ஊறுகாய் மூலம் மாதம் 2 லட்சம் வருமானம் ஈட்டும் மாற்றுத்திறனாளி பெண்!

By YS TEAM TAMIL|14th Dec 2020
சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறே பல்வேறு வகையான ஊறுகாய்களை தயாரித்து விற்பதன் மூலம் மாதம் 2லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கிறார் டீஜா.
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

கேரளாவின் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் டீஜா சதீசன். சிறுவயதிலே போலியோ நோயால் பாதிக்கப்பட்டவர், சக்கர நாற்காலியின் துணை கொண்டு வாழ்ந்து வருகிறார்.


போலியோவால் பாதிக்கப்பட்டவரால் பள்ளிக்குச்செல்லவோ, அல்லது அவரது வயதுடைய மற்ற நண்பர்களுடன் விளையாடவோ முடியவில்லை. வீட்டிலிருந்தே கற்க ஆரம்பித்தார் டீஜா.


அவருடைய தோழிகள் எல்லாம், அவரது பெற்றோர்கள் வாங்கித்தந்த புத்தகங்கள் தான். சிறு வயதிலிருந்தே டீஜாவுக்கு சமையல் மீது ஆர்வம் அதிகம். சமைப்பதை அவர் விரும்பினார். தந்தையிடமிருந்து அதைக் கற்றுக்கொண்டார்.

”என்னுடைய அப்பா அற்புதமாக சமைக்கக்கூடியவர். சக்கரநாற்காலியில் அமர்ந்துகொண்டு நான் முதல் முதலாக சமைத்த உணவு சிக்கன்தான். அப்போது எனக்கு 19வயதிருக்கும். அந்த உணவு எல்லோருக்கும் பிடித்திருந்தது. என்னை பாராட்டினார்கள். என் அப்பா, என்னிடம் உனக்கு சமைக்கும் திறன் இருக்கிறது என்று கூறினார்,” என நினைவுகளை அசைபோடுகிறார் டீஜா.

பல்வேறு வகையான ஊறுகாய்களை தயாரித்து விற்பதன் மூலம் மாதம் 2லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கிறார் டீஜா. சக்கர நாற்காலியில் சுழலும் சக்கரம் போல மாறியிருக்கிறது அவரது வாழ்க்கை. அவரது நம்பிக்கையும், கடின உழைப்பும் தான் காரணம்.


மூன்று ஆண்டுகளுக்கு முன்புவரை, உணவு, உடை உள்ளிட்ட குடும்பத்தின் அனைத்து தேவைகளையும் கவனித்து வந்தார் டீஜாவின் தந்தை. அவர் சமையலராக பணிபுரிந்து குடும்பத்தை நடத்தி வந்தார். ஆனால் காலம் அவருக்கான அவகாசத்தை கொடுக்கவில்லை.


தந்தை இறந்ததும், டீஜாவும், அவரது தாயும் தனித்துவிடப்பட்டனர். வயது முதிர்வு காரணமாக அவரது தாயால் வெளியே சென்று பணம் சம்பாதிக்க முடியாத சூழல். இப்போது அந்த குடும்பத்துக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை டீஜா மட்டும்தான்.

மாற்றுத்திறனாளி
”என் வாழ்நாளில் நான் சாப்பிட்ட மிகச்சிறந்த உணவு எனது தந்தை சமைத்தது தான். என் தந்தையை நான் இழந்திருந்தாலும், அவர் ஊட்டிவிட்ட அந்த உணவின் சுவை எனக்கும் இன்னும் நினைவிருக்கிறது. அந்த ஒரே காரணம்தான் என்னை சமையலை நோக்கித் தள்ளியது. முயற்சித்து பார்க்க தூண்டியது.”

2017ம் ஆண்டில், சொந்தமாக எதையாவது தொடங்க வேண்டும் என்று முடிவு செய்தேன். என்னுடைய குடும்ப நண்பர் நவுசாத் கான் எனக்கு ஊக்கமளித்தார். ’உனக்கு பிடித்தது எதுவோ, உனக்கு எதுவொன்று மகிழ்ச்சியை தருமோ அதை செய்’ என்று உத்வேகம் அளித்தார். மற்ற எந்த யோசனைகளுக்கும் இடம் கொடுக்காமல் நான் தேர்வு செய்தது ஊறுகாய் தொழிலைத்தான். இதற்கு முன்னாலும் ஊறுகாய் தயாரித்திருக்கிறேன்.


எனது குடும்பம் மற்றும் நண்பர் நவுசாத் உதவியுடன், ’நைமித்ரா’ என்ற பெயரில் ஊறுகாய் தொழிலை தொடங்கினேன். நைமித்ரா என்றால் புதிய நண்பர் என்று பொருள். ஊறுகாய் தயாரிக்கும்போது, நான் பல்வேறு உடல்ரீதியான பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

”தினமும் நீண்ட நேரம் உட்கார்ந்திருந்தது எனக்கு மோசமான முதுகுவலியை கொடுத்தது. இருந்தாலும், நான் என் குடும்பத்தைப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதால் இதிலிருந்து பின்வாங்கவில்லை. தொடர்ந்து செய்தேன்” என்று நம்பிக்கையுடன் தான் கடந்து வந்த பாதையை விவரிக்கிறார் டீஜா.

டீஜா ஊறுகாய் தயாரித்தப்பின், அந்த புகைப்படங்களை தனது ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். இந்தியாவின் பல்வேறு பகுதியில் உள்ளவர்கள் நைமித்ரா ஊறுகாயை ஆர்டர் செய்யத் தொடங்கிவிட்டனர். வெறுமனே ஆர்டர் செய்வது மட்டுமல்லாமல், டீஜாவின் போஸ்டையும் ஷேர் செய்துள்ளனர்.


சில வாரங்களில், கேரளாவில் மட்டுமல்லாமல், பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து டஜன் கணக்கில் ஆர்டர்களைப் பெற்று வளர்ச்சியின் பாதையை நோக்கி முன்னேறினார் டீஜா.


வீல் சேரில் எந்தவித ஓய்வும் இல்லாமல் தொடர்ந்து 10 மணிநேரம் அமர்ந்து வேலை செய்திருக்கிறார். நல்ல தரமான ஊறுகாய் தயாரிக்கவேண்டுமென்றால் கடின உழைப்பும், நேரமும், முயற்சியும் தேவை எனக் கூறுகிறார் அவர்.

”என்னுடைய நண்பர் நவுசாத் சந்தையிலிருந்து தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வருவார். நான் எனது தங்கையுடன் இணைந்து சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே குனிந்து காய்கறிகள் மற்றும் இறைச்சியை கழுவி சுத்தம் செய்வேன்.”

எனக்கென்று தனியாக எந்தவொரு வசதியும் செய்துகொள்ளவில்லை. என் தாய் மற்றும் தங்கை பயன்படுத்தும் அதே கிச்சனைத்தான் நானும் பயன்படுத்தினேன். தொடர்ந்து வளைந்து, நிமிர்ந்து வேலை செய்வது எனக்கு கடினமாக்கத்தான் இருந்தது. இதுதவிர, ஊறுகாய் தயாரிக்கும்போது, வாஷ்ரூம் செல்வது எனக்கு மிகவும் கடிமாக இருந்தது. ஆனால், எப்படியோ கடவுளின் அருளால் எல்லாவற்றையும் சமாளித்துவிட்டேன்.


நல்ல சுவை கிடைக்கவேண்டும் என்பதற்காக லெமன் மற்றும் மாங்காய் போன்றவற்றை ஒருவாரம் உப்பு நீரில் ஊற வைத்து, பின் அவற்றை தயாரிக்க தொடங்குவேன். இஞ்சி, பூண்டு, மிளகாய் போன்றவை கழுவிய பின்பு உலர்த்தி பயன்படுத்துவேன். அசைவ ஊறுகாய் தயாரிக்கும்போது, அவை வாங்கப்பட்ட அதே நாளில் தயாரித்து முடிக்க வேண்டும் இல்லையென்றால் ஊறுகாய் விரைவில் கெட்டுபோய்விடும்.

நைமித்ரா ஊறுகாயில் வினிகர் சேர்க்கப்படுவதால் காய்கறி ஊறுகாய் 4 மாதங்கள் வரை கெட்டுப்போகாமல் இருக்கும். அசைவ ஊறுகாய் மூன்று மாதங்கள் வரை கெட்டுப்போகாது.

ஊறுகாயின் இறுதிகட்ட சமையலையும் நான் தான் செய்வேன். எனக்கு சிரமமாகவே இருந்தது. ஆனால், எனக்கு வேறு வழியில்லை. காரணம் வாடகை வீட்டில் இருப்பதால் சிறப்பு வசதிகள் எதையும் செய்துகொள்ள முடியாது. சமையல் செய்யும் அடுப்பை தரையில் வைத்து, என் சக்கர நாற்காலியை அதன் அருகில் கொண்டு சென்று சமைப்பேன். நாள் ஒன்றுக்கு 50 கிலோ ஊறுகாய் தயார் செய்கிறேன். அவ்வப்போது என் சகோதரி எனக்கு உதவி செய்வார்.

சமையல் முடிந்தவுடன், ஊறுகாய் குளிர்ச்சியானதும், இறுக்கமாக மூடக்கூடிய சுத்தமான ஜாடிகளுக்கு மாற்றி கடைகளுக்கு அனுப்பிவிடுவோம். மாங்காய், எலுமிச்சை, பேரிச்சை, பூண்டு, ஜாதிக்காய், பப்பாளி, இஞ்சி, கேரட், மிளகாய், வாத்து, நெல்லி, மீன், மாட்டிறைச்சி மற்றும் இறால்கள் உள்ளிட்ட பல ஊறுகாய்களை நான் தயார் செய்கிறேன்.

ஊறுகாய் தவிர, சட்னி பவுடர், சாம்பார் மசாலா தூள், ரசம் மசாலா தூள் மற்றும் கரம் மசாலா தூள் ஆகியவற்றை தயாரிக்கிறேன். ஊறுகாயின் விலை ரூ.50 (250 கிராமுக்கு) முதல் ரூ.800 வரை (1 கிலோகிராம்) விற்கப்படுகிறது.


சமூக ஊடகங்கள் மூலம் எனக்கு இன்றுவரை பல ஆர்டர்கள் வந்துள்ளன. நேர்மையான மாத வருமானத்தைப் பெற இது எனக்கு உதவியது. எனது ஊறுகாய் வணிகத்தின் மூலம் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அதிகமானவர்களை நான் அறிந்து கொண்டேன்.

மாற்றுத்திறனாளி

ராணுவத்தினர் மற்றும் என்.ஆர்.ஐ மூலமாக எனக்கு பெரும்பாலானா ஆர்டர்கள் கிடைத்துள்ளன. அவர்கள் நான் தயாரிக்கும் மீன் மற்றும் மாட்டிறைச்சி ஊறுகாயை விரும்பி வாங்கி ருசிக்கிறார்கள்.

“சாப்பாட்டுக்கு எந்த வித குழம்பும் இல்லாமல், ஊறுகாயை வைத்தே சாப்பிடுகிறோம்,” என்று அவர்கள் கூறுவதை கேட்கும்போது மகிழ்ச்சியாக இருக்கும்,” என்கிறார் டீஜா.

வாழ்த்துகள் டீஜா!


(டீஜாவின் சில ஊறுகாய்களை நீங்கள் முயற்சிக்க விரும்பினால், உங்கள் ஆர்டரை வைக்க இந்த எண்ணை - 7902375735 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.)


தகவல் மற்றும் படங்கள் உதவி - thebetterindia