சடலமாக மணமகன்; சுடுகாட்டில் வித்தியாச Pre-wedding போட்டோஷூட்: வைரலாகும் போட்டோக்கள்!
மரணம் வந்தால்கூட பிரிய மாட்டோம் என்ற கான்செப்டில் தாய்லாந்து ஜோடி ஒன்று திருமணத்திற்கு முந்தைய போட்டோஷூட்டை சுடுகாட்டில் நடத்தி இருப்பது சமூகவலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
நம் தாத்தா-பாட்டி காலத்தில் திருமணத்தன்று தான் மணமக்களே ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டதாகக் கூறிய கதைகளைக் கேட்டிருப்போம். காலப்போக்கில் அது கொஞ்சம் கொஞ்சமாக மாறி, திருமணத்திற்கு முன்பே மணமக்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து, மனம் விட்டு பேசி, தங்களுக்கு பொருத்தமான ஜோடிதானா எனத் தெரிந்து கொள்ளும் அளவிற்கு திருமணங்கள் மாறி வருகின்றன.
இதன் காரணமாக மணமக்களே தங்களது திருமணத்தை எப்படியெல்லாம் வித்தியாசமாக மற்றவர்களைக் கவரும் வகையில் நடத்துவது என்பதைப் பேசித் தீர்மானிக்கவும் செய்கின்றனர். அந்த வித்தியாசத்தை திருமணத்திற்கு முந்தைய போட்டோஷூட்டில் இருந்தே ஆரம்பித்தும் விடுகின்றனர்.
திருமணத்தன்று அருகில் நின்று போட்டோ எடுக்க கூச்சப்பட்ட தலைமுறைகள் மாறி, பலர் திருமணத்திற்கு முந்தைய போட்டோஷுட்டிலேயே பலவித தீம்களில் போட்டோ எடுத்து விமர்சனங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
சிலர் ஏதாவது ஒரு கான்செப்டில் போட்டோஷூட் நடத்த வேண்டும் என்ற ஆசையில் புதுமை என்ற பெயரில் ஏதாவது செய்யப்போய், அது டிரென்டிங்கும் ஆகி விடுகிறது.
அப்படித்தான் சமீபத்தில் தாய்லாந்து ஜோடி ஒன்று கல்லறையில் ப்ரீவெட்டிங் போட்டோஷூட் நடத்தி இணையத்தில் பேசுபொருளாகி இருக்கிறது. கல்லறைகள், பேய்கள், இறுதி சடங்கு ஆகியவற்றை தீம்மாக கொண்டு இந்த போட்டோ ஷூட்டை நடத்தியுள்ளனர்
தாய்லாந்தைச் சேர்ந்த Nonts Kongchaw என்பவர் இந்த புகைப்படங்களையும், வீடியோக்களையும் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சம்பந்தப்பட்ட புகைப்படங்களில் மணமகனாக இருப்பவரும் அவரே தான்.
கல்லறை மைதான காவலாளி என தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தன்னைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார் அவர்.
இந்தப் புகைப்படங்கள் நிஜமாகவே அவரது திருமணத்திற்காக எடுக்கப்பட்டதா அல்லது விளம்பரத்திற்காக எடுக்கப்பட்டதா என்பது தெரியவில்லை. ஆனால், தாய்லாந்தில் செய்யப்படும் இறுதிச்சடங்குகளை மையமாக வைத்து இந்த போட்டோஷூட்டை நடத்தி திகிலை ஏற்படுத்தியுள்ளார் Nonts.
இவர் ஒரு புகைப்படக்கலைஞர் என்பதால், பெரும்பாலான தனது புகைப்படங்களை சவப்பெட்டி மற்றும் சடலங்களை மாடலாக வைத்து எடுத்துள்ளார். ஒரு புகைப்படத்தில் துணி சுற்றப்பட்ட சடலத்தை வைத்தது போன்ற கேக்குடன் போஸ் கொடுத்துள்ளார் Nonts. மற்றொரு புகைப்படத்தில் சடலத்தின் அருகில் அமர்ந்து போஸ் கொடுத்திருக்கிறார்.
தற்போது டிரென்டிங் ஆகியுள்ள இவரது கல்லறை போட்டோஷூட்டில், மின் மயானத்தில் மணமகன் படுத்திருக்க, அருகில் மணமகள் நிற்பது, சவப்பெட்டியில் மணமகள் மடியில் மணமகன் படுத்திருப்பது, தேங்காயை உடைத்து இறுதிச்சடங்கு செய்வது என வித்தியாசமான கான்செப்டில் புகைப்படங்கள் உள்ளன.
பார்ப்பதற்கு வித்தியாசமாக இருக்கிறதென்றாலும், எல்லையை மீறி யோசித்து இவர்கள் எடுத்த போட்டோ ஷூட் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இப்படியெல்லாம் போட்டோ ஷூட்டை திருமணத்திற்காக எடுப்பது நல்ல சகுணம் அல்ல எனவும் பலர் கமெண்ட்டில் அறிவுரை கூறியுள்ளனர்.
இதோ திகிலூட்டும் அவர்களது மேலும் சில புகைப்படங்கள்...
படங்கள் உதவி: இன்ஸ்டாகிராம்