அடுத்த ஆண்டுக்குள் 1 லட்சம் ட்ரோன்கள்: வேளான் பணிகளுக்கு தேர்வான சென்னை 'கருடா ஏரோஸ்பேஸ்'
தமிழகம் உட்பட நாடு முழுவதும் 100 இடங்களில் வேளாண் பணிகளுக்கான ட்ரோன் சேவையை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கிவைத்துள்ளார்.
தமிழகம் உட்பட நாடு முழுவதும் 100 இடங்களில் வேளாண் பணிகளுக்கான ட்ரோன் சேவையை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கிவைத்துள்ளார்.
பிப்ரவரி 1ம் தேதி அன்று நாடாளுமன்றத்தில் 2022 - 2023ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அப்போது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வேளாண் துறை சார்ந்த பல முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
அதில், 'கிசான் ட்ரோன்கள்' திட்டம் கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தார். ட்ரோன் மூலம் நிலங்களை அளப்பது மற்றும் வேளாண் விளைச்சலை கணிப்பது போன்ற பணிகளுக்கு கிசான் ட்ரோன் திட்டம் பயனளிக்கும் என்றும் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார்.
வேளாண் பயன்பாட்டுக்கு 100 ட்ரோன்கள்:
மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட படி, 'கிஷான் ட்ரோன் சுவிதா' என்ற திட்டத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். வேளாண் பயன்பாட்டுக்காக தமிழகத்தில், ஈரோடு, புதுக்கோட்டை, தேனி, விழுப்புரம், கடலூர், சேலம், திருவாரூர், கரூர் மாவட்டங்கள் உட்பட நாடு முழுவதும் 100 கிசான் ட்ரோன்கள் சேவையை காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார்.
இந்த ட்ரோன்கள் மூலமாக விளை நிலங்களில் பூச்சி கொல்லிகள் மற்றும் உரங்கள் தெளிப்பது, விதைகளை தூவுவது, நிலத்தை அளவீடு, பயிர்சேதங்களை மதிப்பீடு போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டிருந்த பிரதமர் மோடி,
“நாடு முழுவதும் 100 இடங்களில் கிசான் ட்ரோன்கள் செயல்படுவதைப் பார்த்தது மகிழ்ச்சியளித்தது. இது துடிப்புமிக்க புதிய தொழிலின் கருடா ஏர்ஸ்பேஸ் மெச்சத்தக்க முன்முயற்சியாகும். புதிய கண்டுபிடிப்பு தொழில்நுட்பம் நமது விவசாயிகளுக்கு அதிகாரமளிப்பதுடன் வேளாண்மையை மிகவும் லாபகரமானதாக மாற்றும்," என்றார்.
ட்ரோன் ஸ்டார்ட் அப்கள்:
கிஷான் ட்ரோன்கள் திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, கிசான் ட்ரோன்கள் ஒரு புதிய புரட்சியின் தொடக்கம் எனத் தெரிவித்தார்.
விவசாயிகள் தங்கள் விளைபொருட்களான பழங்கள், காய்கறிகள் மற்றும் பூக்கள் போன்றவற்றை குறைந்த நேரத்தில் சந்தைகளுக்கு கொண்டு செல்ல அதிகத் திறன் கொண்ட ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி தங்கள் வருமானத்தை அதிகரிக்க முடியும் என தெரிவித்தார்.
இந்தியாவில் ட்ரோன் வளர்ச்சி குறித்து பேசிய பிரதமர் மோடி,
“இந்தியாவில் ட்ரோன் ஸ்டார்ட் அப்கள் என்ற புதிய கலாசாரம் உருவாகி வருகிறது. நாட்டில் தற்போது 200-க்கும் மேற்பட்ட ட்ரோன் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. விரைவில் இந்த எண்ணிக்கை ஆயிரத்தை எட்டும். இதன் மூலம் லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகள் உருவாகும். ட்ரோன் துறை வளர்ச்சியில் எந்த தடையும் இல்லை என்பதை மத்திய அரசு உறுதி செய்யும். வளர்ச்சியை எளிதாக்க பல சீர்திருத்தங்களை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. கடந்த சில ஆண்டுகள் முன்பு வரை ட்ரோன்கள் பெரும்பாலும் பாதுகாப்பு துறை சார்ந்ததாக இருந்தது,” எனத் தெரிவித்தார்.
21ம் நூற்றாண்டில் நவீன விவசாய வசதிகளை வழங்குவதில் இது ஒரு புதிய அத்தியாயமாகும், மேலும், இது ட்ரோன் துறையின் வளர்ச்சியில் ஒரு மைல்கல்லாக நிரூபிப்பது மட்டுமல்லாமல் எல்லையற்ற சாத்தியக்கூறுகளையும் திறக்கும் எனத் தெரிவித்தார்.
ட்ரோன் துறையில் இந்தியாவின் இளம் திறமைகளை நம்பி புதிய மனநிலையுடன் முன்னேறியது என்று பிரதமர் கூறினார்.
கிராமங்களில் நில உரிமையை பதிவு செய்வதற்கும், மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளைக் கொண்டு செல்லும் திட்டத்திற்கும் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட உள்ளன. அடுத்த 2 ஆண்டுகளில் 1 லட்சம் ‘மேட் இன் இந்தியா ட்ரோன்கள்’ தயாரிக்கப்பட வேண்டும் என கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்திடம் கூறியுள்ளேன். இதன் மூலம், நமது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளையும், புதிய வாய்ப்புகளையும் உருவாக்கும் எனத் தெரிவித்தார்.
மத்திய அரசின் இந்தத் திட்டத்தில் சென்னையைச் சேர்ந்த ’கருடா ஏர்ஸ்பேஸ்’ என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம், வேளாண் பணிக்காக 100 அதிநவீன ட்ரோன்களை உருவாக்கியுள்ளது. இதற்கு முன்னதாக இந்நிறுவனம் கேரள மாநிலம் இடுக்கி மலைப்பகுதியில் சிக்கிக் கொண்ட பாபு என்ற இளைஞரை மீட்பதற்கான ட்ரோன் சேவையை வழங்கியது குறிப்பிடத்தக்கது.