உதவ யாருமில்லை; ஆட்டோ ஓட்ட ஆளில்லை; இரவில் பிரசவ வலியால் துடித்த பெண்ணைக் காப்பாற்றிய காவலர்!

By YS TEAM TAMIL|11th Jan 2021
பிரசவ வலியால் துடித்த பெண்ணை காப்பாற்றிய காவலர்!
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

நள்ளிரவில் பிரசவ வலியால் துடித்துக்கொண்டிருந்த பெண்ணை காப்பாற்றி பல்வேறு தரப்பினரின் பாராட்டைப் பெற்றுள்ளார் புதுச்சேரி காவலர் ஒருவர்.


கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரியை அடுத்துள்ள விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் பகுதியில் ஒருவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானது. இதன்காரணமாக விழுப்புரம் – புதுச்சேரி எல்லைப்பகுதிகள் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது. இதன்காரணமாக புதுச்சேரி மற்றும் தமிழக எல்லைகளில் உள்ளே, வெளியே செல்ல அனுமதியில்லை. அப்பகுதி முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் வந்தது.


இந்நிலையில் தான் புதுச்சேரி முத்தியால்பேட்டை எல்லைப்பகுதியில் காவலர் கருணாகரன் (வயது 30) என்பவர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, இரவு 11.45 மணி அளவில் நிறைமாத கர்ப்பிணியான தங்கள் மகள் வலியால் துடிப்பதாகவும், அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல உதவுமாறும் காவலர் கருணாகரனிடம் அவரது பெற்றோர்கள் கண்ணீர்மல்க கோரிக்கை விடுத்தனர். ஆனால், அப்பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லை. யாராவது அந்தபக்கமாக வருகிறார்களா என உதவிக்கு ஆள்களைத் தேடியுள்ளார் காவலர் கருணாகரன்.

police help

அப்போது உடனே எதிர்புறம் சற்று தூரத்தில் ஆட்டோக்கள் நின்றுகொண்டிருப்பதைப் பார்த்த அவர், உடனே ஓடிச்சென்று பிரசவத்துக்காக மருத்துவமனை செல்ல வேண்டும் என்று கூற அதற்கு அந்த ஆட்டோ ஓட்டுநர், ‘எனக்கு வயதாகிவிட்டது. ஆட்டோ ஓட்ட தெரியாது. ஆட்டோக்களை வாடகை விட்டுதான் பணம் சம்பாதித்தது வருகிறேன்’ என்று கூறியதால் என்ன செய்வதென்று தெரியவில்லை.


உடனே அவரிடம் ஆட்டோ சாவியை வாங்கிக்கொண்டு, ஆட்டோவை தானே ஓட்டிச்சென்று வீட்டில் வலியால் துடித்துக்கொண்டிருந்த கர்ப்பிணிப் பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார் காவலர் கருணாகரன். மருத்துவமனை நெருங்க, நெருங்க அந்த பெண் வலியால் துடித்துள்ளார். மகப்பேறு மருத்துவமனையின் வாசலில் வலி கடுமையாக, உடனே அங்கிருந்து மருத்துவர்கள் அவரை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்குள் சென்று பிரசவம் பார்த்துள்ளனர். அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.இது குறித்து காவலர் கருணாகரன் கூறுகையில்,

"மகள் பிரசவ வலியால் துடிக்கிறாள் என்று அவரின் தாய் என்னிடம் கூறும்போது என்னால் என்ன உதவி செய்ய முடியும் என மனதிற்குள் யோசித்தேன். சிறிய வயதில் ஒருமுறை ஆட்டோ ஓட்டியிருக்கிறேன். அந்த நம்பிக்கை தான் அவரை பத்திரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியும் என்ற நம்பிக்கையைக் கொடுத்தது,” என்று தெரிவித்துள்ளார்.