மாத்திரை, ஜெல் வடிவில் இயற்கை உரங்கள்: விவசாயத்தை லாபகர தொழிலாக்கும் இலக்குடன் மதுரை செந்தில்குமார்!
சத்யம் அக்ரோ கிளினிக்கின் மிஷனே 5-5 தான். அதாவது 5 மாநிலங்களில், 5 ஆயிரம் அவுட்லெட்கள், 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு, 50 லட்சம் இயற்கை விவசாயிகள், 500 கோடி டர்ன்ஓவர் என தாங்கள் 2030க்குள் சாதிக்க வேண்டியவை குறித்து தெரிவிக்கிறார் அதன் நிறுவனர் செந்தில்குமார்.
விவசாயி என்றவுடன் சேறு படிந்த அரையாடை அணிந்த உடல், வேகாத வெயிலில் நாள் முழுவதும் உழைத்துவிட்டு, போட்ட முதலை எடுக்க முடியாமல் வறுமை நிறைந்த சோகமான முகம்தான் பெரும்பாலும் நம் நினைவுக்கு வரும்.
அப்படிப்பட்ட விவசாயத்தை லாபகரமான தொழிலாக்குவோம், விவசாயியை தொழிலதிபராக்குவோம் என்ற முழக்கத்துடன் களமிறங்கி, விவசாயிகளின் வாழ்க்கை முறையை மட்டுமல்ல, நாட்டின் பொருளாதாரத்தையே உச்சத்துக்கு கொண்டு செல்லும் சூப்பர் திட்டத்துடன் மதுரையில் களமிறங்கியுள்ளார் ’சத்யம் பயோ’ நிறுவனத்தின் நிறுவனரான செந்தில்குமார்.
தனது விவசாயத் தொழில் புரட்சித் திட்டம் குறித்து அவர் நம்மிடம் தெரிவித்தது, எங்களது முன்னோர்கள் அனைவரும் விவசாயிகள். ஆனால், நாளடைவில் மதுரைக்கு வந்துவிட்டதால் விவசாயம் செய்ய முடியவில்லை. அதனால் என் மனதில் மட்டும் எப்படியாவது விவசாயியாக வேண்டும் என்ற எண்ணம் ஓடிக் கொண்டிருந்தது.
இதையடுத்து, நான் படித்த பி.காம்., உடன் சேர்த்து, விவசாயம் குறித்த 2 டிப்ளமோ கோர்ஸ்களை முடித்துவிட்டு, விவசாயம் தொடர்பான ஓர் நிறுவனத்தில் பணிபுரிந்தேன். அப்போது பணி நிமித்தமாக தமிழகம் முழுவதும் சுற்றும்போது, விவசாயிகளின் நிலை என்னை மிகுந்த வேதனைக்குள்ளாக்கியது.
“இதனால் நான் விவசாயியாகும் முடிவை தள்ளி வைத்துவிட்டு, நாடு முழுவதும் லட்சக்கணக்கான வெற்றிகரமான விவசாயிகளை உருவாக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டேன்,” என தனது வெற்றிக் கதையைத் தொடங்கினார் செந்தில்குமார்.
சத்யம் பயோ தொடக்கம்
செந்தில்குமார் 2004ல் 4 பேருடன் ’சத்யம் பயோ’ என்ற இயற்கை உர தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். பெரும்பாலான விவசாயிகள் நச்சுகள் நிறைந்த இரசாயன உரங்களைப் பயன்படுத்தி வந்தபோது, இவர்கள் ஓவ்வொரு விவசாயியையும் நேரில் சென்று சந்தித்து, இயற்கை உரங்களின் நன்மைகளை எடுத்துச் சொல்லி, அவர்களின் நிலத்தில் ஓர் சிறு பகுதியை பெற்று, அதில் தங்களின் சொந்த தயாரிப்பான இயற்கை உரங்களைப் பயன்படுத்தும் முறையை எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, உரங்களையும் இலவசமாக வழங்கியுள்ளனர்.
இவ்வாறு 2009 வரை, விவசாயிகளுக்கு விழிப்புணர்வு, இலவச உர விநியோகம் என பல்வேறு கள ஆய்வுகளில் ஈடுபட்டு, இறுதியாக முழுவீச்சில் இயற்கை உர நிறுவனத்தைத் தொடங்கி, விவசாயிகளுக்குத் தேவையான இயற்கை உரத்தை உற்பத்தி செய்து விற்பனை செய்யத் தொடங்கியுள்ளனர்.
பொதுவாக விவசாயிகளைப் பொறுத்தவரை கம்போஸ்ட், மண்புழு உரம், சாணிக் கழிவு உரம் போன்றவை மட்டும்தான் இயற்கை உரங்கள். ஆனால், நாங்கள் வித்தியாசமாக களமிறங்கினோம். கடல் பாசியை மூலப் பொருளாகக் கொண்டு முழுக்க முழுக்க இயற்கை உரங்களைத் தயாரித்து விற்பனை செய்தோம்.
"இந்த உரங்களையும் திட, திரவ, ஜெல், மாத்திரை என விவசாயிகளின் தேவைக்கேற்ப, பல்வேறு நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பல்வேறு வடிவங்களில் தயாரித்து விற்பனை செய்ததால் நல்ல பலன் இருந்தது," என்கிறார் செந்தில்குமார்.
300 பணியாளர்களுடன் ஆண்டுக்கு ரூ.25 கோடி டர்ன்ஓவர் செய்யும் மதுரை சத்யம் அக்ரோ கிளினிக், மறைமுகமாக சுமார் 500-க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், கடல் பாசிகளை மீனவர்கள் மூலம் சேகரித்து, அதனை உரிய தொழில்நுட்பம் மூலம் இயற்கை உரங்களாக மாற்றி விவசாயிகளுக்கு அளித்து வரும் ஆச்சரியத் தகவலையும் நம்மிடம் தெரிவித்தார்.
மாத்திரை வடிவில் உரம்
மாத்திரை வடிவில் உரங்கள் என்றால் நம்ப முடிகிறதா, ஆனால் உண்மை. ஓர் செடிக்கு 1 மாத்திரை போதும். இதனை மண்ணில் புதைத்தோ, நீரில் கலந்தோ செடிக்கு அளிக்கலாம். இதேபோல வாழை, தென்னை போன்றவைக்கு மரம் 1-க்கு 10 கிராம் மாத்திரை போதுமாம். தற்போது இதற்காக ஓர் உற்பத்தி ஆலையைத் தொடங்கத் திட்டமிட்டு வருகிறார் செந்தில்குமார்.
பொதுவாக 1 ஏக்கர் நிலத்துக்கு 1000 கிலோ கம்போஸ்ட் உரம் போட வேண்டும் அல்லது மண்புழு உரம் என்றால் சுமார் 500 கிலோவாவது போட வேண்டும். ஆனால், அட்வான்ஸ்டு டெக்னாலஜியை பயன்படுத்தி தயாரிக்கப்படும் நமது இயற்கை உரம் 5 முதல் 10 கிலோவே போதுமானதாகும். பணரீதியாக பார்த்தாலும், 1 ஏக்கருக்கு 1 டிராக்டர் சாணி உரம் போட ரூ.5 ஆயிரம் வரை செலவாகும். ஆனால் நமது இயற்கை உரத்தை பயன்படுத்தும்போது, சுமார் 2 ஆயிரம் ரூபாய் மட்டுமே செலவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது என்கிறார்.
குறைந்த அளவே உரப் பயன்பாடு இருப்பதனால், குறைவான மனித சக்தியே தேவைப்படுகிறது. இதனால் உற்பத்தி செலவு குறைவதோடு, மகசூலும் அதிகரிக்கிறது. இதுகுறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதே தனது முக்கியப் பணியாக செயல்படுத்தி வருகிறோம் என்கிறார் செந்தில்குமார்.
தற்போது, மதுரை மாவட்டம் வாடிப்பட்டி, மேலமாத்தூரில் செயல்பட்டு வரும் இவர்களின் உரத் தொழிற்சாலைகளில் மட்டும் 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் தவிர மறைமுகமாக சுமார் 500க்கும் மேற்பட்டோர் பாசிகளை சேகரித்து, அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருகின்றனராம். இதுகுறித்து விளக்கமாக கேட்பதற்கு முன்பு இவர்களின் உர தயாரிப்புக்கான மூலப் பொருள் குறித்து கேட்டபோது, மிகுந்த ஆச்சரியமாக இருந்தது.
கடல் பாசி:
அள்ள அள்ள குறையாத அட்சயப் பாத்திரமாய் உலக மக்களுக்கு வளங்களை அள்ளிக் கொடுக்கும் கடல்தான், இவர்களின் இயற்கை உரத் தயாரிப்புக்கான மூலப் பொருள்களையும் வாரி வழங்குகிறது. கடலில் சுமார் 600 வகையான பாசிகள் இருக்கின்றனவாம். அதில் வெறும் 6 வகை பாசிகளைத்தான் நாம் பயன்படுத்த முடியுமாம். அதில் 2 வகை பாசிகளைத்தான் அப்பகுதி மீனவர்கள் மற்றும் மீனவப் பெண்களை பயன்படுத்தி, சேகரித்து, காய வைத்து மொத்தமாக பெற்று, தங்களின் உரத் தயாரிப்புக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
பயிர்களுக்கான கிளினிக்:
உள்ளூர் சந்தை முதல் உலகச் சந்தை வரை விற்பனையாகும் இவர்களின் இயற்கை உரங்களை விற்பனை செய்வதற்காகவே ஓர் கிளினிக் தொடங்கியுள்ளனர். ஆம் மனிதர்களுக்கு, விலங்குகளுக்கு ஏற்படும் உடல் நலப் பாதிப்புகளை குணப்படுத்தும் கிளினிக்குகளைப் போல பயிர்களுக்கு, செடி கொடி மரங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை குணப்படுத்தும் ’சத்யம் அக்ரோ கிளினிக்’கை ஏற்படுத்தியுள்ளார்.
இதன் மூலம், நீர், மண் பரிசோதனை போன்றவற்றை விவசாயிகளின் இடத்துக்கே தேடிச் சென்று பரிசோதனை மேற்கொண்டு, அவர்களின் நிலத்தில் எந்த மாதிரியான காலகட்டத்தில் எந்த மாதிரியான பயிர்களை பயிரிட வேண்டும். அந்த பயிர்களுக்கு என்ன மாதிரியான உரங்களை எவ்வளவு பயன்படுத்த வேண்டும் என்பன போன்ற பல்வேறு யோசனைகளை வழங்கி வருகிறது இந்த அக்ரோ கிளினிக்.
விவசாயத்தை லாபகரமான தொழிலாக்குவோம், விவசாயியை தொழிலாதிபராக்குவோம் என்பதை குறிக்கோளாக கொண்ட எங்கள் நிறுவனம், இதற்காக விதை முதல் விற்பனை வரை அனைத்து விதமான விவசாயச் சேவைகளையும் வழங்கி வருகிறது.
ஆம், எங்களது சத்யம் அக்ரோ கிளினிக்கில் விவசாயிகளுக்கு விதைகள் வழங்குவதில் இருந்து, விளைந்த விளை பொருள்களை லாபகரமாக விற்பனை செய்வதுவரை விவசாயிகளுக்கு வழிகாட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தொடக்கத்திலேயே பயிர்களைத் தாக்கும் பூச்சிகளையும், புழுக்களையும் கண்டறிந்து உரிய மருந்து தெளித்து பராமரித்தால், அவை பரவாமல் பயிர்களும் செழித்து வளரும் எனத் தெரிவிக்கிறார்.
மகசூல்:
மார்க்கெட்டில் எங்கள் இயற்கை உரத்தை பயன்படுத்தி விளைவித்த வாழைக்கு என தனி மவுசே உள்ளது. ஆம், எங்கள் உரத்தை பயன்படுத்தி விளைந்த வாழைப்பழங்கள் நல்ல திரட்சியாகவும், எடை அதிகமாகவும் இருப்பதால் மார்க்கெட்டில் எங்கள் இயற்கை உரத்தை பயன்படுத்தி மகசூலாகும் வாழைக்கு நல்ல பெயர் உள்ளது.
எங்கள் நிறுவனத்துக்கு என்று சுமார் 20 ஆண்டு கால நிரந்தர வாடிக்கையாளர்கள்கூட உள்ளனர். நாங்களும் சில விவசாயிகளைத் தேடிச் சென்று அவர்களின் நிலத்தில் சில ஏக்கர்களை எங்கள் உரங்களை பரிசோதித்து பார்க்கச் சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். இதன்மூலம் மகசூல் 20 முதல் 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக பரிசோதனைகளில் தெரிய வந்துள்ளது.
இவர்களின் 5 வகையான உர வகைகளில் மிக முக்கியமானது மாத்திரை வடிவிலானது ஆகும். இதனை கடந்த 2 வருடங்களாக பரிசோதனை முயற்சியில் நடைமுறைப்படுத்திவிட்டு, தற்போது செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளார்கள்.
”இதன்மூலம் ஓரு செடிக்கு 1 உர மாத்திரை போதுமாம். இதனை மற்ற உரங்களைப் போல மண்ணில் கலந்து தண்ணீர் விடலாம் அல்லது தண்ணீரில் கலந்து தெளிக்கலாம் என மிகவும் எளிமையாக உருவாக்கியுள்ளோம்,” என்கிறார் செந்தில்குமார்.
எங்களது மிஷனே 5-5 தான். அதாவது, 5 மாநிலங்களில், 5 ஆயிரம் அவுட்லெட்கள், 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு, 50 லட்சம் இயற்கை விவசாயிகள், 500 கோடி டர்ன்ஓவர் என தங்களின் மிஷன் குறித்து தெரிவித்த செந்தில்குமார், இதற்காக இவர் வைத்திருக்கும் டெட்லைன் 2030ஆகும்.
தற்போதே சுமார் 5 ஆயிரம் அவுட்லெட்டில் 50க்கும் மேற்பட்ட கிளினிக்குகளைத் திறந்துள்ளார். இந்த கிளினிக்குகளின் உரிமையாளர்கள் பெரும்பாலும் விவசாயிகளாகத்தான் இருப்பார்கள். மேலும், ஓவ்வோர் கிளினிக்கிலும் 2, 3 பேருக்கு வேலை வாய்ப்பும் உறுதி என்கிறார்.
இதன்மூலம் விவசாயிகளைத் தொழில் முனைவோர்களாகவும் மாற்ற முடியும். இதனால் ஓவ்வொரு விவசாயியும் ஓர் தொழிலதிபராக மாறலாம் என்கிறார் சத்யம் செந்தில்குமார்.
மேலும், சத்யம் அக்ரோ கிளினிக் குறித்து அறிந்து கொள்ள 75508 75508 என்ற விவசாயிகளுக்கான உதவி எண்ணிலோ, 1800 425 8055 என்ற டோல் ப்ரி எண்ணிலோ,
www.sathyamagroclinic.com என்ற இணையதள பக்கத்திலோ சென்று கூடுதல் விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம்.
இயற்கை விவசாயத்தில் கலக்கும் எம்பிஏ பட்டதாரி - ‘ஆர்கானிக்’ வெல்லம் மூலம் அசத்தல் வருவாய்!