அழிந்து வரும் வெச்சூர் மாட்டினத்தை 30 ஆண்டுகளாக பாதுகாக்கும் சோசம்மா: 80 வயதில் பத்மஸ்ரீ விருது!

அரிய வகை மாட்டினமான வெச்சூர் மாடுகளை அழிவின் விளிம்பில் இருந்து பாதுகாத்ததற்காக கேரளாவைச் சேர்ந்த டாக்டர் சோசம்மாவிற்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

அழிந்து வரும் வெச்சூர் மாட்டினத்தை 30 ஆண்டுகளாக பாதுகாக்கும் சோசம்மா: 80 வயதில் பத்மஸ்ரீ விருது!

Saturday March 26, 2022,

2 min Read

மிக உயரிய விருதாகக் கருதப்படுபவை பத்ம விருதுகள். இந்த விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. 2022-ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் மொத்தம் 128 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில் கேரளாவைச் சேர்ந்த டாக்டர் சோசம்மா ஐபே என்பவருக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்துள்ளது. சோசம்மா கேரள கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி பணி ஓய்வு பெற்றவர்.

1

அரிய வகை மாட்டினமான வெச்சூர் மாடுகள் அழிவின் விளிம்பில் உள்ளன. இந்த வகை மாடுகளை பாதுகாப்பதற்காக இந்த விருது சோசம்மாவிற்கு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் கோட்டையம் மாவட்டத்தில் உள்ள வெச்சூர் என்கிற ஊரின் பெயரே இந்த இனத்திற்கு வைக்கப்பட்டுள்ளது.

சோசம்மாவின் வயது 80. இவர் கடந்த 30 ஆண்டுகளாக வெச்சூர் மாட்டினங்களைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

ஆரம்பகால போராட்டம்

அருகி வரும் வெச்சூர் மாட்டினத்தைப் பாதுகாக்க முடிவு செய்த சோசம்மா, ஒவ்வொரு கிராமமாக சென்று பார்வையிட்டார். வெச்சூர் மாடுகளைத் தேடினார். எங்காவது அரிதாக இந்த மாடுகளைப் பார்க்க நேர்ந்தால் உடனே அதன் உரிமையாளரை சந்தித்துப் பேசினார்.

கிராம மக்களிடம் இந்த மாட்டினத்தினால் கிடைக்கும் பலன்களையும் அழிவின் விளிம்பில் இருக்கும் இந்த நாட்டு இனங்களைப் பாதுகாப்பதன் அவசியத்தையும் விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

2

இதுபோல், இவர் மேற்கொண்ட ஒவ்வொரு நடவடிக்கையும் எளிதாக அமைந்துவிடவில்லை. பல வகையான எதிர்ப்புகளைக் கடந்து இந்த சேவையில் ஈடுபட்டு வந்துள்ளார். இவரது சேவையை அங்கீகரிக்கும் விதமாக இவருக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்துள்ளது.

இதுபற்றி டாக்டர் சோசம்மா செய்தியாளர்களிடம் பகிர்ந்துகொண்டபோது,

“இந்த கௌரவம் எனக்குக் கிடைக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இதுபோன்ற முயற்சிகளில் எத்தனையோ பேர் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுக்கும் இந்த கௌரவம் மகிழ்ச்சியளிக்கும்,” என்கிறார்.

வெச்சூர் மாட்டினங்களின் சிறப்பம்சம்

வெச்சூர் நாட்டு மாட்டினத்தைச் சேர்ந்தது. அதிகம் அறியப்படாத வெச்சூர் மாட்டினம் மிகக்குறைந்த எண்ணிக்கையிலேயே இருக்கின்றன. இவை குறைந்த உயரம் கொண்டவை. இருப்பினும் மற்ற மாட்டினங்களுடன் ஒப்பிடுகையில் அதிக அளவில் பால் கொடுக்கக்கூடியவை.

இதன் பாலில் சத்து அதிகம். அதுமட்டுமில்லாமல் இதில் மருத்துவ குணங்களும் அதிகம் உள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக இதற்கான பராமரிப்புச் செலவு மிகவும் குறைவு. தீவனமும் குறைவாகவே எடுத்துக் கொள்ளும்.

இத்தனை சிறப்பம்சங்கள் இருந்தும்கூட இந்த மாட்டினத்தின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வந்தது. கிட்டத்தட்ட 80-களில் அழிவின் விளிம்பில் இருந்தன.

வெச்சூர் மாடுகள் அருகி வருவதற்கான காரணங்கள்

1960-களில் பால் உற்பத்தியை அதிகரிக்க கால்நடைகளின் இனப்பெருக்க கொள்கைகளில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்தது கேரள அரசு. இதைத் தொடர்ந்து உள்நாட்டு மாட்டினங்களுடன் வெளிநாட்டு மாட்டினங்கள் கலக்கப்பட்டன. கலப்பினங்கள் எண்ணிக்கை அதிகரித்தன. வெச்சூர் உள்ளிட்ட நாட்டு இனங்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கின.

3

வெச்சூர் இனம் அருகிக் கொண்டே வருவதை உணர்ந்தார் சோசம்மா. சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்காமல் போனால் இந்த இனம் அழிவைச் சநதித்துவிடும் என்கிற வருத்தத்தில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

பல்கலைக்கழக மாணவர்களையும் இணைத்துக்கொண்டு மாநிலம் முழுவதும் கால்நடை வளர்ப்பவர்களை சந்தித்துப் பேசினார். வெச்சூர் மாடுகளைத் தேடினார். உரிமையாளர்களிடமிருந்து மாடுகளை வாங்கி பராமரித்து, இனப்பெருக்கம் செய்து திரும்ப ஒப்படைப்பதே அவரது திட்டம்.

ஒரு வருடத்தில் 24 மாடுகள் கிடைத்தன. அவை மண்ணுத்தி வேளாண் பல்கலைக்கழக பண்ணையில் பராமரிக்கப்பட்டன. அங்கு இனப்பெருக்கம் செய்யப்பட்டு எண்ணிக்கை அதிகரிக்கச் செய்வதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.

தமிழில் தொகுப்பு: ஸ்ரீவித்யா