Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

32 ஆண்டு; 350 தயாரிப்பு; 135 கோடி ரூபாய்; தனி ஒருவனாய் 'பங்கஜகஸ்தூரி’ நிறுவிய ஹரீந்திரன்!

பத்மஸ்ரீ விருது வென்ற டாக்டர் ஜே ஹரீந்திரன் நாயர் தொடங்கிய ‘பங்கஜகஸ்தூரி ஹெர்பல்ஸ்’ ஆயுர்வேத மருந்துகளை ஏற்றுமதி செய்து 135 கோடி ரூபாய் ஆண்டு வருவாய் ஈட்டுகிறது.

32 ஆண்டு; 350 தயாரிப்பு; 135 கோடி ரூபாய்; தனி ஒருவனாய் 'பங்கஜகஸ்தூரி’ நிறுவிய ஹரீந்திரன்!

Thursday October 08, 2020 , 4 min Read

டாக்டர் ஜே ஹரீந்திரன் நாயர் முப்பதாண்டுகளுக்கும் மேலாக தொழில்முனைவில் ஈடுபட்டுள்ளார். ஆரம்பத்தில் தற்காலிக ஆயுர்வேத கிளினிக் தொடங்கிய இவர், இத்தனை ஆண்டுகளில் கேரளாவின் மிகப்பெரிய மூலிகை மருந்து நிறுவனங்களில் ஒன்றை உருவாக்கியுள்ளார்.


1984-ம் ஆண்டு முதல் ஆயுர்வேதத்தில் இவரது பங்களிப்பிற்காக பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. 135 கோடி ரூபாய் வணிகத்தை உருவாக்கிய விதம் குறித்து ஹரீந்திரன் எஸ்எம்பிஸ்டோரி உடன் பகிர்ந்துகொண்டார்.

1
“நான் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவன். என் அப்பா ஆவணங்கள் எழுதும் பணியில் இருந்தார். என் அம்மா இல்லத்தரசி. குடும்பத்தில் யாரும் தொழில்முனைவில் ஈடுபட்டதில்லை. எனக்கு அந்த எண்ணம் இருந்ததில்லை. 1983-ம் ஆண்டு திருவனந்தபுரம் அரசு ஆயூர்வேத கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்தேன். அதன் பிறகு 1986ம் ஆண்டு பூஜப்புராவில் உள்ள ஆராய்ச்சி நிறுவனத்தில் ரிசர்ச் ஃபெலோவாக நியமிக்கப்பட்டேன். குடும்பத் தேவையை பூர்த்தி செய்யப் போதுமான வருமானம் கிடைத்தது,” என ஹரீந்திரன் எஸ்எம்பிஸ்டோரி இடம் தெரிவித்தார்.

ஹரீந்திரனுக்கு மக்கள் சேவையில் ஈடுபாடு உண்டு. கிட்டத்தட்ட இரண்டாண்டுகள் பணி புரிந்த பின்னர் வேலையை விட்டு விலகினார். ஆயுர்வேத மருந்துகள் தயாரிப்பு தொழிலை அமைத்தார்.


ஆனால் அவரிடம் போதுமான நிதி இல்லை. நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடமிருந்து 50,000 ரூபாய் கடன் வாங்கினார். திருவனந்தபுரத்தின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள பூவாச்சல் என்கிற கிராமப் பகுதியில் சிறியளவில் தயாரிப்பைத் தொடங்கினார்.


1988ம் ஆண்டு ’ஸ்ரீ தன்வந்திரி ஆயுர்வேதிக்ஸ்’ என்கிற பெயரில் தொடங்கினார். பின்னர் ‘பங்கஜகஸ்தூரி ஹெர்பல்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

ஆரம்ப நாட்கள்

ஹரீந்திரன் அரசுப் பணியில் சேருவதற்கு முன்பு 1983-1986ம் ஆண்டுகளிடையே சிறிய ஆயுர்வேத கிளினிக் ஒன்றை அமைத்தார். அதை நிர்வகிப்பது சிரமமாக இருந்ததால் மூடவேண்டிய சூழல் ஏற்பட்டது.


பங்கஜகஸ்தூரி ஹெர்பல் நிறுவனத்தில் ஹரீந்திரன் ஆராய்ச்சி செய்யத் தொடங்கி மருந்து தயாரிப்பில் ஈடுபட்டார். கொள்முதல், தயாரிப்பு, விற்பனை, மார்கெட்டிங் என தனியாகவே ஒட்டுமொத்த செயல்பாடுகளையும் நிர்வகித்தார். இவர் திருவனந்தபுரத்தில் இருந்து மருந்துகளை எடுத்துக்கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் 200-300 கி.மீட்டர் வரை சென்று விநியோகித்தார்.

“அது சவாலான காலகட்டமாக இருந்தபோதும் மறக்கமுடியாத தருணங்களாக அமைந்தது. எத்தகைய சூழல் ஏற்பட்டாலும் குறிக்கோளில் உறுதியாக இருக்க உதவியது. மருத்துவர்கள் என் மருந்துகளை அறவழியில் விற்பனை செய்யவில்லை. மருந்து உற்பத்தியாளர்களுக்கு அதிக பரிச்சயமில்லாத மார்க்கெட்டிங் மற்றும் விளம்பர உத்திகள் மூலம் தயாரிப்புகளை விற்பனை செய்யவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது,” என்றார் ஹரீந்திரன்.

டாபர், டாக்டர் வைத்யா, கேரளா ஆயுர்வேதா போன்ற புகழ்பெற்ற நிறுவனங்களுடன் போட்டியிடுவது அந்த இளம் வயதில் கடினமாக இருந்துள்ளது. இருப்பினும் அவர் நம்பிக்கை இழக்காமல் தொடர்ந்து செயல்பட்டார்.

“மக்களின் பல்வேறு உடல்நலக் குறைபாடுகளுக்கு சிகிச்சையளித்து உதவ விரும்பினேன். ஆஸ்துமா, நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் உள்ளிட்ட சுவாசப் பிரச்சனைகளுக்காக முதல் தயாரிப்பாக பிரீத் ஈஸி (Breathe Eazy) உருவாக்கினேன். சர்வதேச தரநிலைகளின்படி குறிப்பிட்ட அளவில் 14 மூலிகைகளை தனித்துவமாக கலந்து இயற்கை மூலப்பொருட்களுடனும் தயாரித்தேன்,” என்றார்.

வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. வெவ்வேறு உடல் நலக் கோளாறுகளுக்கு சிகிச்சை அளிக்கவும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் மேலும் பல தனித்துவமான தயாரிப்புகளை ஹரீந்திரன் உருவாக்க இது ஊக்கமளித்தது.


மூட்டுகளில் ஏற்படும் வீக்கத்தை கட்டுப்படுத்தி முதுகு மற்றும் முழங்கால் வலிக்கு நிவாரணம் அளிக்கும் ஆர்த்தோஹெர்ப் (Orthoherb) உருவாக்கினார். வறட்டு இருமலுக்காக பங்கஜகஸ்தூரி இருமல் மருந்து தயாரித்தார். அத்துடன் பங்கஜகஸ்தூரி ஆண்டசிட், இளநரை மற்றும் முடி உதிர்வைத் தடுக்க பங்கஜகஸ்தூரி ஹெர்பல் ஹேர் ஆயில் ஆகியவற்றையும் தயாரித்தார். Pankajakasthuri Ilogen Excel பாதிக்கப்பட்ட கணைய செல்களை புதுப்பித்து இன்சுலின் சுரப்பதற்கு ஏற்ப வலுப்படுத்துகிறது. கைகள் உணர்வற்று போவது உள்ளிட்ட நீரிழிவு தொடர்புடைய அறிகுறிகளை போக்குகிறது.


பங்கஜகஸ்தூரி ஹெர்பல்ஸ் 32 ஆண்டுகளாக ஒவ்வொரு மாதமும் சிறப்பாக வளர்ச்சியடைந்து வருகிறது. தற்போது 350 தயாரிப்புகளைக் கொண்டுள்ளது. ஆயுர்வேத மருத்துவர்கள், கவுண்டர்கள், ஏற்றுமதி, மின்வணிகம் போன்ற வழிகளில் விற்பனை செய்து வருகிறது. அமேசான், ஃப்ளிப்கார்ட், 1MG.com, மெட்லைஃப், நெட்மெட்ஸ் போன்ற மின்வணிக தளங்கள் மூலம் தயாரிப்புகள் விற்பனை செய்யப்படுகின்றன. யூகே, மத்திய கிழக்கு போன்ற பகுதிகளுக்கு இந்த பிராண்டின் துணை உணவுகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

2

ஆயுர்வேத கல்லூரி

ஹரீந்திரன் தனது நீண்ட நாள் லட்சியத்தை நிறைவேற்றும் விதமாக 2002-ம் ஆண்டு கேரளாவில் முதல் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியை நிறுவினார். கட்டகடா பகுதியில் அமைந்துள்ள இந்தக் கல்லூரியில் 250 இளநிலை மற்றும் முதுகலை பட்டதாரிகளுக்கு ஆயுர்வேத கல்வி கற்பிக்கப்படுகிறது. 80 ஆசிரியர்கள் இங்கு பணியாற்றுகின்றனர். இந்தக் கல்லூரியில் 150 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனை ஒன்றும் செயல்படுகிறது. உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் நோயாளிகளுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.


பங்கஜகஸ்தூரி பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் இலவசமாக மருத்துவ சிகிச்சை அளிப்பதாக ஹரீந்திரன் தெரிவிக்கிறார்.

இந்நிறுவனத்தின் Pankajakasthuri Panchakarama மையம் ஆயுர்வேத சிகிச்சைக்காக பிரத்யேகமாக செயல்படுகிறது. ஆயுர்வேதத்தின் பழமையான நடைமுறைகள் கடுமையாக பின்பற்றப்படுகிறது.

கொரோனா பெருந்தொற்று மில்லியன் கணக்கானோரை கடுமையாக பாதித்துள்ள நிலையில் ஹரீந்திரனும் அவரது குழுவினரும் நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிப்பதற்காக ஏற்கெனவே உள்ள ZingiVir-H மருந்து தயாரிப்பு செயல்முறையில் சில மாற்றங்களைச் செய்து கோவிட்-19 தடுப்பிற்காக பிரத்யேகமாக தயாரிக்கும் பணியை ஆரம்பித்தனர். இந்த மருந்தின் ஆற்றலை நாடு முழுவதும் மருத்துவ ரீதியாக பரிசோதனை செய்தனர். சமீபத்தில் இந்த சோதனைகள் முடிவடைந்தன.

2020-ம் ஆண்டு ஜூன் மாத இறுதியில் பங்கஜகஸ்தூரி ஹெர்பல்ஸ் ஆயுஷ் அமைச்சகத்திற்கு ZingiVir-H மருந்து தொடர்பான அறிக்கையை சமர்ப்பித்தது. 42 நோயாளிகளிடம் நடத்தப்பட்ட சோதனையின் இடைக்கால அறிக்கை ஜுலை மாதம் 8-ம் தேதி சமர்ப்பிக்கப்பட்டது. ஜூலை மாதம் 24-ம் தேதி 116 நோயாளிகளின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. மருந்து உட்கொண்டு சராசரியாக ஐந்து நாட்களுக்குப் பின்னர் பிசிஆர் பரிசோதனையில் தொற்று இல்லை என நோயாளிகளுக்கு உறுதிபடுத்தப்பட்டதாக இந்நிறுவனம் தெரிவிக்கிறது.


தற்சமயம் மருத்துவ ரீதியான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ள 135 நோயாளிகளின் ஆய்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்பட உள்ளதாக இந்நிறுவனம் தெரிவிக்கிறது.

சவால்கள் மற்றும் போட்டி

இந்திய தொழில் கூட்டமைப்பு (CII), PricewaterhouseCoopers (PwC) இணைந்து நடத்திய சந்தை ஆய்வின்படி இந்திய ஆயுர்வேத சந்தை 2025ம் ஆண்டு 16 சதவீத ஆண்டு வளர்ச்சி விகிதத்துடன் வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் உள்நாட்டு சந்தையின் அளவு 30,000 கோடி ரூபாயாக உள்ளது. அத்துடன் கிராமப்புறங்களிலும் நகர்புறங்களிலும் ஆயுர்வேத சந்தை சிறப்பாக வளர்ச்சியடைந்து வருகிறது.


இந்நிறுவனம் முழுமையாக ஆராய்ச்சி சார்ந்தது என்கிறார் ஹரீந்திரன். ஆயுர்வேதத்தின் அடிப்படை கோட்பாடுகளைப் பயன்படுத்தி பாதுகாப்பான, பயனளிக்கக்கூடிய, நிலையான தீர்வுகளை உருவாக்குவதற்கான ஆர்&டி-யில் இந்நிறுவனம் சிறப்பு கவனம் செலுத்துகிறது.

“இமய மலையிலும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள மிகச்சிறந்த தோட்டங்களில் இருந்து மூலப்பொருட்கள் பெறப்படுகின்றன. அர்ப்பணிப்புடன்கூடிய அறிவியலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் அடங்கிய குழு மூலப்பொருட்களையும் இறுதி தயாரிப்புகளையும் பரிசோதனைக்கு உட்படுத்துகிறது. ஜீவக், ரிஷபக் போன்ற மூலிகைகள் அருகி வருவது சவாலாக உள்ளது,” என விவரித்தார்.

அதேசமயம் ஆயுர்வேத பொருட்களுக்கான தேவை அதிகரித்துள்ளது என்பதையும் சுட்டிக்காட்டினார். 1995 – 2005 காலகட்டத்தில் சந்தையில் தேவை குறைவாக இருந்தபோதும் இந்திய மருத்துவத்தில் மக்கள் ஆர்வம் காட்டி வருவதாக நிறுவனர் தெரிவிக்கிறார். பெரும்பாலான ஆயுர்வேத பிராண்டுகள் ஹெர்போமினரல்களாக இருக்கும் நிலையில் பங்கஜகஸ்தூரி ஹெர்பல்ஸ் பாரம்பரிய கேரள ஆயுர்வேத முறைகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

வருங்காலத் திட்டம்

பங்கஜகஸ்தூரி டிஜிட்டல் ரீதியாக செயல்படத் திட்டமிட்டுள்ளது. மின்வணிக தளங்கள் மூலம் தீவிரமாக சந்தைப்படுத்தி, டிஜிட்டல் மார்க்கெட்டிங் உத்திகளைப் பயன்படுத்த உள்ளது. இளம் தலைமுறையினர் மட்டுமின்றி மற்றவர்களையும் சென்றடையவேண்டும் என்று இந்நிறுவனம் விரும்புகிறது.


மிகப்பெரிய இ-ரிடெய்லர்கள் உடன் பார்ட்னர்ஷிப்பில் இணைந்தும் சொந்த போர்டல் மூலமாகவும் இதை செயல்படுத்த விரும்புகிறது. இதற்கான பிரச்சாரங்களை வட்டார மொழியிலேயே வழங்கி ஊக்குவிக்கவும் திட்டமிட்டுள்ளது. கூடுதலாக 120 பாரம்பரிய தயாரிப்புகளை உருவாக்குவது தொடர்பாகவும் ஹரீந்திரன் பணியாற்றி வருகிறார்.


ஆங்கில கட்டுரையாளர்: பாலக் அகர்வால் | தமிழில்: ஸ்ரீவித்யா