செல்லப்பிராணிகளுக்கு ஏற்ற உணவு வகைகளை வழங்கும் Canine India
பதப்படுத்தும் பொருட்கள் ஏதும் சேர்க்காமல் செல்லப் பிராணிகளுக்கு உகந்த தரமான உணவுப் பொருட்களை வழங்குகிறது Canine India நிறுவனம்.
ஜூலியா பேப் ஜெர்மனியில் பிறந்தவர். இவர் செல்லப்பிராணிகளுக்கான உணவு வகைகளை வழங்கும் நாட்டின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான Canine India நிறுவனர்.
இந்தியாவில் செல்லப்பிராணிகளுக்கான உணவு வகைகளை வழங்கும் பிரிவில் வாய்ப்புகள் அதிகம் இருப்பதை உணர்ந்த இவர் இந்நிறுவத்தைத் தொடங்கினார்.
ஒவ்வொரு உயிரினமும் உயிர் வாழ்வதற்கு ஒவ்வொரு வகையான உணவு தேவைப்படும். உடலமைப்பும் செரிமான அமைப்பும் ஒவ்வொரு உயிரினத்திற்கும் மாறுபடும். எனவே அதற்கேற்றவாறு சாப்பிட்டால் மட்டுமே உயிர் பிழைத்திருக்க முடியும்.
Canine India அத்தகைய உணவை செல்லப்பிராணிகளுக்கு வழங்குகிறது. இந்த ஆன்லைன் நிறுவனம் நாய்கள் மற்றும் பூனைகளுக்கான உணவை விற்பனை செய்கிறது.
தொடக்கம்
செல்லப்பிராணிகளுக்கு அதற்கேற்ற உணவை வழங்கவேண்டும் என்பதை மிகவும் இளம் வயதான 13 வயதிலேயே புரிந்துகொண்டார் ஜூலியா. அந்த சமயத்தில் ஜானி என்கிற நாயை அவர் தத்தெடுத்துக்கொண்டார்.
“நாய்களுக்கு கொடுக்கப்படவேண்டிய ஊட்டச்சத்து குறித்தும் பயிற்சி குறித்தும் முறையாகக் கற்றுக்கொண்டால் மட்டுமே நாயை தத்தெடுத்துக் கொள்ள அனுமதி கொடுப்பேன் என்று அம்மா சொல்லிவிட்டார்,” என்று ஜூலியா யுவர்ஸ்டோரி இடம் பகிர்ந்துகொண்டார்.
ஜானி மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வளர்ந்து வந்தது. ஆனால் சில ஆண்டுகளில் நிலைமை மாறியது.
ஜூலியா மேற்படிப்பிற்காக நியூயார்க் சென்றுவிட்டார். அவரது அம்மாவிற்கும் உடல்நலம் மோசமானது. தனியாக நாயைப் பராமரிக்க முடியாமல் போனது. வேறு வழியின்றி அவர் நாயை வேறொருவருக்கு தத்து கொடுத்துவிட்டார்.
சில மாதங்கள் கழிந்திருக்கும். ஜானியின் உடல்நலம் மோசமாகப் பாதிக்கப்பட்டது. அதைக் கருணைக் கொலை செய்தது ஜூலியாவிற்குத் தெரிய வந்தது.
“ஜானியைத் தத்து கொடுத்த சில மாதங்களிலேயே புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்தது. சமைக்கப்படாத பச்சை உணவு வகையில் இருந்து கிபில் உணவு வகைக்கு மாறியதே இதற்கு முக்கியக் காரணம்,” என்று ஜூலியா நினைவுகூர்ந்தார்.
செல்லப்பிராணிகளுக்கு அதற்கு ஏற்றவாறான, சரியான உணவு வகைகளைக் கொடுக்கவேண்டும் என்கிற ஜூலியாவின் கருத்திற்கு இந்தச் சம்பவம் மேலும் வலுவூட்டுவதாக அமைந்தது.
எனவே செல்லப்பிராணிகளுக்குக் கொடுக்கப்படவேண்டிய உணவின் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என்று முடிவெடுத்தார். பல ஆண்டுகளுக்குப் பின்னர் ஜூலியா தனது கணவர் ஹரீஷ் உடன் இந்தியா திரும்பினார். இந்திய ரக நாய் ஒன்றைத் தத்தெடுத்துக்கொண்டார்.
செல்லப்பிராணிகளுக்கான ஸ்டோர்களில் பெடிகிரி போன்ற கிபில் வகைகள் மட்டுமே இருப்பதையும் ஃப்ரெஷ் இறைச்சி வகைகள் ஏதும் கிடைக்கவில்லை என்பதையும் கவனித்தார். நகருக்கு வெளியே இருக்கும் பண்ணைகளைத் தேடிச்சென்று ஃப்ரெஷ் இறைச்சி வகைகளை வாங்கி வருமாறு கணவரிடம் வலியுறுத்தியுள்ளார். இந்தத் தேடல்தான் Canine India தொடங்க வழிவகுத்துள்ளது.
Canine India ஸ்டார்ட் அப் பண்ணையில் இருந்து வாங்கப்படும் இறைச்சி வகைகளை மட்டுமே விற்பனை செய்கிறது. டீஹைட்ரேஷன் தவிர வேறு எந்தவித பிராசஸ்களும் செய்யப்படுவதில்லை.
சர்க்கரை, பதப்படுத்தும் பொருட்கள், ஆபத்தான ரசாயனப் பொருட்கள் போன்றவற்றை சேர்த்து தயாரிக்கப்படும் மற்ற கிபில் போன்று இல்லாமல் Canine India தயாரிப்புகள் இறைச்சி, எலும்பு போன்றவற்றை மட்டுமே கொண்டுள்ளது.
இந்த ஸ்டார்ட் அப் நாடு முழுவதும் அதன் தயாரிப்புகளைக் கொண்டு சேர்க்கிறது. சுய நிதியில் இயங்கும் இந்நிறுவனம் இன்னமும் லாபகரமாக செயல்படத் தொடங்கவில்லை. இந்த வணிகத்தில் இருந்து கிடைக்கக்கூடிய தொகை மீண்டும் வணிகத்திலேயே முதலீடு செய்யப்படுகிறது.
சமூக தடைகள்
இந்தியாவைப் பொறுத்தவரை இறைச்சி பொருகள் சென்சிடிவாகவே பார்க்கப்படுகிறது. இதனால் ஜூலியாவின் தொழில்முனைவுப் பயணம் சவால் நிறைந்ததாகவே இருந்துள்ளது.
பண்ணையில் இருந்து கிடைக்கக்கூடிய ஃப்ரெஷ்ஷான இறைச்சியை வழங்கவேண்டும். செல்லப்பிராணிகளுக்கு சரியான உணவு வகைகளைக் கொடுக்கவேண்டியதன் முக்கியத்துவத்தை அவற்றை வளர்ப்பவர்களுக்கு எடுத்துரைக்கவேண்டும். இந்த இரண்டுமே Canine India தொடங்கியபோது ஜூலியாவின் விருப்பமாக இருந்தது.
நாய்கள், பூனைகள் போன்ற செல்லப்பிராணிகளுக்கு சமைக்கப்படாத இறைச்சியே சரியான உணவு. இவை பிராசஸ் செய்யப்படாமல் இருக்கும்.
இன்று உலகம் முழுவதும் இந்த உணவு வகைகளே பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில் மனிதர்களைப் போன்று விலங்குகளுக்கு பிராசஸ் செய்யப்பட்ட உணவு வகைகள் செரிமானம் ஆகாது.
ஜூலியா அறிமுகப்படுத்திய தயாரிப்புகளைப் பற்றி பலர் எதிர்மறையாக விமர்சனம் செய்துள்ளனர். ஆனால் அது குறித்து சிறிதும் கவலைப்படாத ஜூலியா சமைக்கப்படாத உணவை செல்லப்பிராணிகளுக்குக் கொடுப்பதால் கிடைக்கக்கூடிய பலன்களைப் பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இன்ஸ்டாகிராம் பக்கம் மூலமாகவும் உரையாற்றுவதன் மூலமாகவும் செல்லப்பிராணிகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவைக் கொடுக்கவேண்டும் என்பதை வலியுறுத்துகிறார்.
Canine India தொடங்கிய புதிதில் தரமான இறைச்சியை வாங்குவதும் சவாலாக இருந்துள்ளது.
உலகளவில் இந்தியாவில்தான் விலங்குகள் நல்வாழ்வு மற்றும் வளர்ப்பு தொடர்பான சட்டங்கள் மோசமாக உள்ளது. வெகு சிலரே உயர்தர இறைச்சியை விற்பனை செய்கின்றனர்.
கால்நடை பண்ணைகள் சுகாதாரமற்ற இடங்களில் மேற்கொள்ளப்படுகின்றன. சுகாதாரமான, சிறந்த தரத்துடன்கூடிய இறைச்சியைத் தேடி ஜூலியா கால்நடை பண்ணைகளைப் பார்வையிட்டார்.
ஆபத்தான கிபில் உணவு
செல்லப்பிராணிகளுக்கான உணவு வகைகள் சார்ந்த துறையானது 38.6 பில்லியன் டாலர் மதிப்புடையது. மிகப்பெரிய ஜாம்பவான் நிறுவனங்கள் இதில் ஆதிக்கம் செலுத்துகின்றன.
மருந்து துறை போன்றே இந்நிறுவனங்களும் அதன் பிராண்ட் விற்பனையை ஊக்குவிக்க பெட் கிளினிக்குகளுடன் இணக்கமாக செயல்படுகின்றன.
சமீபத்தில் Purina, Pedigree, IAMS உள்ளிட்ட பிரபல பிராண்டுகளின் தயாரிப்புகளிலும் மெட்டல், ஆபத்தான ரசாயனங்கள், பூஞ்சை உள்ளிட்டவை கண்டறியப்பட்டன. இருப்பினும் இதுபோன்ற தயாரிப்புகளை வழங்கும் நிறுவனங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. கால்நடை மருத்துவர்களும் தொடர்ந்து இந்தத் தயாரிப்புகளை பரிந்துரை செய்கின்றனர்.
“இந்தியாவில் செல்லப்பிராணிகளுக்கான ஊட்டச்சத்து மற்றும் மருத்துவ சிகிச்சைகள் குறித்த நம்பகமான தகவல்கள் கிடைப்பதில்லை. பெரிய மருந்து நிறுவனங்கள் கால்நடை மருத்துவர்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன. லேபிள் செய்யப்பட்ட உணவும் இறைச்சியும் கிடைப்பதில்லை,” என்கிறார் ஜூலியா.
Canine India, Canine Craving போன்ற நிறுவனங்கள் செல்லப்பிராணிகளுக்கான உணவு குறித்த மக்களின் கண்ணோட்டத்தை மாற்ற விரும்புகின்றன. அத்துடன் வணிக ரீதியாக விற்பனை செய்யப்படும் உணவில் இருந்து ஆர்கானிக் இறைச்சி சார்ந்த உணவிற்கு மாற உதவவேண்டும் என்பதே இதுபோன்ற நிறுவனங்களின் விருப்பமாக உள்ளது.
“கிபில் உணவு வகைகளில் இருந்து சமைக்கப்படாத இறைச்சி சார்ந்த உணவிற்கு மாற மக்களை சம்மதிக்க வைப்பதற்கு அதிகம் மெனக்கெட வேண்டியுள்ளது. ஆனால் மக்கள் தங்கள் செல்லப்பிராணிகளை அதிகம் நேசிக்கிறார்கள். அதற்கு நல்லது என்பதை உணர்ந்தால் நிச்சயம் ஏற்றுக்கொள்வார்கள்,” என்கிறார்.
வருங்காலத் திட்டங்கள்
லாபத்தைக் காட்டிலும் செல்லப்பிராணிகளுக்கு ஏற்ற வெவ்வேறு வகையான உணவுத் தயாரிப்புகளை வழங்கவேண்டும் என்பதில் ஜூலியா முக்கியக் கவனம் செலுத்துகிறார்.
‘இதை சாப்பிடும் விலங்குகளுக்கு இது நன்மை பயக்குமா?’ இந்த அம்சத்தைக் கருத்தில் கொண்டே ரெசிபி தயாரிக்கப்படுகிறது என்கிறார் ஜூலியா.
ஜூலியா தனது முக்கிய நோக்கம் நீர்த்துப்போய்விடக்கூடாது என்பதற்காகவே முதலீட்டாளர்களை இணைத்துக்கொள்ளவில்லை.
வணிகத்தில் மேலும் வளர்ச்சி வேண்டும்; புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தவேண்டும்; செல்லப்பிராணிகளுக்கு கொடுக்கும் உணவின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்; செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்கள் கிபில் உணவு வகையில் இருந்து இறைச்சி சார்ந்த உணவு வகைக்கு மாற உதவவேண்டும்; இவையே ஜூலியாவின் முக்கியக் குறிக்கோள்.
ஆங்கில கட்டுரையாளர்: அபராஜிதா சக்சேனா | தமிழில்: ஸ்ரீவித்யா