நீட் தேர்வில் சாதனை படைத்த ஏழைத் தொழிலாளிகளின் வாரிசுகள்; வறுமையை முறியடித்து வெற்றியை சூடியது எப்படி?
நீட் தேர்வு தேவையா? இல்லையா? என்ற நீண்ட விவாதம் ஒருபுறம் சென்று கொண்டிருக்கும் அதே சமயத்தில், மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் நீட் தேர்வில் வென்று தங்களது மருத்துவ கனவை எட்டிப்பிடித்துள்ளனர். ஏழ்மையிலும் விடாமுயற்சியுடன் ஏழை கூலித்தொழிலாளர்களின் வாரிசுகள் சாதித்த கதையை விளக்கு
நீட் தேர்வு தேவையா? இல்லையா? என்ற நீண்ட விவாதம் ஒருபுறம் சென்று கொண்டிருக்கும் அதே சமயத்தில், மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் நீட் தேர்வில் வென்று தங்களது மருத்துவ கனவை எட்டிப்பிடித்துள்ளனர்.
ஏழ்மையிலும் விடாமுயற்சியுடன் ஏழை கூலித்தொழிலாளர்களின் வாரிசுகள் சாதித்த கதையை விளக்குகிறது இந்த தொகுப்பு...
கூலி வேலை செய்யும் தாயின் மகள்:
மயிலாடுதுறை சாக்கியம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் தனியார் கால் டாக்ஸி நிறுவனத்தில் தற்காலிகப் பணியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சுதா கூலி வேலைக்கு சென்று வருகிறார். இந்த தம்பதியின் மகள் கனிமொழி, நீடூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு பயின்றுள்ளார். நடந்து முடிந்த 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 545 மதிப்பெண்கள் பெற்று, அரசுப் பள்ளிகளில் மாவட்டத்திலேயே முதலிடம் பிடித்துள்ளார்.
கனிமொழிக்கு மருத்துவராக வர வேண்டும் என்ற கனவு இருந்தது. இருப்பினும், குடும்ப சூழ்நிலையால் நீட் பயிற்சி பெற போதிய வசதியின்றி தவித்து வந்துள்ளார். அவருக்கு மயிலாடுதுறை ரோட்டரி சங்கம் சார்பில் கட்டணமின்றி நீட் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அங்கு பயிற்சி பெற்ற மாணவி நீட் தேர்வை எழுதியுள்ளார். சமீபத்தில் நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், 279 மதிப்பெண்கள் பெற்று அரசுப் பள்ளி மாணவ மாணவிகளில் முதல் மதிப்பெண் பெற்றுள்ளார்.
“எனது வெற்றிக்கு பெற்றோர் முக்கியக் காரணம். நீட் தேர்வில் வெற்றி பெற தமிழாசிரியர் மீனாட்சி, தலைமையாசிரியர் ஆகியோர் எனக்கு மிகவும் உறுதுணையாகவும், ஊக்கம் அளிக்கும் விதமாகவும் செயல்பட்டனர்,” எனத் தெரிவித்துள்ளார்.
கட்டிடத் தொழிலாளி மகள் படைத்த சாதனை:
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மட்டாங்காடு பகுதியை சேர்ந்தவர் முருகன் கொத்தனாராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சித்ரா. இவர்களது மகளான அன்னப்பூரணி அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படித்தார். கட்டிட தொழிலாளியின் மகளான இவருக்கு மருத்துவர் ஆக வேண்டும் என்பதே கனவு.
எனவே, சிவகங்கை மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்ட நீட் தேர்வு பயிற்சி மையத்தில் படித்துள்ளார். சமீபத்தில் நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், 700க்கு 538 மதிப்பெண்கள் பெற்று சிவங்கை மாவட்டத்திலேயே முதல் மாணவியாகவும், நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கான பட்டியலில் மாநில அளவில் 2வது இடத்தையும் பிடித்து அசத்தியுள்ளார்.
இதனை அறிந்த அப்பகுதி சமூக ஆர்வலர்கள், மாணவிக்கு தங்களது பாராட்டுக்களைக் கூறி வருகின்றனர். அன்னப்பூரணி ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில்,
“சின்ன வயதில் இருந்தே எனக்கு மருத்துவராக வேண்டும் என்பது கனவு. நான் படித்த பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்கள் அனைவரும் எனக்கு உதவினர். எனது கிராமம் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளதால், மருத்துவராக இங்கேயே சேவை செய்ய விரும்புகிறேன்,” எனக்கூறியுள்ளார்.
யூடியூப்பில் மூலம் சாதித்த கூலித்தொழிலாளி மகன்:
புதுக்கோட்டையைச் சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகன் ஒருவர் யூடியூப் மட்டும் பார்த்து பயிற்சி பெற்று நீட் தேர்வில் மாவட்டத்தில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, தங்கமணி தம்பதியினரின் மகன் அறிவு நிதி. இவர் விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு தேர்வில் 525 மதிப்பெண் எடுத்து பள்ளியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்திருந்தார்.
பெற்றோர்கள் இருவரும் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வருவதால், நீட் தேர்வுக்கு பயிற்சி பெறுவது அறிவு நிதிக்கு மிகப்பெரிய சவாலாக இருந்துள்ளது. அப்போது தான் அறிவு நிதியிடம் நீண்ட காலமாகவே இருந்து வந்த சோசியல் மீடியா மீதான ஈர்ப்பு பயன்பட ஆரம்பித்துள்ளது.
நீட் தேர்வு பயிற்சி புத்தகம் கூட வாங்க காசு இல்லாத அறிவு நிதி, யூடியூப்பில் வெளியாகும் நீட் தேர்வு பயிற்சி வீடியோக்களை மட்டுமே பார்த்து தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். அதன் பலனாக தற்போது நடந்து முடிந்த நீட் தேர்வில் 348 மதிப்பெண் பெற்று மாவட்டத்தில் முதல் மாணவனாக வெற்றி பெற்றுள்ளார்.
தான் பயாலஜி பாடத்தை மட்டுமே படித்து நீட் தேர்வில் சாதித்ததாக தெரிவித்துள்ள அறிவு நிதி, பிற மாணவர்கள் இயற்பியல் மற்றும் வேதியல் பாடங்களிலும் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
தாளவாடி மாணவியின் சாதனை:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தாளவாடி மலைப்பகுதியில் அமைந்துள்ள பாரதிபுரம் கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் - கவிதா தம்பதியின் மகள் திவ்யா பாரதி. இவரது தந்தை கூலித்தொழிலாளியாக இருந்தாலும் மகள் நன்றாக படிக்க வேண்டும் என்பதற்காக அருகேயுள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் படிக்க வைத்துள்ளார்.
பெற்றோரின் கஷ்டத்தையும், குடும்ப சூழ்நிலையையும் உணர்ந்து படித்த திவ்யா பாரதி, நீட் தேர்வில் 434 மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். மாணவியின் பெற்றோர் தனது மகளின் டாக்டர் கனவு நிறைவேறியதை எண்ணி மட்டற்ற மகிழ்ச்சியில் உள்ளனர்.
'ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தது' - வெற்றி ரகசியம் பகிர்ந்த நீட் தேர்வில் முதல் முறை வென்ற தோடா மாணவி!