Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

நிம்மதியான தூக்கத்தைத் தரும் மெத்தைகள் தயாரிக்கும் ’தி ஸ்லீப் கம்பெனி’

மும்பையைச் சேர்ந்த இந்நிறுவனம் சௌகரியமான உணர்வைத் தரக்கூடிய ஸ்மார்ட் கிரிட் மெத்தைகளைத் தயாரிக்கிறது.

நிம்மதியான தூக்கத்தைத் தரும் மெத்தைகள் தயாரிக்கும் ’தி ஸ்லீப் கம்பெனி’

Wednesday January 01, 2020 , 3 min Read

பிரியங்கா சலோத், ஹர்ஷில் சலோத் தம்பதிக்கு குழந்தை பிறந்தது. பச்சிளம் குழந்தைகள் இருக்கும் பெரும்பாலான வீடுகளில் பெற்றோர்களுக்கு நல்ல உறக்கம் என்பது பிரச்சனையாகவே இருக்கும். இவர்களது சராசரி தூக்க நேரம் ஆறு மணி நேரத்தில் இருந்து வெறும் நான்கு மணி நேரமாக குறைந்துவிடுகிறது.  


கிடைக்கும் குறைவான நேரத்தில் நன்றாக தூங்கவேண்டும் என்பதற்காக பிரியங்காவும் ஹர்ஷிலும் புதிதாக மெத்தை வாங்க எண்ணினர். ஆனால் அவர்களுக்கு சரியான மெத்தை கிடைக்கவில்லை. 2017-ம் ஆண்டு இவர்கள் ’தி ஸ்லீப் கம்பெனி’ (The Sleep Company) தொடங்க இதுவே காரணமாக அமைந்தது.

1

இந்த ஸ்டார்ட் அப்பின் ஸ்மார்ட் கிரிட் மெத்தையில் மெமரி ஃபோம், ஸ்பிரிங், காயர், லேட்டக்ஸ் போன்றவை இல்லை. சௌகரியமான உணர்வை வழங்குவதுடன் வலி நிவாரணியாகவும் இருக்கக்கூடிய இந்த தொழில்நுட்பத்திற்கான காப்புரிமை நிலுவையில் உள்ளது.

”தரமான, சௌகரியமான தயாரிப்புகளைப் பொறுத்தவரை இந்திய சந்தைக்கும் வளர்ந்த சந்தைக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி இருப்பதை உணர்ந்தோம். படுக்கை மற்றும் மெத்தைப் பொருட்களில் இங்கு அதிக கவனம் செலுத்தப்படுவதில்லை. எனவே நாங்கள் ஆராய்ச்சி நிறுவனங்களைத் தொடர்பு கொண்டோம். இந்த தொழில்நுட்பத்தில் பணியாற்ற டிஆர்டிஓ-வைச் சேர்ந்த நிபுணர்களையும் அறிவியலாளர்களையும் இணைத்துக் கொண்டோம். இரண்டாண்டு ஆய்விற்குப் பிறகு ஸ்மார்ட் கிரிட் மெத்தைகள் உருவானது,” என்றார் பிரியங்கா.

புதிய தொழில்நுட்பத்தையும் ஆரம்பநிலையில் இருந்து புதிய தயாரிப்பையும் உருவாக்குவது மிகப்பெரிய சவாலாக இருந்தது. இக்குழுவினர் தங்களது சேமிப்பில் இருந்து 1.5 கோடி ரூபாயை முதலீடு செய்து ஸ்மார்ட் கிரிட் மெத்தை தயாரிப்பதற்கான தொழிற்சாலையை அமைத்தனர்.

குழு உருவாக்குதல்

பிரியங்காவும் ஹர்ஷிலும் ஐஐஎம் கொல்கத்தா பட்டதாரிகள். பிரியங்கா மார்கெட்டிங் பின்னணி கொண்டவர். P&G நிறுவனத்தில் மார்க்கெட்டிங் பிரிவில் பணியாற்றியுள்ளார். P&G இந்தியாவின் பேம்பர்ஸ், ஏரியல், டைட் போன்ற பல்வேறு பிராண்டுகளின் வணிக நடவடிக்கைகளுக்கு தலைமைப் பொறுப்பு வகித்துள்ளார். ஹர்ஷில் நிதி மற்றும் மேலாண்மை பின்னணி கொண்டவர். அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான், கனடா ஆகிய நாடுகளில் பணியாற்றியுள்ளார்.

இந்தத் தம்பதி தங்களது நெருங்கிய வட்டத்தின் உதவியுடன் டாக்டர் வி திரிபாதியை இணைத்துக் கொண்டனர். இவர் ஸ்மார்ட் கிரிட் தொழில்நுட்பத்திற்கு மூளையாக செயல்பட்டார். இவர் தற்போது ’தி ஸ்லீப் கம்பெனி’ ஆர்&டி பிரிவிற்கு தலைமை வகிக்கிறார். இவர் ஒரு ராக்கெட் விஞ்ஞானி. டிஆர்டிஓ-வில் நாற்பதாண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்துள்ளார். புதுமையான தயாரிப்புகளை உருவாக்க பல்வேறு நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தினார்.


மேலும் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக மெத்தைத் துறையில் பணியாற்றிய அனுபவம் கொண்ட அபிஷேக் சிங்கை இணைத்துக்கொண்டனர். தற்சமயம் 20 பேர் அடங்கிய குழுவாக செயல்படுகின்றனர்.

தயாரிப்பு

ஸ்மார்ட் கிரிட் உடலின் வடிவத்திற்கு ஏற்றாற்போல் மாறும் அமைப்பு கொண்டது. இந்தியர்களின் சராசரி உடல் எடையைக் கருத்தில் கொண்டு இது வடிவமைக்கப் பட்டுள்ளது. சௌகரியமான உணர்வை ஏற்படுத்த இடுப்பு, தோள்பட்டை போன்ற உடலின் சிறு பாகங்களில் வளைந்துகொடுக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டிருந்தாலும் முதுகுத்தண்டு பகுதியில் வளையாமல் உறுதியாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் உடல் வலி குறைகிறது.

”இதன் முன்வடிவம் தயாரானதும் தயாரிப்பிற்கான தொழிற்சாலையை அமைப்பது மிகப்பெரிய பணியாக இருந்தது. இது முற்றிலும் புதிய தொழில்நுட்பம் என்பதால் துறையில் ஏற்கெனவே இருந்த இயந்திரங்களைப் பயன்படுத்த முடியவில்லை. எனவே நாங்கள் அமைத்த குழு ஒன்று ஸ்மார்ட் கிரிட் மெத்தை தயாரிப்பதற்கு ஏற்ப அனைத்து இயந்திரங்களையும் மாற்றியமைக்கும் பணியில் ஓராண்டு வரை ஈடுபட்டது,” என பிரியங்கா விவரித்தார்.

தற்போது ஆன்லைனில் விற்பனையாகி வரும் ’தி ஸ்லீப் கம்பெனி’ மெத்தைகள் அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் தளங்களில் கிடைக்கிறது.

விலை மற்றும் சந்தை

இந்த ஸ்டார்ட் அப் இரண்டு வகையான மெத்தைகளை வழங்குகிறது. தி ஸ்லீப் கம்பெனி 1.0 வகை மெத்தை 15,000 ரூபாய் முதல் 35,000 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் 2.0 வகை மெத்தை 25,000 ரூபாய் முதல் 45,000 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


இதுவரை நிறைவு செய்துள்ள ஆர்டர் எண்ணிக்கை குறித்த தகவல்களை குழுவினர் பகிர்ந்துகொள்ளவில்லை. ஆனால் சந்தையில் அறிமுகமானதில் இருந்து கடந்த மூன்று மாதங்களில் 500 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது.


தற்சமயம் தி ஸ்லீப் கம்பெனி Sequoia ஆதரவளிக்கும் Wakefit நிறுவனத்துடன் போட்டியிடுகிறது. இந்தியாவின் மெத்தை சந்தை மதிப்பு 10,000 கோடி ரூபாயாக மதிப்பிடப்படுகிறது. Cuddl, SleepyCat, Wink&Nod, Sunday Mattresses போன்ற ஸ்டார்ட் அப்கள் தங்களது தயாரிப்புகளை உருவாக்க நவீன தொழில் நுட்பங்களையும் மூலப் பொருட்களையும் பயன்படுத்துகிறது. பிரியங்கா வருங்கால திட்டம் குறித்து கூறும்போது,

“மெத்தை உள்ளிட்ட தயாரிப்புகளுக்கான முழுமையான தீர்வை வழங்க விரும்புகிறோம். எங்களது உற்பத்தியை விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளோம். அத்துடன் ஸ்மார்ட் கிரிட் தொழில்நுட்பத்தைக் கொண்டு தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தக்கூடிய கூடுதல் தயாரிப்புகளை அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம்,” என்றார்.

ஆங்கில கட்டுரையாளர்: சிந்து காஷ்யப் | தமிழில்: ஸ்ரீவித்யா