தமிழிலே இனி நீங்கள் டேட்டிங் செய்யலாம்: சிங்கிள்களை அழைக்கும் ‘அன்பே’ ஆப்!
இந்திய டேட்டிங் செயலியான Aisle, இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள தமிழர்களுக்கான ’அன்பே’ டேட்டிங் சேவையை அறிமுகம் செய்துள்ளது.
சிங்கிளாக இருக்கும் தமிழர்களுக்கு உற்சாகம் அளிக்கக் கூடிய வகையில், இந்திய டேட்டிங் செயலியான Aisle, ’அன்பே’ எனும் தமிழ் டேட்டிங் செயலியை அறிமுகம் செய்துள்ளது. உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் அன்பே (Anbe) ஆப் மூலம் காதல் துணையைத் தேடிக்கொள்ளலாம்.
இணைய உலகில் டேட்டிங் செயலிகள் பிரபலமாக இருக்கின்றன. சர்வதேச அளவில் முன்னிலை வகிக்கும் டிண்டர், பம்பிள் போன்ற ஆப்’கள் இந்தியாவிலும் அறிமுகம் ஆகியிருக்கின்றன.
இந்தப் பின்னணியில், இந்தியர்களுக்காக இந்தியாவிலேயே உருவான செயலி எனும் வர்ணனையோடு பெங்களூருவைச்சேர்ந்த ‘Aisle’ செயலி அறிமுகமானது. உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களை மனதில் கொண்டு இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
டேட்டிங்கில் பல ரகம் இருப்பது போல, டேட்டிங்கில் ஈடுபடுபவர்களின் நோக்கமும் பல வகையாக இருந்தாலும், உறவைத் தேடிக்கொள்வது எனும் டேட்டிங் நோக்கத்தில் தெளிவாக இருப்பவர்களுக்கான செயலியாக Aisle தன்னை முன்வைக்கிறது.
ஐந்து முன்னணி டேட்டிங் செயலிகளில் ஒன்றான Aisle, இப்போது உள்ளூர் மொழிகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. ஏற்கனவே மலையாளம் பேசுபவர்களுக்காக தனி டேட்டிங் செயலியை அறிமுகம் செய்த நிலையில், தற்போது தமிழர்களுக்கான ‘அன்பே’ செயலியை அறிமுகம் செய்துள்ளது.
21 வயது முதல் 40 வயதான தமிழ் சிங்கள்கள் பாதுகாப்பான சூழலில் தங்களுக்குள் உரையாட பொருத்தமான துணையைத் தேடிக்கொள்ள உதவும் வகையில் அன்பே செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
“இந்தியர்கள் எப்போதுமே தீவிர உறவை நோக்கிலான டேட்டிங்கில் கவனம் செலுத்துகின்றனர். ஆங்கிலம் முக்கிய மொழியாக இல்லாத, நகரங்களில் இருந்து விலகிய பகுதிகளில் இது இன்னும் தீவிரமாக உள்ளது. எனவே, மலையாளம் பேசுபவர்களுக்கான செயலியை அடுத்து மேலும் விஷேசமான சேவையை அறிமுகம் செய்துள்ளோம்,” என்று Aisle நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சி.இ.ஓ ஏபில் ஜோசப் கூறியுள்ளார்.
”தமிழ்நாட்டில் இருந்து Aisle செயலியின் பயனாளிகள் வேகமாக வளர்ச்சி அடைந்தை அடுத்து, தமிழில் தான் அடுத்த உள்ளூர் ஆப் என்பது தெளிவானது. பல்வேறு பிராந்தியங்கள், மாநிலங்களுக்கான பிரத்யேக செயலிகளைத் தொடர்ந்து அறிமுகம் செய்வோம்,” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
அன்பே டேட்டிங் செயலி, வழக்கமான திருமணத் தகவல் இணையதளங்களுக்கு மாற்று சேவையை வழங்குகிறது. தமிழ் பேசுபவர்கள் முதல் முறை தயக்கத்தை உடைத்தெறிந்து பேச உதவும் அம்சம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை இந்த செயலி கொண்டுள்ளது. ஆடியோ அழைப்பு வசதி மற்றும் தனிப்பட்ட அழைப்புகளை அனுப்பும் வசதி ஆகியவற்றை இந்த ஆப் கொண்டுள்ளது.
Aisle செயலி உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறது. இதன் ஆறு மில்லியன் பயனாளிகளில், என்.ஆர்.ஐகள் 9 சதவீதம் என நிறுவனம் தெரிவிக்கிறது.
இப்போது, ஆர்வம் உள்ள தமிழர்களும், அன்பே செயலி மூலம் டேட்டிங் கலாச்சாரத்தில் இணையலாம்.