பங்குச் சந்தையில் முதல் நாள் 9% சரிவு: கண்கலங்கிய Paytm நிறுவனர் விஜய் சேகர் ஷர்மா!
சரிவை சந்தித்த பேடிஎம் பங்குகள்!
டிஜிட்டல் பேமெண்ட் பரிவர்த்தனைத் தளமான பேடிஎம் நிறுவனத்தின் தலைமை நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் (பேடிஎம்) நிறுவனம் கடந்த நவம்பர் 8 அன்று பங்கு வெளியீட்டினை செய்தது. இது நவம்பர் 10 அன்று முடிவடைந்தது. இதன் பங்கு ஒதுக்கீடானது நவம்பர் 15, 2021 அன்று செய்யப்பட்டது. இதே டிமேட்களுக்கு பங்கு ஒதுக்கீடு நவம்பர் 17, 2021 அன்று செய்யப்பட்ட நிலையில் இன்று பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டது.
இதனிடையே, பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் ஷர்மா இன்று மும்பை பங்குச் சந்தையில் பேசும்போது உணர்ச்சிவசப்பட்டு அழுதுவிட்டார். பிஎஸ்இ பங்குச் சந்தையில் நடந்த விழாவில் தேசிய கீதம் இசைக்கத் தொடங்கியதும், ஷர்மாவின் கண்கள் கலங்கின.
“தேசிய கீதத்தைக் கேட்கும்போதெல்லாம் தனக்கு எவ்வளவு கண்ணீர் வருகிறது..." என்றுகூறி இந்தியில் தனது உரையைத் தொடங்கினார்.
”நீங்கள் தேசிய கீதத்தைப் பாடியதால்தான் எனக்கு இது நேர்ந்தது. தேசிய கீதத்தில் "பாரத் பாக்ய விதாதா" என்ற வரிகள் தன்னை மூழ்கடித்தது. இந்த வார்த்தைகளைச் சொன்னாலே என் கண்களில் கண்ணீர் வருகிறது," என்று தனது உரையின் போது கண்ணீர் மல்க பேசினார்.
தொடர்ந்து பேசியவர்,
“இவ்வளவு அதிக விலையில் எப்படி பணம் திரட்டுவது என்று மக்கள் என்னிடம் கேட்கிறார்கள். நான் அவர்களிடம் கூறுவது இதுதான். நான் ஒருபோதும் பணம் திரட்டவில்லை. பணத்தை சேகரிக்கிறேன். அவ்வளவு தான்," என்று பேசினார்.
இந்த விழாவில் ஷர்மாவுடன் அவரின் மகனும் உடனிருந்தார். இந்த வீடியோ காட்சிகள் வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகின்றன.
இதனிடையே, இன்று பங்குச்சந்தைகளில் பேடிஎம் பட்டியலிடப்பட்ட நிலையில், ஏமாற்றமளிக்கும் வகையில் சரிவை சந்தித்தது.
கிட்டத்தட்ட 9 சதவீதம் சரிவை சந்தித்தது. தேசிய பங்குச் சந்தையில் ரூ.1,950-ல் தொடங்கப்பட்ட இந்தப் பங்கு வெளியீட்டு விலை ரூ.2,150க்கு எதிராக, பிஎஸ்இ-யில் ரூ.1,955 ஆக இருந்தது.
முன்னதாக தனது ட்டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட விஜய் சேகர் ஷர்மா ,
"நம் கிரிக்கெட் அணியின் மனநிலையை இப்போது உணர்கிறேன். பல மெசேஜ்கள், வாழ்த்துகள் மற்றும் அன்பான வார்த்தைகள். இளம் இந்தியாவின் நம்பிக்கைகளையும் எதிர்பார்ப்புகளையும் பங்குச் சந்தைக்கு எடுத்துச் செல்வது போல் உணர்கிறேன். நிலக்கரியில் இருந்து ஃபின்டெக் வரை, 11 ஆண்டுகளில் - இந்தியா மாறிவிட்டது. ஒவ்வொரு பேடிஎம் வாடிக்கையாளர்களுக்கும், நீங்கள் இந்தியாவை நன்றாக மாற்றியுள்ளீர்கள்," என்று பதிவிட்டிருந்தார்.