'கார்முகில்', 'தென்றல்', 'நிறைமதி' - 105 தெருக்களுக்கு தமிழ் பெயர் சூட்டிய ஊராட்சித் தலைவி!
தொலைந்துபோன அத்திப்பட்டி பற்றி தெரியும், உயிர்பித்துள்ள ஆத்திப்பட்டி பற்றி தெரியுமா?
'தல'யின் 'சிட்டிசன்' படத்தில் அத்திப்பட்டி எனும் கிராமமே தொலைந்து போயிருக்கும். அப்படியொரு கிராமம் நிஜத்திலும் இருக்குதோ? இல்லையோ?. ஆனாலும், தமிழக மக்கள் அனைவரும் அத்திப்பட்டி பற்றி நன்கு அறிவர். அப்பேர்ப்பட்ட, அத்திப்பட்டியை விட 'ஆத்திப்பட்டி' என்றொரு கிராமம் படு பேமசாகியுள்ளது. பக்சே, இது ரீல்கிராமமில்லை. ரியல் கிராமம்.
கிராமங்கள் என்றாலே அழகு என்ற நிலையில், ஆத்திப்பட்டியில் உள்ள ஒவ்வொரு தெருக்களும் தமிழ் பெயர்களால் அடையாளப்படுத்தப்பட்டு கிராமத்திற்கு எக்ஸ்ட்ரா அழகு சேர்த்துள்ளன.
'செங்கனி வீதி', 'பால்மதி வீதி', 'கார்த்திகை வீதி', 'காவேரி வீதி' என எழில் கொஞ்சும் தமிழ் வார்த்தைகளால் தெருக்களுக்கு பெயர் சூட்டியுள்ளார் 'ஆத்திப்பட்டி' ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டைக்கு அருகிலுள்ளது ஆத்திப்பட்டி ஊராட்சி. ஆத்திபட்டி, கட்டகஞ்சம்பட்டி, லட்சுமி நகர், நாராயணபுரம், ஜெயராம் நகர், என்ஜிஓ காலனி ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது ஆத்திப்பட்டி ஊராட்சி. நகரத்தின் விரிவாக்கப்பகுதிகள் ஆத்திப்பட்டி ஊராட்சியின் எல்லைக்குள்ளும் வருவதால் குடியிருப்புகள் அதிகரித்து வருகின்றன. இங்கு ஏராளமான தெருக்கள் புதிதாக உருவாகியுள்ளன. ஏற்கனவே உள்ள வீதிகளுக்கு பெயர்கள் உள்ள நிலையில்,
ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ள வீதிகளுக்கு பெயர் இல்லாமல், அங்குள்ள அடையாளங்களை வைத்து அழைக்கப்பட்டு வந்தன. பெயர் இல்லாத தெருக்களால், அட்ரஸ் எழுதுவதற்கும் சிரமப்பட்டு வந்துள்ளனர் அங்குள்ள குடியிருப்புவாசிகள். ஊர் மக்களைவிட, தெருதெருவாய் அலையும் போஸ்ட்மேன் நிலை எவ்வளவு மோசமாகயிருக்கும்? ஆனாலும், இந்நிலையே நீடித்துவந்துள்ளது.
ஆத்திப்பட்டி ஊராட்சித் தலைவர் 105 தெருக்களுக்கு தமிழ் மாதங்கள், மலர்கள், கிழமைகள், நதிகளின் பெயர்களைச் சூட்டி பெயர் பலகை வைத்துள்ளார். அத்துடன், தெரு பெயரை கூகுளில் தேடினாலே, அடையாளம் காணவும் வழி செய்துள்ளார்.
வானவில், கார்முகில், நிறைமதி, கங்கை, யமுனை என ஒவ்வொரு தெருவில் அமைக்கப்பட்டுள்ள புதிய பெயர்பலகைகள் காண்பதற்கே அழகாய் காட்சியளிக்கின்றன. அதன் புகைப்படங்கள் இணையத்தில் பரவ, பலரும் பாராட்டிவருகின்றன. இதுகுறித்து ஆத்திப்பட்டி ஊராட்சித்தலைவர் ராஜேஸ்வரி விகடனிடம் அளித்த பேட்டியில்,
"அருப்புக்கோட்டை நகரின் விரிவாக்கப்பகுதிக்குள் எங்கள் ஊராட்சியும் வருவதால் குடியிருப்புகள் அதிகம் உருவாகிவிட்டன. ஆனாலும், தெருக்களுக்கு பெயரில்லாமலே மக்கள் சிரமத்தை அனுபவித்து வந்தனர். அதனை போக்கும்வகையில், 105 தெருக்களுக்கு தமிழ் மாதங்கள், நதிகள், மலர்கள் என அனைவரும் விரும்பும் வகையில் பெயர்கள் வைத்தோம். அதிலும் குழப்பம் வராத வகையில் ஒரு பக்கம் முழுவதும் மாதங்களின் பெயர்கள், மற்றொரு பக்கம் காலங்கள், நதிகள், மலர்கள் என்று சுலபமாக முகவரி கண்டுபிடிக்கும் வகையில் பெயர் வைத்துள்ளோம்.”
ஏற்கெனவே ஊராட்சியில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளைச் சிறப்பாகச் செய்துள்ளேன். இப்போது வீதிகளுக்குத் தமிழில் பெயர் சூட்டியதை பல்வேறு ஊர்களில் உள்ளவர்களும் பாராட்டுகிறார்கள். எங்கள் ஊராட்சியில் உள்ள வீதிகளின் பெயர்களை கூகுளில் தேடினால் முகவரியை கண்டுபிடிக்கும் வகையில் ஏற்பாடு செய்துள்ளோம்" என்றுள்ளார்.
தகவல் மற்றும் படங்கள் உதவி : விகடன் | தொகுப்பு: ஜெய்ஸ்ரீ