டாப் லிஸ்ட்டில் கலக்கும் தமிழ் பெண் யூட்யூபர்கள்...!
’யூட்யூப்’ எல்லாம் இனி டிரெண்ட் கிடையாது, வேற ஏகப்பட்ட வீடியோ ப்ளாட்ஃபார்ம்ஸ் வந்துருச்சு’ எனும் கதைகள் எல்லாம் புராணம் ஆகப் போகிறது. ஏப்ரல் பதினான்கு வெளியாகவிருக்கும் ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ன் கடைசி சீசனுக்கான ட்ரெயிலர் தொடங்கி, நெட்ஃப்ளிக்ஸுக்கான விளம்பரம் வரை எல்லாம் இன்னமும் யூட்யூபில் தான் வெளியாகிக் கொண்டிருக்கிறது. பிற வீடியோ ப்ளாட்ஃபார்ம்களின் வரவு யூட்யூபை ஒரு போதும் பாதிக்கப்போவதில்லை என்பதை அதில் வளர்ந்து வரும் யூட்யூப் கலைஞர்கள் நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்கள்.
சர்வதேச அளவில் ‘சூப்பர்வுமன்’ லில்லி சிங், இந்திய அளவில் ‘மோஸ்ட்லீ சேன்’ பிரஜக்தா கோலி, நிகாரிகா என சில பெண் யூட்யூப் பிரபலங்கள் அறிமுகமாகி இருந்தாலும், தமிழ் யூட்யூப் சூழலில் தனியே சேனல் நடத்தும் பெண்கள் பெரிய அளவில் தெரிவதில்லை.ஆனால், காமெடி ஸ்கெட்சுகள், சமையல் குறிப்புகள், அழகுக் குறிப்புகள், மேக்-அப், நடனம், கைவினைப் பொருட்கள் என ஏகப்பட்ட தமிழ் யூட்யூப் சேனல்களை பெண்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழ் யூட்யூப் சூழலில் தவிர்க்க முடியாத சில பெண் யூட்யூபர்களின் பட்டியல் :
1. The Cheeky DNA – சுபலக்ஷ்மி பரிதா
தமிழில் காமெடி ஸ்கெட்சுகள் செய்யும் சேனல்கள் நிறைய இருக்கின்றன. ஆனால், பெரும்பாலான சேனல்கள் ஆண்களால் நடத்தப்படுபவை, அவற்றில் சில கதாபாத்திரங்களில் பெண்கள் நடிப்பார்கள். அப்படியான நடிகர் சுபலக்ஷ்மியின் 'தி சீக்கி டி.என்.ஏ’ சேனல் மாறுபடுவது இந்த இடத்தில் தான்.
இந்த சேனலில் வெளியாகும் வீடியோக்களை எழுதி, நடித்து, ஷூட் செய்து, எடிட் செய்து என அத்தனை வேலைகளையும் தானே செய்கிறார்.
வழக்கமான யூட்யூப் பாணியில் வீடியோக்கள் வெளியிடுகிறார் என்றாலும் தன்னுடைய தனித்தன்மையையும் உள்ளே புகுத்துவதன் வழியே பார்வையாளர்களோடு ஒரு இணைப்பை உண்டாக்குகிறார். 2018-ல் நடந்த YouTube NextUp 2018-ல் இந்திய அளவில் வெற்றி பெற்ற 12 பேரில் சுபலக்ஷ்மியும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எண்பத்து ஒன்பது ஆயிரத்திற்கு மேலான சப்ஸ்கிரைபர்ஸை கொண்டிருக்கும் சீக்கி டி.என்.ஏ சேனல் 8,215,092 வ்யூஸ்களை கொண்டிருக்கிறது.
2. Vithya Hair and Make Up
இலங்கை தமிழரான வித்யா, ஜெர்மனியில் வளர்ந்தவர். இருபது வருடங்கள் லண்டனில் வாழ்ந்தவர் இப்போது மலேசியாவில் இருந்து மேக்-அப் கலைஞராக இயங்கிக் கொண்டிருக்கிறார். அடிப்படையில், சைக்காலஜி படித்த வித்யா, உண்மையில் தனக்கு அதில் பெரிய ஈடுபாடு இல்லை என்பதை உணர்ந்துவிட்டு, ஃபேஷன் துறையில் இறங்கினார். ஃபேஷன் குறித்த ப்ளாக்குகள் எழுதுவது, மாடலிங் செய்வது என இயங்கிக் கொண்டிருந்தவர், யூட்யூபில் ஹேர் ஸ்டைல், மேக்-அப், புடவை அணிவது குறித்த டுட்டோரியல் வீடியோக்கள் செய்து கொண்டிருக்கிறார்.
அழகான தமிழ் மொழி நடையால் பார்வையாளர்களை கவரும் வித்யா, தன்னுடைய டார்கெட் ஆடியன்ஸாக இவர் குறிப்பிட்டுச் சொல்வது ‘ஆசிய மக்களை’. யூட்யூப் முழுக்கவே ஏகப்பட்ட மேக்-அப் டுட்டோரியல்கள் இருந்தாலும், ஆசியர்களுக்கு என தனித்துவத்தோடு இருக்கும் சேனல்கள் வெகு குறைவு, அவற்றில் மிக முக்கியமானது ‘வித்யா ஹேர் அண்ட் மேக்-அப்’. இவருடைய சேனலை சப்ஸ்கிரைப் செய்திருப்பவர்கள் – 208,683; மொத்த வ்யூக்கள் - 24,187,438
3. Anitha Pushpavanam Kuppusamy - Viha
தமிழக அளவில் பிரபலமான பெயர்கள் தான் ‘அனிதா குப்புசாமி’ மற்றும் ‘புஷ்பவனம் குப்புசாமி’. கிராமிப் பாடல்களின் வழியே மக்களை சென்றடைந்தவர்கள் இவர்கள் இருவரும்.
இப்போது அனிதா குப்புசாமி நடத்திவரும் யூட்யூப் சேனல் ஒரு மில்லியன் அதாவது 10 லட்ச சப்ஸ்கிரைபர்ஸுகளுக்கு மேல் கொண்டிருக்கிறது என்பது ஆச்சரியமளிக்கிறது. இத்தனைக்கும், பிற பிரபல பாடகர்களை போல பிரம்மாண்ட செலவில் பாடல் ஆல்பம்கள் தயாரித்து வெளியிடுவதில்லை. சமையல் குறிப்புகள், அழகுக் குறிப்புகள், தினசரி உறவுச் சிக்கல்கள், செடிகள் குறித்தெல்லாம் பேசி வீடியோக்கள் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார் அனிதா குப்புசாமி.
அனிதா குப்புசாமியின் சேனலுக்கு இருக்கும் மொத்த வ்யூக்கள் 70,220,977.
4. Madras Samayal – ஏஞ்சலா ஸ்டெஃபி
ஏஞ்சலா ஸ்டெஃப்ஃபி சமையற்கலை பயின்ற நிபுணர் எல்லாம் கிடையாது. ஆனால், தமிழ் சமையல் சேனல் என்றாலே எல்லாருக்கும் உடனடியாக நினைவு வருவது ஸ்டெஃபியின் ’மெட்ராஸ் சமையல்’ சேனல் தான்.
நாகர்கோவிலை சேர்ந்த ஸ்டெஃபி, எஞ்சினியரிங் படிப்பை முடித்துவிட்டு, சில வருடங்கள் தொழில்நுட்பத்துறையில் வேலை செய்திருக்கிறார். பிறகு, திருமணம் முடிந்து அமெரிக்கா சென்றவர், கணவர் அளித்த ஊக்கத்தினால் தான் யூட்யூப் சேனல் தொடங்கினார்.
இன்று 1,618,808 சப்ஸ்கிரைபர்களோடு வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது ஸ்டெஃபியின் சேனல். மெட்ராஸ் சமையலுக்கு இருக்கும் மொத்த வ்யூக்கள் 269,909,332.
5. Sherin's Kitchen – ஷெரின் பானு
கோவையைச் சேர்ந்த ஷெரின் பானு, நடத்திவரும் 'ஷெரின்ஸ் கிட்சன்’ சேனலும், சமையல் விரும்பிகள் மத்தியில் பிரபலமாகவே இருக்கிறது. எளிய மொழிநடையில் இருக்கும் குறிப்புகளோடு விதவிதமான பதார்த்தங்களை செய்து தனது யூட்யூபில் பகிர்ந்து வருகிறார். சமையல் கலை பயின்ற நிபுணர்களின் தேர்ச்சியோடு இதை கையாள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமையல் மட்டுமல்லாமல், அழகுக் குறிப்புகளும், கைவினைப் பொருட்களும் செய்து அவற்றையும் யூட்யூபில் பகிர்கிறார். 96,079,900 வ்யூஸ் கொண்டிருக்கும் ஷெரின்’ஸ் கிச்சன் சேனலுக்கு 977,019 சப்ஸ்கிரைபர்கள் இருக்கிறார்கள்.
தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவால், வாய்ப்புகளைத் தேடி நாம் அலைய தேவையில்லாத நிலை இன்று உண்டாகியிருக்கிறது. கையில் ஒரு வித்தை இருந்தால் போதும், அதன் வழியே நமக்கான எதிர்காலத்தை நாம் உருவாக்கிக் கொள்ள முடியும் என்பது சாட்சியாக நூற்றுக்கணக்கான யூட்யூபர்கள் வளர்ந்து வருவதை நாம் பார்த்துக் கொண்டே இருக்கிறோம்.
இந்த பட்டியல் அதற்கான சின்ன சாம்பிள். இவர்களின் சாதனைகள், வாய்ப்புகள் எதிர்பார்த்து காக்திருப்போருக்கு ஊக்கமளிக்கும் என நம்புகிறோம்.