'இந்திய ட்ரோன் திருவிழா' - தொடங்கி வைத்து தொழில்நுட்ப வளர்ச்சியில் பெருமிதம் அடைந்த பிரதமர் மோடி!
ட்ரோன் துறையால் இந்தியாவில் வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
'பாரத் ட்ரோன் மஹோத்சவ்' நிகழ்ச்சியை பிரதமர் மோடி இன்று (மே 27) தொடங்கி வைத்தார். அதில் பேசிய பிரதமர் மோடி, "இந்தியாவில் ட்ரோன் தொழில்நுட்பத்தை சுற்றியுள்ள உற்சாக வரவேற்பு என்பது விரைவில் இந்தியாவில் வேலைவாய்ப்பு உருவாக்கும் துறையாக மாறும்," என்பதை குறிக்கிறது என குறிப்பிட்டார்.
நாட்டின் "மிகப்பெரிய ட்ரோன் திருவிழா" என்று அழைக்கப்படும் இந்த நிகழ்வானது டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் நடைபெறுகிறது. இதுகுறித்து நேற்று (மே 26) பிரமதர் மோடி டுவிட் செய்திருந்தார். அதில்,
"ட்ரோன் துறையில் இந்தியாவின் இருப்பை அதிகரிக்கும் நோக்கத்துடன் ஸ்டார்ட்அப்கள் உள்ளிட்ட முக்கியப் பங்குதாரர்களை இந்த மன்றம் ஒருங்கிணைக்கிறது. தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளில் ஆர்வமுள்ள அனைவரையும் இந்த நிகழ்ச்சியை பார்க்கும்படி கேட்டுக் கொண்டார்."
இதுகுறித்து வெளியான செய்தி குறிப்பில், இன்று (மே 27) காலை 10 மணிக்கு தொடங்கி இரண்டு நாட்கள் நடக்கும் இந்த திருவிழாவில் அரசு அதிகாரிகள், வெளிநாட்டு தூதர்கள், ஆயுதப்படைகள், மத்திய ஆயுதப் படைகள், பொதுத் துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் ட்ரோன் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உள்ளிட்ட 1600 பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி,
“ட்ரோன் துறையில் அரசாங்கத்தின் முன்முயற்சிகள் குறித்து பேசினார். மேலும் முந்தைய காலங்களில் தொழில்நுட்பம் மற்றும் அதன் கண்டுபிடிப்புகள் என்பது உயரடுக்கு வகுப்பினருக்காக எனக் கருதப்பட்டன எனவும் இன்று மக்களுக்கு முதலில் தொழில்நுட்பம் பிரதானமாக வழங்கப்படுகிறது,” எனவும் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ட்ரோன் விதிகள் 2021-ஐ அரசு அறிவித்தது. இதில் 2018 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட சிவிலியன் ட்ரோன் நடவடிக்கைகளுக்கான கடுமையான விதிகள் தளர்த்தப்பட்டது. அதேபோல், இந்தியாவில் ஆளில்லா விமானம் தயாரிக்கும் சூழலை உருவாக்கும் நோக்கில் மத்திய அரசு தற்போது செயல்பட்டு வருவதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். மேலும் 'மேக் இன் இந்தியா' முன்னேற்றத்தைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியடைவதாக பெருமிதம் கொண்டார்.
"பிரதமர் சுவாமித்வா திட்டத்தின் கீழ் முதல் முறையாக நாட்டின் கிராமங்களில் உள்ள ஒவ்வொரு சொத்துகளையும் டிஜிட்டல் மேப்பிங் செய்யப்படுகிறது எனவும் இதன் மூலம் மக்களுக்கு டிஜிட்டல் சொத்து அட்டைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் இது பாகுபாட்டுக்கான வாய்ப்பை நீக்குகுறது எனவும் தெரிவித்தார்.
“ட்ரோன் தொழில்நுட்பமானது விவசாயத் துறையை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் எனக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, இந்த ஸ்மார்ட் டெக்னாலஜி அடிப்படையிலான ட்ரோன்கள் பெரிதும் பயன்படும் எனவும் கடந்த 8 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் மூலம் தொழில்நுட்பத்தின் மீதான விவசாயிகள் நம்பிக்கையானது வெகுவாக அதிகரித்துள்ளன,” எனவும் தெரிவித்தார்.
70-க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள், ட்ரோன்கள், தயாரிப்பு வெளியீடுகள், குழு விவாதம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் இந்த நிகழ்ச்சியில் காண்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், இந்த ட்ரோன் திருவிழாவில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ட்ரோன் டாக்ஸியின் முன்மாதிரி காட்சியும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விழாவில் ட்ரோன் பைலட் சான்றிதழ்கள் வழங்கப்படும் என PMO தெரிவித்திருக்கிறது.