இந்தியாவில் டேட்டா மையம் அமைக்க ’TikTok' தாய் நிறுவனம் திட்டம்!
விமர்சனங்களும், தடைக்கான கோரிக்கைகளும் அதிகரித்து வரும் நிலையில், டிக்டாக் செயலியின் தாய் நிறுவனம், இந்தியாவில் டேட்டா மையத்தை அமைக்க திட்டமிட்டிருப்பதாக தெரிவித்துள்ளது.
சமூக ஊடக சேவைகளான டிக்டாக் மற்றும் ஹலோ ஆகிய செயலிகளின் தாய் நிறுவனமான, ByteDance, இந்திய பயனாளிகளின் தரவுகளை உள்ளூரிலேயே சேமிப்பதற்காக, இந்தியாவில் தனது டேட்டா மையத்தை அமைப்பதற்கான வாய்ப்புகளை பரீசிலித்து வருவதாக தெரிவித்துள்ளது.
இந்தியாவில், தேச விரோத செயல்பாடுகளுக்கு டிக்டாக் தவறாக பயன்படுத்தப் படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, டிக்டாக் மற்றும் ஹலோ சேவைகளிடம் மத்திய அரசு 24 கேள்விகள் கொண்ட நோட்டீசை அனுப்பிய நிலையில் இந்த செய்தி வெளியாகியுள்ளது.
ஜூலை 22 ம் தேதிக்குள் பொருத்தமான பதில் அளிக்கத்தவறினால், செயலிகள் தடை செய்யப்படும் என அரசு எச்சரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
“இந்திய அரசின் புதிய தரவுகள் பாதுகாப்புச் சட்டத்தை உருவாக்கும் முயற்சியை அங்கீகரிக்கும் வகையில், இந்தியாவில் டேட்டா மையத்தை அமைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறோம். இந்திய எல்லைக்குள் இந்திய பயனாளிகளுக்கு, பாதுகாப்பான, நம்பகமான சேவையை வழங்குவதற்கான வாய்ப்புகளை பரிசீலித்து வருகிறோம்,” என பைட்டான்ஸ் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் செயல்பாடுகளை துவங்கிய பிறகு, இந்திய பயனாளிகள் தகவல்களை அமெரிக்கா மற்றும் சிங்கப்பூரில் உள்ள டேட்டா மையங்களில் பராமரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
”இந்தியா எங்களது வலுவான சந்தைகளில் ஒன்றாக திகழ்கிறது. டிஜிட்டல் இந்தியாவில் 15 மொழிகளில் அங்கம் வகிக்கிறோம் என்பதில் பெருமை கொள்கிறோம். இப்போது மிகப்பெரிய பாய்ச்சலை மேற்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது என நினைக்கிறோம். இதன்படி, தொடர்புடைய பங்குதாரர்களுடன் அர்த்தமுள்ள உரையாடல் மேற்கொண்டு, புதிய அளவுகோளை உருவாக்க இருக்கிறோம்,” என்றும் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மேற்கொண்டு விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை என்றாலும், உள்ளூர் நிறுவனங்களுடன் பைட்டான்ஸ் பேச்சு வார்த்தையை துவக்கி இருப்பதாகவும், உள்ளூரில் டேட்டா மையம் அமைக்க 6 முதல் 18 மாதங்கள் ஆகலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய அரசு தனிநபர் தரவுகள் பாதிகாப்பு மசோதாவை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளது. தனிநபர் தரவுகள் பாதுகாப்பு மசோதா 2018, தனிப்பட்ட தரவுகள் உள்ளூரிலேயே பராமரிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிடுகிறது.
சாப்ட்பேங்க், கேகேஆர், செக்கோயா ஆகியவற்றின் முதலீட்டை பெற்றுள்ள உலகின் மதிப்பு மிக்க ஸ்டார்ட் அப்’பான பைட்டான்ஸ், அடுத்த 3 ஆண்டுகளில் இந்தியாவில் 1 பில்லியன் டாலர் முதலீடு செய்வதாக இந்த ஆண்டு துவக்கத்தில் அறிவித்தது.
இதன் வீடியோ பகிர்வு சேவையான டிக்டாக், 15 நொடி வீடியோக்களை உருவாக்கி பகிர்ந்து கொள்ள வழி செய்கிறது. நாட்டில் 200 மில்லியனுக்கு மேல் பயனாளிகளுடன் பிரபலமாக இருந்தாலும், மோசமான பயன்பாடு காரணமாக இந்த செயலி சர்ச்சைக்கும், பிரச்சனைக்கும் அடிக்கடி உள்ளாகி வருகிறது.
டிக்டாக் செயலி ஆபாசமான முறையில் பயன்படுத்தப்படுபதாக குற்றம் சாட்டப்படுகிறது. ஏப்ரல் மாதம், டிக்டாக் செயலியை தடை செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. எனினும் பின்னர் இந்த தடை நீக்கப்பட்டது.
எனினும் டிக்டாக் தொடர்ந்து சர்ச்சைக்கு இலக்காக வருகிறது. காங்கிரஸ் எம்பி. சசி தரூர், அண்மையில் மக்களவையில் பேசும் போது, டிக்டாக் செயலி இந்திய பயனாளிகளின் தகவல்களை சட்ட விரோதமாக சேகரிப்பதாகவும், தேசிய பாதுகாப்புக்கு இது அச்சுறுத்தலானது என்றும் தெரிவித்தார்.
ஆர்.எஸ்.எஸ் துணை அமைப்பான, சுதேசி ஜார்கன் மன்ச், டிக்டாக், ஹலோ உள்ளிட்ட செயலிகள் தேசவிரோத செயல்களுக்கு பயன்படுத்தப்படுவதாக குற்றம் சாட்டியது.
இருப்பினும், டிக்டாக் இந்த புகார்களை மறுத்துள்ளது. தான் செயல்படும் நாடுகளில் உள்ளூர் சட்டத்தை மதித்து நடப்பதாக நிறுவனம் தெரிவித்தது. மேலும், ஆபாச பயன்பாடு பிரச்சனையை எதிர்கொள்ள, கல்வி, ஆரோக்கியம் சார்ந்த தகவல்களை பகிர ஊக்குவிக்கும் வகையில், #EduTokChallenge எனும் பிரச்சாரத்தையும் மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே தமிழக அரசு, மத்திய அரசு மூலம் டிக்டாக் செயலி தடை செய்யப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது. அண்மையில் தமிழக சட்டமன்றத்தில் மாநில தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன், ஒரு செயலியை தடை செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கே இருப்பதாகவும், எனவே மத்திய அரசு மூலம் இந்த செயலியை பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து தடை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்த பின்னணியில் பைட்டான்ஸ் நிறுவனம், இந்திய பயனாளிகளின் தகவல்களை உள்ளூரில் சேமிப்பதற்கான டேட்டா மையத்தை அமைப்பது பற்றி பரிசீலித்து வருவதாக அறிவித்துள்ளது.
ஆதாரம்: பிடிஐ | தமிழில் : சைபர்சிம்மன்