'கலாம் முதல் ரஜினி வரை வியக்கவைத்த ஆளுமை' - பத்மஸ்ரீ விருது பெறும் ‘பாலம்’ கல்யாணசுந்தரம்'
30 ஆண்டுகள் கல்லூரியில் நூலகராகப் பணியாற்றிய இவர், அதில் கிடைத்த வருமானம், ஓய்வூதியம், குடும்பச் சொத்து, விருதுகள் மூலம் கிடைத்த பரிசுத் தொகைகள் உள்ளிட்ட அனைத்தையுமே தொண்டுப் பணிக்கு வழங்கியவர்.
குடியரசு தினத்தை முன்னிட்டு 2023ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த 6 பேரில் ஒருவர் ‘பாலம்’ கல்யாணசுந்தரம். இவர் மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதல் நடிகர் ரஜினிகாந்த் வரை வியந்து பாராட்டிய ஆளுமை என்று தெரியுமா?
தமிழகத்தைச் சேர்ந்த நூலகரும், சமூக சேவகருமான ‘பாலம்’ கல்யாணசுந்தரத்துக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவரது சமூகப் பணியை கெளரவிக்கும் வகையில் இந்த உயரிய அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
30 ஆண்டுகள் கல்லூரியில் நூலகராகப் பணியாற்றிய இவர், அதில் கிடைத்த வருமானம், ஓய்வூதியம், குடும்பச் சொத்து, விருதுகள் மூலம் கிடைத்த பரிசுத் தொகைகள் உள்ளிட்ட அனைத்தையுமே தொண்டுப் பணிக்கு வழங்கியவர். ‘பாலம்’ என்ற தொண்டு நிறுவனம் மூலம் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக சமூக சேவை ஆற்றி வரும் இவரது பயணம் மலைக்கத்தக்கது.
யார் இந்த ‘பாலம்’ கல்யாணசுந்தரம்?
திருநெல்வேலியில் பிறந்த இவர், ஒரு கல்லூரியில் 30 ஆண்டுகள் நூலகராக உழைத்து பணியாற்றிக் கிடைத்த தொகை, ஓய்வூதியம், குடும்பச் சொத்து, விருதுகள் மூலம் கிடைத்த பரிசுத் தொகைகள் உள்ளிட்ட அனைத்தையுமே ஏழைகளுக்கான தொண்டுப் பணிக்குச் செலவிட்டிருக்கிறார். அன்பு பாலம் என்று தொண்டு நிறுவனத்தை நடத்தி வரும் இவர், தன் சொந்த பணத்தில் ஏழைகளுக்காக 40 ஆண்டுகளாக ரூ.30 கோடிக்கும் மேல் செலவழித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு துணைபுரியும் அரும்பணியாற்றி வரும் இவர், அமெரிக்காவில் 'ஆயிரம் ஆண்டுகளில் சிறந்த மனிதர்' (Man of Millinium) என்ற விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, ரூ.30 கோடியைப் பரிசாகப் பெற்றார். அந்தத் தொகை முழுவதையுமே குழந்தைகள் நலனுக்காக அளித்து, அந்த விருதையே வியப்படையச் செய்தார்.
’A Most Notable intellectual’ in the World’ என்ற பட்டத்தை இவருக்கு வழங்கிய கேம்பிரிட்ஸ் பல்கலைக்கழகம், நூலகத் துறைக்கு நோபல் பரிசு இருந்தால், அதனைப் பெறத் தகுதி இவருக்கு உண்டு என்ற குறிப்பையும் வழங்கியது.
முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளின்டன் தன் இந்தியப் பயணத்தின்போது, அரசு சாராத இருவரை சந்திக்க விரும்பினார். ஒருவர் கலாம்; மற்றொருவர் 'பாலம்' கல்யாண சுந்தரம்.
ஏர்வாடி அருகே கருவேலங்குளத்தில் பிறந்த இவர், ஸ்ரீவைகுண்டம் குமர குருபரர் கலைக்கல்லூரியில் நூலகராக பணியாற்றி, மாணவர்களுடனும் புத்தகங்களுடனும் வாழ்ந்தவர். பின்னர், ஓட்டல் ஒன்றில் ஊழியராக பணியாற்றி, அந்த வருமானத்தையும் சேவைக்கு செலவிட்டார். ஏழை மக்களுக்கு சேவையாற்றுவது ஒன்றையே தன் வாழ்நாள் நோக்கமாகக் கொண்டவர், 35 ஆண்டுகளுக்கு முன்பாகவே தன் உடல் உறுப்புகளை மருத்துவக் கல்லுரிகளுக்குத் தானமாக எழுதி வைத்துவிட்டார்.
தனக்கென்று நிலமோ வீடோ பணமோ சேர்க்காத இவர், திருமண வாழ்க்கையையும் தேர்ந்தெடுக்க விரும்பவில்லை. மகத்தான மக்கள் பணிகளை எளிய மனிதராக செய்துவரும் இவரை, 20ம் நூற்றாண்டின் இணையற்ற சாதனையாளர்களில் ஒருவராக ஐக்கிய நாடுகள் அமைப்பு தேர்ந்தெடுத்தது. இப்போது இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி பெரிய அங்கீகாரத்தைக் கொடுத்திருக்கிறது இந்திய அரசு.
‘பாலம்’ கல்யாணசுந்தரம் குறித்து பிரபலங்கள் பகிர்ந்தவை:
’திறமான புலமை எனில் வெளிநாட்டார் அதை வணக்கம் செய்தல் வேண்டும்,’ என்றார் பாரதியார்.
பாலம் ஐயாவை கிளிண்டன், நெல்சன் மண்டேலா போன்ற வெளிநாட்டவரும் ஐரோப்பிய அமெரிக்க பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் பாராட்டியுள்ளார்கள். அது தான் நமக்குப் பெருமை." - மறைந்த முன்னாள் முதல்வர் முதல்வர் ஜெயலலிதா.
"தன்னலம் இல்லாமல் வாழ்வதே சிறப்பான பெரு வாழ்வாகும். இறைவன் பா.கல்யாணசுந்தரத்துக்கு அந்த அரும் பெரும் வாழ்வைக் கொடுத்து இருக்கிறார். அதனால் பலர் அவர் நிழலில் நல்ல நிலையில் சிறப்படைகிறார்கள்," - மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்.
"கல்யாண சுந்தரனார் நம்மோடு வாழும் ஒரு மகான் ஆவார்." - நடிகர் ரஜினிகாந்த்
ஒரு சுவாரஸ்ய பகிர்வு:
எளிமை என்பது தோற்றத்தில் மட்டுமல்ல; ஒருவர் உதிர்க்கும் சொற்களிலும் அடங்கியிருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக ஒரு நிகழ்ச்சியில் 'பாலம்' கல்யாண சுந்தரம் பேசியதைச் சுட்டிக் காட்டலாம்.
"எனக்கு ஒருமுறை ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த், 'எனக்கு இரு மகள்கள் உள்ளனர். அப்பாதான் இல்லை. ஆகவே, பாலம் கல்யாண சுந்தரத்தை தந்தையாக தத்தெடுத்துக் கொள்கிறேன்' என்று கூறினார்," என்ற தகவலை நினைவுகூர்ந்தவர்.
அதன்பின் சொன்ன ஒரு வாக்கியம் மேன்மை பொருந்தியவை. ஏழைகளுக்காக செய்த தியாகம் என்று பிறர் கருதும் விஷயத்தை முழுமையாக பின்னுக்குத் தள்ளி, தன்னைச் சுற்றியுள்ளவர்கள் அனைவரையுமே தொண்டு செய்யத் தூண்ட வேண்டும் என்ற வகையில் சொன்னார்...
“குழந்தைகள் இல்லாத நான் நன்கொடை செய்தது பெரிய விஷயம் இல்லை. ஆனால், குழந்தைகள் உள்ள ஒருவர் இதுபோல் நன்கொடை செய்துள்ளார். ஆனால், அவர் பெயர் வெளியே தெரியவில்லை,” என்றார் உணர்வுபூர்வமாக.