36 ஆண்டுகளாக சுமார் 3,000 உடல்களை மீட்டுள்ள கேரளாவைச் சேர்ந்த அப்துல்!
இவர் விபத்து நடக்கும் இடங்கள், தற்கொலை சம்பவம் நிகழும் இடங்கள், ஆறுகள், சாலைகள் போன்ற இடங்களில் இருந்து உடல்களை மீட்டுள்ளார்.
இயற்கையான மரணமாக இருப்பினும் விபத்தாக இருப்பினும் ஒருவரது இறப்பு என்பது அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடையே ஆறாத வடுவாகிவிடும். பாதிக்கப்பட்டவரை அடையாளம் காண்பது கடினமாக இருக்கும் சூழலில் இறந்தவரின் குடும்பத்தினருக்கு பாதிப்பு மேலும் அதிகமாக இருக்கிறது.
பல நேரங்களில் இயற்கை பேரிடர்கள் ஏற்படும்போதோ அல்லது விபத்து நேரும்போதோ பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பது கடினமாக இருப்பதால் அவரது உடல் நிகழ்விடத்திலேயே கிடப்பதைப் பார்க்கமுடிகிறது என அறிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன.ஆனால் கேரளாவைச் சேர்ந்த அப்துல் அசீஸ் போன்றோர் உதவிக்கு வருகின்றனர். இவர் கடந்த 36 ஆண்டுகளாக விபத்து நடக்கும் இடங்களில் இருந்து உடல்களை மீட்டு வருகிறார்.
மீட்புப்பணியில் தன்னார்வலராக ஈடுபட்டுள்ள இவர், ஒலவன்னா கிராம பஞ்சாயத்து உறுப்பினர். விபத்து நடக்கும் இடங்கள், தற்கொலை சம்பவம் நிகழும் இடங்கள், ஆறுகள், சாலைகள் போன்ற இடங்களில் இருந்து உடல்களை மீட்டுள்ளார். எண்ணற்ற மக்களைக் காப்பாற்றியும் இருக்கிறார். இதுமட்டுமின்றி இறந்த உடல்களைப் பலர் பொருட்படுத்தாமல் செல்கையில் இவர் உடல்களை சுத்தப்படுத்துகிறார்.
அப்துல் இதுவரை பிரேத பரிசோதனைக்காக 3,000 உடல்களை கேரளா முழுவதும் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளார். இவர் இந்த உன்னத பணியை தனது 17வது வயதில் இருந்து செய்து வருகிறார். ’தெய்வம் பரஞ்சிட்டுன்னு’ (இந்தப் பணியில் கடவுள் ஈடுபடுத்தினார்) என்கிற பெயரில் ரஜாக் கல்லெரி இவரது வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு ஒரு புத்தகம் எழுதியுள்ளார்.
1983ம் ஆண்டு அப்துலுக்கு 17 வயதிருக்கையில் இது தொடங்கியது. இவர் ஆற்றில் விழுந்த மூன்று வயது குழந்தை ஒன்றை மீட்டார். துரதிர்ஷ்ட்டவசமாக அவரது கைகளிலேயே அந்தக் குழந்தை உயிரிழந்தது. ஆனால் குழந்தையைக் காப்பாற்ற முயற்சி எடுத்ததற்காக அப்துலையும் அவரது நண்பர்களையும் கிராம மக்கள் பாராட்டினர்.
அப்துல் ’தி நியூஸ் மினிட்’ உடனான உரையாடலில் கூறும்போது,
“சிதைந்துபோய், புழுக்களுடன் இருக்கும் உடலை நான் வெறும் கைகளால் தூக்கியிருக்கிறேன். ஆரம்பத்தில் சற்று தயங்கினாலும் யாராவது ஒருவர் இதைச் செய்தே ஆகவேண்டும் என்பதை உணர்ந்தேன்,” என்றார்.
ஆறுகள் அல்லது குளங்களில் கண்டறியப்படும் பிணங்களின் ஒரு பகுதி சிதைந்து போயிருக்கும். சில நேரங்களில் உடல் ஆணா, பெண்ணா என்பதைக்கூட அடையாளம்காண முடியாமல் போவதுண்டு என்கிறார் அப்துல். இவர் உடல்களை மீட்பதை அருகில் கூடியிருக்கும் மக்கள் பார்த்தாலும்கூட யாரும் உதவ முன்வருவதில்லை. அப்துல் கூறுகையில்,
“அவர்களைக் குறைக் கூற முடியாது. அத்தகைய நிலையில் உடலைப் பார்த்தால் மக்களுக்கு அருவருப்பு ஏற்படுகிறது. ஆனால் அந்த உடல்களை என்னால் உதாசீனப்படுத்த முடியவில்லை,” என்கிறார்.
தற்போது கேரளா முழுவதும் உள்ள போலீஸ், ஆம்புலன்ஸ், உள்ளூர் மக்கள், அரசு சாரா நிறுவனங்கள் போன்றவற்றின் ஸ்பீட் டயலில் அப்துலின் தொடர்பு எண் உள்ளது.
ஒப்பந்ததாரராக பணியாற்றும் அப்துல் இத்தகைய மீட்புப் பணிகளுக்கு பணம் ஏதும் பெற்றுக் கொள்வதில்லை. அனைத்து செலவுகளையும் அவரே ஏற்றுக்கொண்டுள்ளார்.
”இதுதான் என் வாழ்க்கையின் நோக்கம். மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கும் சூழலில் அவர்களுக்கு உதவுவதைக் காட்டிலும் பணியோ குடும்ப விழாக்களோ முக்கியம் இல்லை,” என அப்துல் தெரிவித்ததாக ’தி இந்து’ குறிப்பிடுகிறது.
கட்டுரை: THINK CHANGE INDIA