கிரெடிட் கார்டு சேவையை அறிமுகப்படுத்தியது Paytm!
பேடிஎம் நிறுவனம் சிட்டிபேங்குடன் இணைந்து காண்டாக்ட்லெஸ் கிரெடிட் கார்டை அறிமுகம் செய்துள்ளது. அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் 1% கேஷ்பேக் சலுகையும் அறிவித்துள்ளது.
டிஜிட்டல் பரிவர்த்தனை முன்னணி நிறுவனமான பேடிஎம், சிட்டிபேங்க் இந்தியாவுடன் இணைந்து வழங்கும் பேடிஎம் ஃபர்ஸ்ட் கிரெடிட் கார்டு மூலம், கிரெடிட் கார்டு துறையில் நுழைந்துள்ளது.
சிட்டிபேங்கால் வழங்கப்படும் இந்த காண்டாக்ட்லெஸ் கார்டு, எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் 1 சதவீத கேஷ்பேக் சலுகை அளிக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. கேஷ்பேக், மாதந்தோறும் தானாக செலுத்தப்படும்.
மேலும், இந்த கார்டு இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளில் ஏற்கப்படும் என்றும், இதற்கு ஆண்டுக்கட்டணம் ரூ.500 என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆண்டுக்கு ரூ.50,000க்கு மேல் செலவு செய்தால் இந்த கட்டணமும் தள்ளுபடி செய்யப்படும். பயனாளிகள், சாப்பிடுவது, ஷாப்பிங் மற்றும் பயணம் உள்ளிட்டவற்றில் சிட்டி பிரிவிலேஜ் திட்டத்தின் கீழும் சலுகைகள் பெறலாம்.
பேடிஎம் செயலி மூலம் வாடிக்கையாளர்கள் இந்த கார்டுக்கு விண்னப்பிக்கலாம் என்றும், பேடிஎம் ஃபர்ஸ்ட் கார்டு பாஸ்புக் மூலம் சலுகைத் திட்டங்களை அறியலாம் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பேடிஎம் பர்ஸ்ட் கார்டு வாடிக்கையாளர்கள் முதல் நான்கு மாத காலத்தில் குறைந்தபட்சம் ரூ.10,000 செலவு செய்தால், அதே அளவு பேடிஎம் புரோமோ புள்ளிகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேடிஎம் பர்ஸ்ட் கார்டு பாஸ்புக் மூலம், பரிவர்த்தனைகளை அறிவதோடு, சலுகைகளையும் அறிந்து கொள்ளலாம்.
“பேடிஎம் ஃபர்ஸ்ட் கிரெடிட் கார்டை அறிமுகம் செய்ய சிட்டியுடன் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த கார்டு, எங்கள் வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் பரிவர்த்தனையில் மேலும் வசதியை அளிக்கும் மற்றும் பெரிய அளவிலான பரிவர்த்தனைகளை ரொக்கமில்லாமல் செலுத்த வழி செய்யும்,”
என்று அறிமுக விழாவில் பேடிஎம் தாய் நிறுவனமான ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் தலைவர் மற்றும் சி.இ.ஓ விஜய்சேகர் சர்மா கூறினார்.
பயனாளிகளின் கடன் தகுதியை கண்டறிய சிட்டியுடன் இணைந்து உருவாக்கிய முறை மூலம், பேடிஎம் நிறுவனம் பயனாளிகளை கண்டறியும். கிரெடிட் வரலாறு இல்லாத தகுதியுடைய வாடிக்கையாளர்களை சென்றடைய இது உதவும்.
பயனாளிகளின் டிஜிட்டல் பழக்க வழக்கம் அடிப்படையில் இந்த கார்டு அளிக்கப்படும் என்றும், நிறுவனம் மார்ச் மாதம் அறிமுகம் செய்த பயனாளிகளுக்கான லாயல்ட்டி திட்டமான பேடிஎம் ஃபர்ஸ்ட் திட்டத்திற்கும் இதற்கும் தொடர்பு இல்லை என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
“கிரெடிட் கார்டு துறையில் எங்களுக்கு உள்ள அனுபவத்தை டிஜிட்டல் வாடிக்கையாளர் பரப்பில் விரிவாக்க ஃபர்ஸ்ட் கார்டு வழி செய்கிறது. நிறுவனங்களுக்கு இடையிலான தொடர்பான தொடங்கிய இந்த உறவு, அனைத்து சிட்டி பிரான்சைஸ்களுக்கும் இடையிலான ஆழமான உறவாக உருவாகி இருக்கிறது,” என்று சிட்டி குளோபல் நுகர்வோர் வங்கிச்சேவை சி.இ.ஓ ஸ்டீபன் பேர்ட் கூறினார்.
ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் மற்றும் சிட்டி இடையிலான உறவு நீண்ட காலமாக இருந்து வருகிறது. 2009 ல் சிட்டியின் வர்த்தக வங்கி வாடிக்கையாளரான ஒன் 97 கம்ப்யூனிகேஷன்ஸ் துவங்கியது. தொடர்ந்து, 2015 பிப்ரவரியில் ஆண்ட் பைனான்சியல் முதலிடு மற்றும் 2016 ல் அலிபாபா மற்றும் ஆண்ட் பைனான்சியல் முதலீடுகளுக்கு ஆலோசகராக சிட்டி செயல்பட்டது.
2016 நவம்பரில், பேடிஎம் வாலெட், சிட்டிபேங்க் ஆன்லைன் மற்றும் மொபைல் செயலியுடன் ஒருங்கிணைக்கப்பட்டது. இதன் மூலம் சிட்டி வாடிக்கையாளர்கள் பேடிஎம் வாலெட்டிற்கு ஆன்லைனில் டாப் அப் செய்து கொள்ளலாம். தொடர்ந்து இரு நிறுவனங்களும் இணைந்து டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அளித்து வருகின்றன.
பேடிஎம்-ன் வங்கிச்சேவை பிரிவான, பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்க், காண்டாக்ட்லெஸ் டெபிட் கார்டுகளை வழங்க விசாவுடன் பேச்சு நடத்தி வருவதாக யுவர் ஸ்டோர் செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், வணிகர்களுக்கான விற்பனை டெர்மினல்களை அளிக்கவும் விசாவுடன் பேச்சு நடத்தி வருகிறது.
ஆங்கில கட்டுரையாளர்: தாருஷ் பல்லா | தமிழில்; சைபர்சிம்மன்