1.25 கிலோ ஜாரை தூக்கி சாதனை படைத்துள்ள மாற்றுத்திறனாளி பெண்!
கொச்சியைச் சேர்ந்த அஞ்சு ராணி ஜாய் 1.25 கிலோ எடை கொண்ட கிரிஸ்டல் ஜார்களை கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரலால் ஒன்றரை நிமிடங்கள் வரை தூக்கி வைத்து சாதனை படைத்துள்
32 வயதான அஞ்சு ராணி ஜாய் பல்வேறு திறன்கள் கொண்டவர். பிறவிக் குறைபாடு காரணமாக இவரால் நடக்கமுடியாது என்றாலும் மாடலிங், தியேட்டர், வணிகம் என பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருகிறார்.
மாற்றுத்திறனாளியான இவர் 1.25 கிலோ எடை கொண்ட கிரிஸ்டல் ஜார்களை கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரலால் ஒன்றரை நிமிடங்கள் வரை தூக்கி வைத்து சாதனை படைத்துள்ளதாக ஏஎன்ஐ தெரிவிக்கிறது.
அஞ்சு; பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் டிவி நிகழ்ச்சி ஒன்றைக் கண்டு வியந்துள்ளார். அந்த நிகழ்ச்சியில் ஒரு நபர் தனது கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரலால் கிளாஸ் ஒன்றைத் தலைகீழாகப் பிடித்துக்கொண்டிருந்தார். அதைக் கண்ட அஞ்சு அதேபோன்று முயற்சி செய்துள்ளார்.
இந்த செயலை மேற்கொள்ள மிகுந்த கவனம் மட்டுமின்றி திறனும் அவசியம்.
“நான் இதை தினமும் வீட்டில் பயிற்சி செய்யத் தொடங்கினேன். எனக்கு அதிக ஓய்வு நேரம் கிடைக்கும் என்பதால் எனக்கு ஆர்வம் இருக்கும் விஷயங்களில் என்னால் கவனம் செலுத்த முடிந்தது. ஜார்கள் கீழே விழாமல் பேலன்ஸ் செய்ய பழகிய பிறகு மெல்ல எடையை அதிகரித்தேன். என்னுடைய நண்பர்களும் உறவினர்களுமே என்னுடைய முதல் பார்வையாளர்கள். அவர்கள்தான் உலக சாதனைக்கு விண்ணப்பிக்குமாறு என்னை ஊக்குவித்தனர்,” என்று Edex Live இடம் அஞ்சு தெரிவித்துள்ளார்.
கொச்சியைச் சேர்ந்த அஞ்சு தனது இலக்கை எட்ட உடலில் உள்ள குறைபாடு ஒருபோதும் தடையாக இருக்க அனுமதிக்கவில்லை. இவர் வீட்டிலிருந்தே பி.ஏ. சமூகவியல் படித்துள்ளார்.
இதுமட்டுமின்றி இவர் Plavila TV என்கிற யூட்யூப் சானலையும் நடத்தி வருகிறார். `ஒரு நல்ல கோட்டயம்காரன்’, `இன்ஷா’ ஆகிய இரண்டு மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். கதாப்பாத்திரத்தை நன்கு உள்வாங்கி இவர் வெளிப்படுத்திய நடிப்பு பாராட்டைப் பெற்றுத் தந்தது.
முதுகெலும்பு சாய்ந்திருக்கும் நிலையிலும் நரம்பு மண்டலம் வலுவிழந்து காணப்படும் நிலையிலும் அஞ்சு கடின உழைப்பாலும் மன உறுதியாலும் சாதனை படைத்துள்ளார்.
கட்டுரை: THINK CHANGE INDIA