அம்மாவின் கருவறைச் சூழலில் பச்சிளம் குழந்தைகளை தூங்கவைக்கும் மெத்தைகள்!
மும்பையைச் சேர்ந்த NapNap நிறுவனம் அம்மாவின் கருவறையில் இருப்பது போன்ற உணர்வை குழந்தைக்கு ஏற்படுத்தும் வகையில் மெத்தைகளை வடிவமைக்கிறது.
புதிதாக குழந்தைப் பெற்றெடுத்த பெற்றோர்களுக்கு தூக்கம் மிகவும் அவசியம். அவர்களுக்கு மட்டுமின்றி பச்சிளம் குழந்தைக்கும் தூக்கம் மிகவும் முக்கியம். குழந்தையின் அறிவாற்றல் மேம்பட நல்ல தூக்கம் அவசியம். இதை அளிப்பதில் மெத்தைகள் முக்கியப் பங்கு வகிக்கிற்து.
இதை வழங்குவதற்காக சமீர் அகர்வால், ஸ்வப்னில் ராவ், அனீஷ் பிள்ளை, தீபக் குப்தா ஆகியோர் 2017-ம் ஆண்டு 'நேப்நேப்' (NapNap) தொடங்கினார்கள். மும்பையைச் சேர்ந்த இந்த ஸ்டார்ட் அப் அம்மா மற்றும் குழந்தை பராமரிப்புப் பிரிவில் கவனம் செலுத்துகிறது.
இந்நிறுவனத்தின் முக்கிய தயாரிப்பு நேப்நேப் மேட் (NapNap Mat). இது குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்ட மெத்தை. இதை எளிதாகத் தூக்கிச் செல்லலாம். இந்த மெத்தைகள் அம்மாவின் கருவறை போன்றே வடிவமைக்கப்படுகிறது.
குழந்தைகளை ஒரு சில நிமிடங்களிலேயே தூங்கவைக்கும் விதத்தில் இதமான அதிர்வுகளுடனும் ஒலியுடனும் இந்த மெத்தை வடிவமைக்கப்பட்டுள்ளது. நேப்நேப் மேட் குழந்தைகளின் சுவாசத்தை சீராக்குவதாகவும் குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு மூச்சுத்திறணல் ஏற்படுவதை 50 சதவீதம் வரை குறைப்பதாகவும் ஹார்வர்ட் மருத்துவ மையம் மற்றும் பெத் இஸ்ரேல் டெக்கானஸ் மருத்துவ மையம் நடத்திய மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளது.
நேப்நேப் தொடக்கம்
சமீர் விற்பனை மற்றும் வணிக மேம்பாடு, செயல்பாடுகள் மற்றும் நிதி ஆகிய பிரிவுகளில் 12 ஆண்டுகால அனுபவமிக்கவர். நேப்நேப் மேட் நிறுவுவதற்கு முன்பு Art Should Tempt and ClassHopr என்கிற நிறுவனத்தின் இணை நிறுவனராக இருந்தார். ஸ்வப்னில், தீபக் மற்றும் அனீஷா இவருடன் இந்த நிறுவனத்தில் இணைந்துள்ளனர்.
இந்தப் பிரிவில் வணிக முயற்சியைத் தொடங்கவேண்டும் என்கிற எண்ணம் முதலில் சமீருக்கும் ஸ்வப்னிலுக்கும் ஏற்பட்டது. இவர்களது நண்பர் ஒருவருக்கு குறைப் பிரசவத்தில் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தை தூக்கமின்றி அவதிப்பட்டத்தைக் கண்ட பின்னரே இவர்களுக்கு இந்த எண்ணம் தோன்றியுள்ளது.
“நாங்கள் இந்தப் பிரச்சனைக்கு தீர்வுகாண விரும்பினோம். பொறியாளர்களாகவும் பிராடக்ட் டெவலப்பர்களாகவும் இருந்ததால் உடனே பணியைத் தொடங்கினோம். சில மாதங்களிலேயே நேப்நேப் மேட் முதல் முன்வடிவத்தை உருவாக்கினோம். தயாரிப்பு நன்றாக இருந்தது. குழந்தையை ஆற்றுப்படுத்தி ஆரோக்கியமான தூக்கத்தை வரவழைத்தது. கிட்டத்தட்ட நூறு பெற்றோர்களின் கருத்துக்களை கேட்டறிந்தோம். அதற்கேற்றவாறு மாற்றியமைத்து நேப்நேப் மேட் தயாரிப்பை அறிமுகப்படுத்தினோம்,” என்றார் சமீர்.
யோசனைக்கு முறையான வடிவம் கிடைத்ததை அடுத்து பொறியியல் படிப்பில் உடன் படித்த மாணவர்களான தீபக் குப்தா, அனீஷா பிள்ளை ஆகியோரை அணுகினார்கள். இவர்கள் குழுவாக ஒன்றிணைந்து தயாரிப்பின் வடிவமைப்பை ஆராய்ந்து அறிவியல்பூர்வமான தரவுகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிப்பை உருவாக்கத் தீர்மானித்தனர்.
“நாங்கள் நான்கு பேரும் ஒன்றிணைந்து முதலில் சில முன்வடிவங்களை உருவாக்கினோம். முதல்கட்டமாக சந்தையில் சோதனை செய்தோம். அதன் பிறகே முதல் ஊழியரை பணியமர்த்தினோம். சந்தையில் வரவேற்பு கிடைத்த பிறகு தயாரிப்பு வேகமாக விற்பனையாகத் தொடங்கியது,” என்றார் சமீர். தற்போது 16 பேர் அடங்கிய குழுவாக செயல்பட்டு வருகின்றனர்.
சவால்கள்
நாட்டில் எத்தனையோ மெத்தை பிராண்டுகள் இருப்பினும் குழந்தைகளுக்கான வைப்ரேஷன் – தெரபி சார்ந்த மெத்தைகள் என்பது இந்திய சந்தைக்கு புதிது.
எனவே புதிய பிரிவை உருவாக்கி, மக்களுக்கு நேப்நேப் மேட் பயன்படுத்துவதால் கிடைக்கக்கூடிய நன்மைகள் குறித்து எடுத்துரைப்பது ஆரம்ப நாட்களில் மிகப்பெரிய சவாலாக இருந்தது.
இதுதவிர நுகர்வோர் தயாரிப்பு நிறுவனங்களுக்கான முதலீடு அதிகம். அதிலும் புத்தம் புதிய தயாரிப்பை அறிமுகப்படுத்தி ஆர்&டி-க்கான ஏற்பாடுகளையும் செய்யவேண்டும் எனும்போது முதலீடு அதிகம் தேவைப்படும். இதனால் குறைந்தபட்ச தயாரிப்பை (Minimum Viable Product-MVP) உருவாக்குவதற்கான முதலீடு சவாலாக இருந்தது என்கிறார் சமீர்.
தயாரிப்பு
குழந்தை அம்மாவின் கருவறையில் இருக்கும்போது அம்மாவின் உடலில் ஏற்படும் ஒலிகளும் அதிர்வுகளும் குழந்தைக்கு பரிச்சயமாக இருக்கும். குழந்தை பிறந்ததும் திடீரென்று பரிச்சயமில்லாத ஒரு இடத்தை எதிர்கொள்ள நேர்கிறது.
வெப்பநிலை, அசைவு போன்றவற்றில் காணப்படும் சிறிய மாற்றங்களும் பரிச்சயமற்ற ஓசைகளும் குழந்தைக்கு அசௌகரியமான உணர்வை ஏற்படுத்தும். உடனே குழந்தை பயத்தில் அழத் தொடங்குகிறது. இதனால் தூங்குவதிலும் குழந்தை சிரமத்தை சந்திக்கிறது.
“நேப்நேப் மேட் உங்கள் குழந்தையை தூங்கவைப்பதில் மேஜிக் செய்கிறது. உங்கள் குழந்தைக்கு கருவறையில் இருப்பது போன்ற சூழலை ஏற்படுத்திக் கொடுக்க இதமான ஒலி எழுப்பப்படுகிறது. குழந்தையின் சுவாசத்தை சீராக்க உதவுகிறது. இது குழந்தையை அமைதிப்படுத்துகிறது. பெரியவர்கள் அருகில் இருக்கும்போது குழந்தைக்கு பாதுகாப்பான உணர்வு ஏற்படுகிறது. இதனால் குழந்தை ஆழ்ந்து நிம்மதியாகத் தூங்குகிறது,” என்று சமீர் விவரித்தார்.
ஒரு வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இந்தத் தயாரிப்பு சிறந்தது. இந்த மேட் சுவாசத்தை சீராக்கி சிறப்பாக தூங்க உதவுகிறது. வயிற்று வலியைக் குறைக்கிறது. பயணம் செய்யும்போது எளிதாக எடுத்துச் செல்ல முடியும். பாதுகாப்பானது. ஸ்ட்ராலர், கார் இருக்கை, தொட்டில் போன்ற இடங்களில் பயன்படுத்தலாம்.
சந்தை மற்றும் சான்றிதழ்கள்
இந்தியாவில் படுக்கைகள் சந்தை 10,000 கோடி ரூபாயாக மதிப்பிடப்படுவதாக ஊடக அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. Cuddl, SleepyCat, Wink&Nod, Sunday Mattress போன்ற ஸ்டார்ட் அப்கள் இந்தப் பிரிவில் செயல்படுகின்றன. இந்நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை உருவாக்க நவீன தொழில்நுட்பத்தையும் மூலப்பொருட்களையும் பயன்படுத்துவதில் தீவிரம் காட்டுகின்றன. The Sleep Company, Wakefit போன்றவை இந்தப் பிரிவில் செயல்படும் மற்ற நிறுவனங்கள் ஆகும்.
அமேசான், ஃப்ளிப்கார்ட், ஸ்நாப்டீல், ஷாப்க்ளூஸ் போன்ற சந்தைப்பகுதிகளும் பிராண்டட் மற்றும் பிராண்ட் அல்லாத மெத்தைகளை வழங்கி வருகிறது.
“வருங்காலத்தில் குழந்தை வளர்ப்பிற்கு உதவும் வகையில் நேப்நேப் தொழில்நுட்பம் மற்றும் தரவுகள் கொண்டு புதுமையான தயாரிப்பை உருவாக்கியுள்ளது,” என்றார் சமீர்.
நேப்நேப் மேட் ISO 9001-2015 சான்றிதழ் பெற்றுள்ளது. அத்துடன் CPSC-அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகமும் சான்றிதழ் வழங்கியுள்ளது. 0-2 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு பாதுகாப்பானது. குழந்தைகளுக்கான பிரிட்டிஷ் பாதுகாப்பு தரநிலைகளுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
வருவாய் மற்றும் எதிர்காலத் திட்டம்
இந்நிறுவனம் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் ஆண்டில் பத்து மடங்கு வளர்ச்சியடைந்ததாக தெரிவிக்கிறது.
இதன் சராசரி ஆர்டர் மதிப்பு 2,000 ரூபாய். வருடாந்திர வருவாய் 2 கோடி ரூபாய். இதன் மொத்த லாபம் 66 சதவீதம்.
நேப்நேப் தயாரிப்புகள் அமேசான், ஃபர்ஸ்ட்க்ரை உட்பட இந்தியாவின் அனைத்து ஆன்லைன் சந்தைப்பகுதிகளிலும் கிடைக்கின்றன. துபாய், ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளிலும் விரிவடைந்துள்ளது. விரைவில் யூகே-வில் செயல்பட திட்டமிட்டுள்ளது.
“நாங்கள் நேரடியாக வாடிக்கையாளர்களுக்கே விற்பனை செய்வதால் உயர்தர தயாரிப்புகளை குறைந்த விலையில் வழங்கமுடிகிறது,” என்கிறார் சமீர்.
நேப்நேப் நிறுவனம் ThinQbate Venture LLP, Hatcher Plus போன்ற நிறுவனங்களின் தலைமையில் ப்ரீ-சீரிஸ் நிதிசுற்று திரட்டியுள்ள்து. சீட் சுற்று நிதியை இந்நிறுவனம் எதிர்நோக்கியுள்ளது.
அடுத்த சில ஆண்டுகளில் குழந்தைகளுக்கான மிகப்பெரிய மெத்தை நிறுவனமாக உருவாகத் திட்டமிட்டுள்ளது. தொழில்நுட்பம், வடிவமைப்பு, புதுமை ஆகியவற்றைப் பயன்படுத்தி உலகம் முழுவதும் உள்ள குழந்தைகளை அமைதிப்படுத்துவதே இந்நிறுவனத்தின் நோக்கம். நேப்நேப் மேட், நேப்நேப் நர்சிங் கவர் ஆகிய தயாரிப்புகளை இந்திய சந்தையில் அதிகளவில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.
“அரபு நாடுகள், யூகே, ஆஸ்திரேலியா ஆகிய சந்தைகளில் செயல்பட்டு நேப்நேப் மேட் அடுத்த வெர்ஷனை அறிமுகப்படுத்தி குழந்தைகளுக்கான மற்ற கூடுதல் தயாரிப்புகளையும் அறிமுகப்படுத்த உள்ளனர்,” என்றார் சமீர்.
ஆங்கில கட்டுரையாளர்: சிந்து காஷ்யப் | தமிழில்: ஸ்ரீவித்யா