யுபிஐ பரிவர்த்தனைகளில் 50 சதவீதத்தை கைப்பற்றியது PhonePe
ஆகஸ்ட் மாதத்தில், போன்பே 7.23 பில்லியன் பரிவர்த்தனைகளை கையாண்டு, ரூ.10,33,264.34 கோடி மதிப்பில் பரிவர்த்தனைகளை செய்துள்ளது தெரியவந்துள்ளது.
ஆகஸ்ட் மாத யூபிஐ பரிவர்த்தனையில் மதிப்பு அடிப்படையில் ’PhonePe’ 50 சதவீத பரிவர்த்தனைகளை கையாண்டுள்ளது மற்றும் சச்சின் பன்சலின் நவி டெக்னாலஜிஸ், பரிவர்த்தனை அளவில் AmazonPay-வை முந்தியிருப்பதும், இந்திய தேசிய பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் தகவலின் மூலம் தெரிய வந்துள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில், போன்பே, யூபிஐ அமைப்பிற்குள் மேற்கொள்ளப்பட்ட ரூ.20,60,735.57 கோடியில், 50.14 சதவீதமாக, ரூ.10,33,264.34 கோடி மதிப்பில் பரிவர்த்தனைகளை கையாண்டுள்ளது. ஜூலை மாதம் இது 49.83 சதவீதமாக இருந்தது.
பரிவர்த்தனை எண்ணிக்கையில், போன்பே ஆகஸ்ட் மாதம் 7.23 பில்லியன் பரிவர்த்தனைகளை கையாண்டது. மொத்த யூபிஐ பரிவர்த்தனைகளில் 48.36 சதவீதம் இது.
2023 ஆகஸ்ட் மாதம் அறிமுகம் ஆன Navi, மொத்த பரிவர்த்தனை அளவில், அமேசான்பேவை பின்னுக்குத்தள்ளி ஐந்தாவது இடத்தில் உள்ளது. ஆகஸ்ட் மாதம், நவி 88.71 மில்லியன் பரிவர்த்தனைகளை கையாண்டது. அமேசான்பே இதே காலத்தில் 70.72 மில்லியன் பரிவர்த்தனைகளை கையாண்டது.
ஜூலை மாதம் நவி 68.47 மில்லியன் பரிவர்த்தனைகளை கையாண்ட நிலையில், 29.56 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது. அமேசன்பே, ஜூலை மாதம் 72.41 மில்லியன் பரிவர்த்தனைகளை கையாண்ட நிலையில் 2.3 சதவீத சரிவு கண்டுள்ளது.
நவி அதிக பரிவர்த்தனை எண்ணிக்கை கொண்டிருந்தாலும், அமேசான்பே, நவியை விட கூடுதலாக ரூ.3,092.89 கோடி அளவு மதிப்பு பெற்றுள்ளது. நவி நிறுவனம் பரிவர்த்தனைக்கு ரூ.10 கேஷ்பேக் சலுகை உள்ளிட்ட முன்னெடுப்புகளால் வேகமாக வளர்ந்துள்ளது.
போன்பேவுக்கு அடுத்தாக, கூகுள்பே, ரூ.7,42,223.07 கோடி மதிப்பிலான 5,592.45 மில்லியன் பரிவர்த்தனைகளோடு இரண்டாவது இடத்தில் உள்ளது. பேடிஎம், ரூ.1,13,672.16 கோடி மதிப்பில் 1.07 பில்லியன் பரிவர்த்தனகோடு அடுத்த இடத்தில் உள்ளது.
பேடிஎம்மிற்கு பிறகு, மற்ற நிறுவனங்கள் மற்றும் முன்னணி நிறுவனங்கள் இடையிலான இடைவெளி அதிகமாகிறது. குனால் ஷாவின் கிரெட் 147.48 மில்லியன் பரிவர்த்தனைகளோடு ஒரு சதவீதத்திற்கும் குறைவான பங்கை கொண்டுள்ளது.
என்பி.சி.ஐ கொண்டு வர உத்தேசித்துள்ள யூபிஐ பரிவர்த்தனைக்கான 30 சதவீத சந்தை பங்கு வரம்பு, நிறுவனத்தின் பொது பங்கு வெளியீடு திட்டத்தை தாமதப்படுத்துவதாக போன்பே இணை நிறுவனர் மற்றும் சி.இ.ஓ சமீர் நிகம் அண்மையில் கூறினார்.குளோபல் பிண்டெக் விழாவில் பேசியவர்,
“30 சதவீத சந்தை பங்கு வரம்பு வர உள்ள நிலையில் பங்கு வெளியீட்டிற்கு தயாராவது பதற்றத்தை அளிப்பதாகக் கூறினார்."
தற்போது யூபிஐ சந்தையில் பாதிக்கு மேல் பெற்றிருப்பதால், பொது பங்கு வெளியீட்டால் பங்குதாரர்களுக்கு நியாயமாக நடந்து கொள்ள முடியுமா என்பது தெரியவில்லை என்று கூறியவர், செயல்பாட்டு தயார் நிலை மற்றும் விதிகளை பின்பற்றும் செயல்முறையும் தாமதத்திற்கு காரணம் என்றார்.
ஆங்கிலத்தில்: சயான் சென், தமிழில்: சைபர் சிம்மன்
Edited by Induja Raghunathan