திரையில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ - நெட்டிசன்கள் ரியாக்ஷன் என்ன?
இந்த படத்தை பார்த்து, தங்களது கருத்துகளை சமூக வலைதளங்கள் மூலமாக தெரிவித்துள்ள நெட்டிசன்களின் தொகுப்பு!
தமிழ் திரையுலகின் மிக முக்கியப் படைப்பாக பார்க்கப்படுகிறது இயக்குனர் மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன் 1’ (PS-1) திரைப்படம்.
பல்வேறு திரை ஆளுமைகள் முயன்று தோல்வியை தழுவிய அதில் மணிரத்னம் வெற்றி பெற்றுள்ளார். இதோ மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்தை நடிக்க வைத்து பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி, இப்போது ரிலீசும் செய்துவிட்டார். தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் இந்த படம் வெளியாகி உள்ளது. குறிப்பாக தமிழகத்தில் இந்த படம் திரையிடப்பட்டுள்ள அரங்குகள் அனைத்தும் ஹவுஸ்-ஃபுள்.
இந்த நிலையில், இந்த படத்தை பார்த்து, சமூக வலைதளங்கள் மூலமாக நெட்டிசன்கள் தெரிவித்துள்ள கருத்துகளின் தொகுப்பு இதோ.
விஜே கிருஷ்ணா தனது ட்வீட்டில்,
ரசிகர்களை கதை களத்திற்குள் ஒன்றச் செய்யும் முதல் பாதி. கதாபாத்திரங்களை திரைக்கதைக்குள் கட்டமைத்த விதம் அற்புதம். புத்தகத்தை படிக்காதவர்களும் கதையை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது. மணிரத்னம் லெஜெண்ட் என்பதை நிரூபித்துள்ளார்.
நவீன்: சோழ தேசக் சகாப்தத்திற்கு பார்வையாளர்களை காலம் கடத்தி செல்கிறது திரைக்கதை. மணிரத்னத்தின் ஆகச்சிறந்த படைப்பு. VFX மற்றும் ஒளிப்பதிவும் அற்புதம். அதில் எந்தவித சமரசமும் படக்குழு செய்யவில்லை.
குமார்: மணிரத்னத்தின் கதை சொல்லும் விதம் இங்கு கைகொடுத்துள்ளது. இது பீரியட் டிராமா ரக திரைப்படம். ஆக்ஷனை காட்டிலும் அது தான் படத்தை தாங்கி நிற்கிறது. இதைத் தான் இந்த படத்தில் ரசிகர்கள் எதிர்பார்க்க முடியும்.
ரசனையாளன்: அடுத்த பாகத்திற்கு சுவாரஸ்யம் சேர்க்கும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. பாத்திரங்கள் அனைத்தும் அசல் கதைக்கு உகந்த வகையில் சரியாக எழுதப்பட்டுள்ளது. கதையின் ஓட்டம் நம்ம வியக்க செய்யும்.
நீலமேகம்: நல்ல படம்.. பாகுபலி அளவுக்கான தரம்.. அருண்மொழிவர்வன் கேரக்டரை பாக்க பாக்க.. பயங்கரமா இருக்கு. கரிகாலன் கதைய கேட்கும் போது.. ஏதோ ராவணன் படத்தோட காட்சிகள் போல ஒரு ஃபீல் வந்துச்சு. நந்தினி மாஸ். குந்தவை பக்கா மாஸ். படம் ஆரம்பிச்சதும் வசனம்லாம் பழங்காலம் போல இல்லையேன்னு தமாசா ஆரம்பிச்சிது. ஆனா போகப் போக வசனம் சரியா அமைஞ்சிதா? இல்ல.. இந்த மாதிரியான பேச்சுமொழிக்கு பழக்கப்பட்டுட்டனான்னு தெரில. பட் அடுத்த அரை மணி நேரத்துல பிக்கப் ஆகிடுச்சு, எங்கையுமே போரடிக்கல.. வந்தியத்தேவன் கேரக்டருக்கு எதோ வலுக்கட்டாயமா நகைச்சுவைய புகுத்துன மாதிரி லைட்டா ஒரு ஃபீல்.
சிதம்பரம் செல்வன்: மணிரத்னம் தனது சிறந்த படைப்பை கொடுத்துள்ளார். நடிகர்களிடம் இருந்து அவர்களது தேர்ந்த நடிப்பை பெற்றுள்ளார். அவரது முயற்சிக்கு தலைவணங்குகிறேன். இதனை நான் ஏன் சொல்கிறேன் என்பது கதையை படித்தவர்களுக்கு மட்டுமே தெரியும். அனைவரும் இந்த வரலாற்று படத்தை பார்த்து, அனுபவிக்க வேண்டும். படக்குழுவுக்கு நன்றி. இதைவிட சிறப்பான படைப்பை கொடுக்க முடியாது.
PS-1 Review: 'பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் ‘பாகுபலி’ -யை எதிர்ப்பார்க்காதீர்கள்!
Edited by Induja Raghunathan