கிரிப்டோ வருங்காலத்தில் நம் வாழ்வின் முக்கியப் பகுதியாக இருக்கும்' - பேடிஎம் நிறுவனர் விஜய் ஷர்மா!
கிரிப்டோகரன்சி நம்முடன்தான் இருக்கிறது எனப்பேச்சு!
ஆன்லைன் பேமெண்ட் பரிவர்த்தனை தளம் Paytm ஐபிஓ வெளியீட்டுக்கு பிறகு முக்கியமான தலமாக மாறியிருக்கிறது. இதனிடையே, பேடிஎம் நிறுவனர் விஜய்சேகர் ஷர்மா ஐசிசியால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு மாநாட்டில் பேசினார். அப்போது டிஜிட்டல் நாணயமான கிரிப்டோ கரன்சி குறித்து விஜய் சேகர் சர்மா பேசினார்.
“வால் ஸ்ட்ரீட்டுக்கு சிலிக்கான் வேலியின் பதில்தான் கிரிப்டோகரன்சி. கிரிப்டோ கரன்சியில் உள்ள தொழில்நுட்பமானது கிரிப்டோகிராஃபி அடிப்படையில் செயல்படுவதால் எதிர்காலத்தில் கிரிப்டோ கரன்சி நம் அன்றாட வாழ்க்கையில் ஒரு முக்கியப் பகுதியாக இருக்கும். தற்போது இண்டெர்நெட் இருப்பது போல் இது இருக்கும்," என்று கிரிப்டோகரன்சிக்கு தனது ஆதரவை தெரிவித்தார்.
தொடர்ந்து பேசியவர், “கிரிப்டோகரன்சி குறித்து எனக்கு நேர்மறையான எண்ணங்கள் இருக்கிறது. இன்று வரையில் கிரிப்டோ கரன்சி நம்முடன்தான் இருக்கிறது. அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்கும் இணையம் போன்று சில ஆண்டுகளில் கிரிப்டோகரன்சி முக்கியத் தொழில்நுட்பமாக இருக்கும்,” என்றார்.
தற்போது, நாட்டில் கிரிப்டோகரன்சிகளைப் பயன்படுத்துவதற்கு குறிப்பிட்ட விதிமுறைகள் அல்லது தடை எதுவும் இல்லை. பிரதமர் நரேந்திர மோடி கடந்த வாரம் மூத்த அதிகாரிகளுடன் கிரிப்டோகரன்சிகள் குறித்த சந்திப்பை நடத்தி இருக்கிறார்.
வரும் காலங்களில் நடைமுறைச் சிக்கலைச் சமாளிக்க வலுவான ஒழுங்குமுறை நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது. ஒவ்வொரு அரசாங்கமும் குழப்பத்தில் உள்ளன.
“எனினும், ஐந்து ஆண்டுகளில், இது முக்கியத் தொழில்நுட்பமாக மாறும். ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படும் அதிகாரப்பூர்வ நாணயம் எளிதான கட்டமைப்புகளுடன் இருப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது, என்றார்.
பேடிஎம் தொடர்பாக விஜய்சேகர் சர்மா,
“பேடிஎம் வருமானம் ஒரு பில்லியன் டாலரை தாண்டியவுடன் வளர்ந்த நாடுகளுக்குக் கொண்டு செல்லப்படும். பேடிஎம் அனைவருக்கும் குறைந்த செலவில் நிதிச் சேவைகளை அடையும். பொதுமக்களுக்குச் செல்வது மூலதனம் மற்றும் திறமைக்கான அணுகலைக் கொடுக்கும் என்பதால் இது நிறைய உதவும். இந்திய முதலீட்டாளர்களை விட சர்வதேச முதலீட்டாளர்கள் இந்திய நிறுவனங்களைப் பற்றி நன்கு புரிந்து கொண்டுள்ளனர்," என்றுள்ளார்.