‘பொன்னியின் செல்வன்’ பல ஆண்டு கனவு - மணிரத்னம் உதிர்த்த 10 முத்துக்கள்!

By ஜெய்
September 28, 2022, Updated on : Wed Sep 28 2022 12:01:32 GMT+0000
‘பொன்னியின் செல்வன்’ பல ஆண்டு கனவு - மணிரத்னம் உதிர்த்த 10 முத்துக்கள்!
‘பொன்னியின் செல்வன் பாகம் 1’ ‘PS-1' வெளிவரும் வேளையில், இப்படம் குறித்து இயக்குநர் மணிரத்னம் ஆங்காங்கே உதிர்த்த முத்துக்களில் 10 இவை...
  • +0
    Clap Icon
Share on
close
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

‘பொன்னியின் செல்வன்’ - PS-1


தமிழ் சினிமாவில் ‘பொன்னியின் செல்வன்’ சரித்திர நாவலைப் படமாக்க பல முயற்சிகள் நடந்திருக்கின்றன. பெரிய பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் முயற்சி செய்து சில பல காரணங்களால அந்த முயற்சிகள் கைகூடாமல் போயிருக்கின்றன.


நினைத்ததை முடிப்பவன் என்று புகழப்படும் எம்ஜிஆரின் கனவுப் படைப்பாவும் பொன்னியின் செல்வன் இருந்துருக்கிறது. எப்படியாவது பொன்னியின் செல்வன் நாவலை படமாக எடுக்க வேண்டும் என்று அவர் துடித்தார்.


முறைப்படி உரிமை வாங்கி, ப்ரீ ப்ரொடக்‌ஷன் ப்ளான் எல்லாம் பண்ணி எப்படியும் நான்கைந்து வருஷம் அதற்காகவே நிறைய ட்ராவல் பண்ணினார். ஆனால், காலம் அதற்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தரவில்லை.


ஒரு கட்டத்துக்கு அப்புறம் அரசியல்லையும் அவர் முழு நேரம் ஈடுபட வேண்டியதாகப் போனதால அவரால் கடைசி வரைக்கும் பொன்னியின் செல்வன் படத்தை எடுக்க முடியவில்லை. அப்படியான கனவுப் படைப்பை இதோ நம் கண்முன்னே கொண்டு வந்திருக்கிறது மணிரத்னம் அண்ட் கோ.

Ponniyin selvan

‘பொன்னியின் செல்வன் பாகம் 1’ ‘PS-1' வெளிவரும் வேளையில், இப்படம் குறித்து இயக்குநர் மணிரத்னம் ஆங்காங்கே உதிர்த்த முத்துக்களில் 10 இவை...

சாத்தியமானது எப்படி?

“எனது முதல் நன்றி கல்கிக்கு. நான் கல்லூரி செல்ல ஆரம்பித்தபோது பொன்னியின் செல்வனைப் படித்தேன். அன்றிலிருந்து அது என் மனதை விட்டு போகவில்லை. கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. இது எம்ஜிஆர் செய்திருக்கவேண்டிய படம். இன்றுதான் எனக்கு அந்தப் படம் ஏன் நின்றது எனப் புரிந்தது. எங்களுக்காக எம்ஜிஆர் இந்தப் படத்தை விட்டுவிட்டுச் சென்றிருக்கிறார்."


இந்தப் படத்தை எடுக்க பல பேர் முயற்சி செய்திருக்கிறார்கள். 1980களில் ஒரு முறை, 2000, 2010 என நானே பொன்னியின் செல்வனை படமாக எடுப்பதற்கு மூன்று முறை முயற்சி செய்திருக்கிறேன். அதனால், இது எவ்வளவு பெரிய பொறுப்பு என்பது எனக்குத் தெரியும்.

"எல்லோராலும் பொன்னியின் செல்வன் நேசிக்கப்படுகிறது என்பதும் தெரியும். நாவலைப் படித்தவர்கள் எல்லாம் அதில் தேர்ந்தவர்களாக இருப்பார்கள். நாவல் மீது பொசசிவ் உடன் இருப்பார்கள். நானும் அவர்களைப் போல தான். ஆனாலும் நான் என் படக்குழுவினர் ஒவ்வொருவரின் உதவி இல்லாமல் இதனைச் செய்திருக்க முடியாது.”
Ponniyin Selvan

ஓர் உந்துதல்

“ஒரு விதத்தில், ராஜமௌலி நம் அனைவருக்கும் ஒரு கதவைத் திறந்து, இந்த மாதிரியான படத்தை உருவாக்க முடியும் என்பதைக் காட்டியுள்ளார். ஒரு படத்தை இரண்டு பகுதிகளாக கதை சொல்லி வெற்றி பெறலாம் என்பதை அவர் நமக்குக் காட்டியுள்ளார்.

”பாகுபலி மூலம் இது சாத்தியமானது. எனவே நான் அவருக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். பாகுபலி வடிவத்தில் ராஜமௌலி ஒரு பிரம்மாண்டமான பணியை வெற்றிகரமாக முடித்த விதத்தைப் பார்த்த பிறகே, பொன்னியின் செல்வன் படத்தில் நான் பணியாற்றத் தொடங்கினேன்.”

எழுத்து Vs சினிமா

“கல்கி தொட்டதையெல்லாம் நாங்களும் தொட ஆசைப்பட்டோம். இதை 10 பாகங்களாக வேண்டுமானாலும் பண்ணலாம். சினிமாவாகச் செய்யும்போது சில விஷயங்கள் இருக்கின்றன. இது ஒரு எக்னாமிக் மீடியா. அதனோட பலம், மினிமம் இடத்தில் மேக்சிமம் கொண்டு வரணும்.”


பொன்னியின் செல்வன் நாவலின் சாராம்சத்தை எடுத்து, அதை எந்த அளவுக்குக் கோர்வையாகச் சொல்ல வேண்டுமோ அப்படிச் சொல்லியிருக்கோம். நாவலில் ஒரு விஷயம் சொல்லிட்டு இருக்கும்போது, ‘அங்கே வந்தியத்தேவனை விட்டுட்டு வந்துட்டேன்’னு கல்கி பின்னாடி போயிடுவார். அங்கே கதை சொல்லிட்டு அப்புறம் இங்கே வருவார். வாசகரை எப்பவும் கூட சேர்த்துக்கிட்டே போவார் கல்கி. சினிமாவில் அப்படிச் செய்ய சுதந்திரம் கிடையாது. அதற்குக் கூடுதலாக முயற்சி பண்ணி இயல்பாகச் செய்திருக்கிறேன்.”

கதாபாத்திர தெரிவு

பொன்னியின் செல்வன் நாவலைப் படிக்கும்போது, அதைப் படமா எடுக்க வேண்டும் என்று நினைத்துப் படிக்கவில்லை. படம் பண்ணும்போது இந்த கேரக்டர்களில் இவர்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்து வேலைகளை ஆரம்பித்தோம். அது சரியாக இருந்தது.

“எல்லா நடிகர்களுமே படத்தில் தங்களை கதாபாத்திரமாகவே மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். பொன்னியின் செல்வனில் நந்தினி கதாபாத்திரத்துக்கு முதலில் யோசிக்கும்போது, இந்தி நடிகை ரேகாவை நினைத்திருந்தோம். அப்புறம் ஐஸ்வர்யா ராய்தான் சரியாக இருப்பார்கள் என்று நினைத்தோம். அவரையே நடிக்க வைத்தோம்.”

சந்தித்த முக்கிய சவால்...

“கத்தி, ஈட்டி, வாள்னு ஆராய்ச்சிகள் மூலம் தேடிக் கண்டுபிடித்து, நிறைய தயார் செய்தோம். பழைய இரும்புக் கவசம் எல்லாம் டிராமாவிலிருந்து வந்தது. சாதாரணமாக அதைப் போட்டுக்கொண்டு சண்டையெல்லாம் போடவே முடியாது. அதனால், அதையும் தேடிக் கண்டுபிடித்து செய்தோம்.”


”அதை இங்கே செய்ய ஆள் கிடையாது. டெல்லிக்குப் போய் ஆளைப் பிடித்து இங்கே கொண்டுவந்து சேர்த்தோம். எல்லாத்தையும் கண்டுபிடிக்கணும். அதைப் பல மடங்காகவும் செய்யணும். காகிதத்தில் எல்லாத்தையும் சரி பண்ணி எல்லா முக்கிய முடிவுகளையும் முன்னாடியே எடுக்கணும். அப்படி சரி பண்ணி வைத்திருந்ததால் நல்லபடியா கொண்டுவந்திட்டோம்.”

Maniratnam

ஜெயமோகன், குமரவேல் பங்களிப்பு

எழுத்தாளர் ஜெயமோகன் அவர் பங்களிப்பு ரொம்ப அதிகம். 5 பாகக் கதையை 3 மணி நேரத்துக்குள்ள சொல்லணும். இந்தக் கதையில நான் பயந்த விஷயம், வசனங்கள். எளிமையா இருக்கணும்னு நினைச்சேன். என்னோட இந்தப் பயத்தை ஜெயமோகன் ரொம்ப எளிமையா சரி பண்ணிட்டார்.

”நாவலில் கல்கி ஒவ்வொரு கேரக்டரையும், அழகா படைச்சிருப்பார். சுந்தரச் சோழனை விவரிக்கணும்னா, நாவலில் நிறைய எழுத முடியும். சினிமாவுல காட்டும்போது அவர் பேசற விஷயங்கள், உடல் மொழி, இடம் வச்சுதான் சொல்ல முடியும். இந்த மாதிரி சில விஷயங்கள்தான் அதைக் காட்டிக்கொடுக்கும். அதுல குமரவேலும் ஜெயமோகனும் சிறப்பாகப் பண்ணியிருக்காங்க. குமரவேலுக்கு ஐந்து பாகத்தில் எந்த சந்தேகம் கேட்டாலும் தெரியும். அவர் நாவலில் அத்துப்படியாக இருந்தார். அவர் உதவி முக்கியமானது.”

ஏ.ஆர்.ரஹ்மானின் இசை...

“ரஹ்மான் எல்லோரும் போகிற வழியில் போகாமல், எளிதான வழியிலும் போகாமல், புதிதாக ஒன்றைத் தேடுவார். ஆரம்பத்தில் அதற்குக் கொஞ்சம் நேரமாகும். அதுக்குள்ளே ஒன்றைக் கண்டுபிடித்து அதில் வளர்வார். அவர் தந்த இசை, குவாலிட்டி இதுவரை பார்த்த சரித்திரப் படங்களிலிருந்து வித்தியாசத்தைக் கொடுத்திருக்கிறது.”

ரவிவர்மனின் ஒளிப்பதிவு...

“பிரமாதம். நாங்கள் எவ்வளவு உழைப்பைப் போட்டோமோ அதற்கு மேலே ரவிவர்மன் போட்டாகணும். எப்பவும் ரெடியா இருப்பார். நிறைய நடிகர்கள். யாரையும் காக்க வைக்க முடியாது. நாங்கள் நிற்கும்போது அவர் ஓடணும். நாங்க ஓடும்போது அவர் பறக்கணும். அழகாகவும் எடுக்கணும். குறைந்த அவகாசத்தில் நிறைவு வேணும். அப்படியே செய்தார் ரவி. அவரால்தான் அது முடியும்.”
PS-1

ரஜினிக்கு பழுவேட்டரையர் ரோல் தராதது ஏன்?

“பொன்னியின் செல்வனில் பழுவேட்டரையராக ரஜினியை நடிக்க வைத்திருந்தால், கதையை மாற்ற வேண்டியிருக்கும். ரஜினியிடம் ரசிகர்கள் எதிர்பார்ப்பதை தள்ளி வைத்துவிட்டு படம் எடுக்க முடியாது. ரஜினியை வைத்து பழுவேட்டரையர் கதையை தனியாகவே எடுக்கலாம்.”

வைரமுத்து ஏன் இல்லை?

“பல நூற்றாண்களாக இருக்கும் மொழி, தமிழ். இதில் தமிழ் இயக்குநர்கள் வருவார்கள் போவார்கள். தமிழின் சொல் வளமை அளப்பரியது. பல கலைஞர்கள், இயக்குநர்கள், பாடலாசிரியர்கள், கவிஞர்கள் உள்ளிட்டோரை இத்தனை நூற்றாண்டுகளாக தமிழ் பார்த்துவிட்டது.


கருணாநிதியால் வைரமுத்து பக்கத்தில் உட்கார வைக்கப்பட்ட ஒரு கவிஞர். அவருடன் இணைந்து நிறைய படங்களில் பணியாற்றியிருக்கிறோம். அவரின் கவிதைகளை ரஹ்மானுடன் இணைந்து பாடலாக்கியிருக்கிறோம். வைரமுத்துவும் மிகவும் சிறப்பானவர்.

”அவரைத் தாண்டியும் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் விதமாகவும், புதியவர்களோடு பணியாற்ற வேண்டும் என்ற எண்ணத்திலும் பொன்னியின் செல்வன் படத்தை உருவாக்கியிருக்கிறோம்." 

Edited by Induja Raghunathan