மதம் கடந்த மனிதநேயம்; ஆதரவில்லா சடலங்களுக்கு இறுதிச்சடங்கு செய்யும் பெண் காவலர்!
சவக்கிடங்குகளில் கேட்பாரற்று கிடக்கும் மற்றும் ஆதரவற்றவர்களின் உடல்களுக்கு கோவையைச் சேர்ந்த பெண் காவலர் இறுதிச்சடங்கு செய்து வருகிறார்.
சவக்கிடங்குகளில் கேட்பாரற்று கிடக்கும் மற்றும் ஆதரவற்றவர்களின் உடல்களுக்கு கோவையைச் சேர்ந்த பெண் காவலர் இறுதிச்சடங்கு செய்து வருகிறார்.
மனித நேயம் என்பது உயிருடன் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, சில சமயங்களில் இறந்த உடலுக்கும் தேவைப்படுகிறது. இதற்கு அரசு மருத்துவமனைகளின் சவக்கிடங்குகளை பார்வையிட்டாலே, கேட்பாரற்று கிடக்கும் சடலங்கள் நமக்கு பல விஷயங்களை உணர்த்துகின்றன.
“என்ன கொண்டு வந்தோம்... போகும் போது என்ன எடுத்துச் செல்லப் போகிறோம்,” என்பார்கள். இறந்த பிறகு மனிதனின் உடலுக்குச் செய்யப்படும் இறுதிச்சடங்கு, அவனுக்கான இறுதி மரியாதையாக பார்க்கப்படுகிறது.
ஆனால், ஆதரவற்ற மற்றும் சொந்த பந்தம் என யாருமே இல்லாதவர்கள் மரணமடைந்தால் அவர்களது சடலங்களுக்கு யார் இறுதிச்சடங்கு செய்வது? என்ற கேள்விக்கு விடையாக மாறியிருக்கிறார் கோவையைச் சேர்ந்த பெண் காவலரான ஆமினா.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த ஆமினா, 2010ம் ஆண்டு காவல்துறையில் பணிக்குச் சேர்ந்தார். முதலில் மேட்டுப்பாளையத்தில் உதவி எழுத்தாளராக நியமிக்கப்பட்டவர். கடந்த ஐந்து ஆண்டுகளாக மருத்துவம் மற்றும் சட்ட நடைமுறைகளை மேற்பார்வையிட்டு வருகிறார்.
காவல்துறை சார்பில், இறந்தவர்களின் சடலங்களை பிரேத பரிசோதனை செய்வது, பிரேத பரிசோதனை சான்றிதழ்களை சரி பார்ப்பது, விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ-சட்ட செயல்முறைகளில் உதவுவது போன்ற பணிகளை செய்து வருகிறார்.
இவர் ஜீவ ஜோதி அறக்கட்டளையின் தன்னார்வலர்கள் மற்றும் சக காவல்துறையினரின் உதவியுடன் கடந்த ஐந்து ஆண்டுகளாக மேட்டுப்பாளையம் காவல் எல்லைக்குட்பட்ட உரிமை கோரப்படாத 100க்கும் மேற்பட்ட உடல்களை தகனம் செய்ய உதவியுள்ளார்.
ஆதரவற்ற உடல்களை தகனம் செய்யும் எண்ணம் ஆமினாவிற்கு எப்படி வந்தது என கூறுகையில்,
“மேட்டுப்பாளையம் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் பிரேத பரிசோதனை முடிந்து இறந்தவர்களின் உடல்களை குடும்பத்தினரிடம் ஒப்படைப்பது வழக்கம். ஆனால், சில உடல்களை பெற யாருமே முன்வராத போது மிகவும் வேதனையாக இருக்கும். அப்படி கைவிடப்படும் உடல்களை நானே இடுகாட்டிற்கு எடுத்துச் சென்று இறுதிச்சடங்குகளை செய்கிறேன்,” என்கிறார்.
பிரேதப் பரிசோதனை முடிந்ததும், ஆதரவற்ற மற்றும் யாருமே உரிமை கோராத உடலை நல்லடக்கம் செய்ய பெறுவதற்காக நகராட்சியில் இருந்து ஒரு ஒப்புதல் கடிதத்தை பெறுகின்றனர்.
அதன் பின்னர், நகராட்சி ஊழியர்களின் உதவியுடன், அந்த உடலை அடக்கம் செய்வதற்கான இடத்தை கண்டுபிடித்து, அவர்களது மத முறைப்படி இறுதிச்சடங்கு மற்றும் சம்பிரதாயங்களை செய்கின்றனர். ஒவ்வொரு சடலத்தையும் அடக்கம் செய்ய குறைந்தபட்சம் ரூ.1500 வரை செலவாகுமாம். நல்ல உள்ளம் கொண்ட சிலர் ஆமினாவிற்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.
சாதி, மதம் பார்க்காமல் ஆதரவற்றவர்களின் சடலத்தை நல்ல முறையில் அடக்கம் செய்து வரும் ஆமினாவை, காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் கடந்த திங்கள்கிழமை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.
தகவல் உதவி - நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் | தமிழில் - கனிமொழி