை நடவு செஞ்சுருக்கோம். நெட்டை+குட்டை ரகத்துல ஐம்பது தென்னங்கன்றுகள், பன்னீர் கொய்யாவில் பத்து, இமாம் பசந்த் மாஞ்செடிகள் பத்துனு நடவு செஞ்சுருக்கோம்.
கன்றுகள் நட்டது போக மீதமுள்ள இடத்தை என்ன செய்யலாம் என்று யோசித்த போது வாழையடி வாழையாக வாழ்வு தரும் வாழை நடவு செஞ்சோம். வீட்டுத் தேவைக்காக முதலில் பத்து நாட்டு ரக வாழை நட்டோம். அடுத்து ரஸ்தாளி ரகத்துல 400 கன்றுகளை நடவு செய்தோம். வாழைக்குப் பாசனம் செய்யும் போது ஜீவாமிர்தம், அமுதக்கரைசல் இரண்டையும் மாத்தி மாத்தி கலந்துவிடுறோம். ஏழாவது மாசத்துக்குப் பிறகு மீன் அமினோ அமிலத்தைக் கலந்துவிடுவோம். மீன் அமினோ அமிலத்தைத் தெளிப்பு மூலமாவும் கொடுக்குறோம்.
வாழைச் சாகுபடியில நான் ஒரு விஷயத்தைக் கத்துகிட்டேன். தார் போட்டபிறகு பூவை உடைச்சுட்டு, பஞ்சகவ்யாவை ஒரு பாலித்தீன் பையில் ஊத்திக் கட்டிவிட்டா காய் பெருசாகுது. தார் போட்டுப் பூ தொங்க ஆரம்பிச்ச பிறகு, காய்க்கும் பூவுக்கும் முக்கால் அடி இடைவெளி வந்ததும், பூவை உடைத்து, ஒரு பாலித்தீன் பையில 30 மில்லி பஞ்சகவ்யா, 150 மில்லி தண்ணீர் ஊற்றித் தாரோட அடிப்பகுதியில கட்டிவிடணும். இப்படிக் கட்டிவிட்டா தாரின் எடை அதிகமாகுது. தாரோட பிரமாண்டத்தைப் பார்த்து நான் மிரண்டுட்டேன்.
அரை ஏக்கர் நிலத்துல வாழை சாகுபடி மூலமா பழங்கள், வாழை இலைகள் விற்பனை என இதுவரைக்கும் 70,000 ரூபாய் வருமானம் கிடைச்சுருக்கு. இது தவிர கோழி வளர்ப்பு செய்து வருகிறோம். கடக்நாத் கோழிகள்ல மூணு பெட்டை. ரெண்டு சேவல்னு அஞ்சு கோழிகள் வளர்க்குறோம். பெருவிடையில ஒரு கோழியும் ஒரு சேவலும் இருக்கு. இங்க ஜீவாமிர்தம், அமுதக்கரைசல் எல்லாத்தையும் நானே தயார் செஞ்சுக்குறேன். பஞ்ச கவ்யாவை மட்டும் வெளியில் வாங்கிக்கிறேன்.
நாங்க வருமானத்தை எதிர்பார்த்து விவசாயம் செய்யலை. நாங்களே உழைச்சு இயற்கையான உணவை உற்பத்தி செஞ்சு சாப்பிடணும்னு நினைக்கிறோம். நாங்க விவசாயம் கத்துக்க எங்க நிலத்தையே பயன்படுத்திட்டுருக்கோம். அடுத்து ஐந்தடுக்கு முறையில காய்கறி, கீரைகள்னு சாகுபடி செய்யப்போறோம், என்கிறார் உற்சாகமாக.
திண்டுக்கல் மாவட்டத்துல இயற்கை விவசாயிகள் இணைந்து நடத்தும் சங்கத்தின் மூலமாக பல்வேறு சந்தைகளை நடத்துகிறோம். இதில் கிடைக்கும் விளைப்பொருட்களை மக்கள் ஆர்வத்துடன் வந்து வாங்கிச் செல்கின்றனர். இது மட்டுமின்றி விவசாயக் கல்லூரி மாணவர்கள், வெளிநாட்டினர் என பலரும் எனது வயல் மற்றும் சந்தைகளுக்கு வந்து விவசாய அனுபவம் பெறுகின்றனர் என்கிறார் பாரதி.
பணத்திற்காக நாங்கள் விவசாயம் செய்யவில்லை, மனதிருப்திக்காக செய்கிறோம் என முழு மனிதனாக வாழ்ந்து கொண்டிருக்கும் திருப்தியோடு அடுத்தக் கட்ட விவசாயத் திட்டங்களில் களமிறங்கி இருக்கிறார் இந்த இளம் இயற்கை விவசாயி பாரதி.