Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

இறந்த மனைவி நினைவில், ஒரு வயது மகளுடன் போட்டோஷூட்டை மறுஉருவாக்கம் செய்த காதல் கணவர்!

புகைப்படங்கள் எப்போதுமே நினைவுகளைச் சுமந்து நிற்பவை. சில புகைப்படங்கள் மகிழ்ச்சியைத் தரும். ஆனால் சில கண்ணீரைத் தரும். இப்போதும் அப்படித்தான் ஒரு தந்தை தனது குழந்தையுடன் எடுத்துக் கொண்டுள்ள போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இறந்த மனைவி நினைவில், ஒரு வயது மகளுடன் போட்டோஷூட்டை மறுஉருவாக்கம் செய்த காதல் கணவர்!

Wednesday September 01, 2021 , 3 min Read

சம்பந்தப்பட்ட அந்தப் புகைப்படங்களில் 37 வயதான ஜேம்ஸ் ஆல்வர்ஸ் என்பவர் தனது ஒரு வயது மகள் ஆட்லினுடன் மகிழ்ச்சியாக இருக்கும் தருணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், அந்தப் புகைப்படங்களில் ஒரு சோகம் இழையோடுகிறது. காரணம் ஜேம்ஸ்-ன் மனைவி யெசினியா கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 34 வார கர்ப்பிணியாக இருந்தபோது விபத்து ஒன்றில் இறந்து விட்டார்.


கலிபோர்னியா சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த அவர் மீது, கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று மோதி விட்டது. இதில் பரிதாபமாக அவர் உயிரிழந்தார். ஆனால், அதிர்ஷ்டவசமாக அவர் வயிற்றில் இருந்த குழந்தைக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. யெசினியா இறந்து இருபது நிமிடங்கள் ஆக்ஸிஜன் இல்லாத நிலையிலும் கூட, வயிற்றில் இருந்த குழந்தை ஆரோக்கியமாக இருந்துள்ளது.


எனவே, அக்குழந்தையை அறுவைச் சிகிச்சை மூலம் உடனடியாக மருத்துவர்கள் வெளியில் எடுத்து விட்டனர். சில நாட்கள் மருத்துவக் கண்காணிப்பில் இருந்த அக்குழந்தையை பின்னர் வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டார் ஜேம்ஸ்.

james

மனைவியின் மரணத்தால் கடும் சோகத்தில் இருந்த ஜேம்ஸின் மனக்காயங்களுக்கு மருந்தாக மகள் ஆட்லினா இருந்துள்ளார். தனது சோகங்களையெல்லாம் உள்ளே மறைத்துக் கொண்டு மனைவியின் விருப்பப்படியே மருத்துவமனையில் இருந்து கொண்டாட்டமாக மகளை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார் ஜேம்ஸ்.


ஜேம்ஸும், யெசினியாவும் இரண்டு வருடங்கள் காதலித்து கடந்த 2019ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டவர்கள். தனது வருங்காலக் குழந்தையைப் பற்றி யெசினியா ஏகப்பட்ட கனவுகளுடன் இருந்துள்ளார். எனவே, மனைவியின் கனவுகளை நினைவாக்க முடிவு செய்தார் ஜேம்ஸ். அதன்படி, மகளின் ஒவ்வொரு அசைவுகளையும் மனைவியின் நினைவுகளோடு சேர்த்து புகைப்படங்களாகப் பதிவு செய்தும் வருகிறார் ஜேம்ஸ்.

recreate

குழந்தையின் முதல் போட்டோஷூட்டில் மனைவியின் புகைப்படங்களை பின்புறத்தில் இருப்பது போல் அவர் உருவாக்கியுள்ளார். கூடவே போட்டோஷாப் மூலம் தானும், தனது குழந்தையும் இருக்கும் புகைப்படத்திலும் யெசினியா இருப்பது போல் செய்துள்ளார்.


தற்போது ஆட்லினாவிற்கு ஒரு வயதாகி விட்ட நிலையில், அவரது முதல் பிறந்தநாளை வித்தியாசமாகக் கொண்டாட முடிவு செய்துள்ளார் ஜேம்ஸ். அதன்படி,

தன் மனைவி யெசினியாவின் கர்ப்பகால போட்டோஷூட் புகைப்படங்களை மீண்டும் மறு உருவாக்கம் செய்ய அவர் திட்டமிட்டார். சம்பந்தப்பட்ட அந்தப் போட்டோஷூட்டில் யெசினியா இளம் சிவப்பு வண்ண உடையில் கைகளில் மலர்களுடன், கணவருடன் சேர்ந்து போஸ் கொடுத்துள்ளார். அந்த போட்டோஷூட் நடைபெற்ற இடத்தில், தற்போது அதே போன்று மகள் ஆட்லினாவுடன் வித்தியாசமாக ஒரு போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார் ஜேம்ஸ். மனைவி அணிந்திருந்த அதே நிறத்தில் தற்போது மகளுக்கும் உடை அணிவித்து, தான் அப்போது நின்றபடியே போஸ் கொடுத்து இந்தப் புகைப்படங்களை அவர் எடுத்துள்ளார்.
with wife

இந்த போட்டோஷூட்டை மறைந்த மனைவிக்கு சமர்ப்பணம் செய்வதாகக் கூறி, உணர்ச்சிப்பூர்வமான இந்தப் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஜேம்ஸ்.  கூடவே,

”ஆட்லின் உனது அம்மா இங்கே இருந்திருந்தால், நிச்சயம் இந்தத் தருணங்களில் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பார். உனது பிறந்தநாளை மிகவும் ஆர்வமாகக் கொண்டாட ஏற்பாடு செய்திருப்பார். அதனால் தான் அவரது ஆசையை நிறைவேற்றும் வகையில் இதை செய்திருக்கிறேன். நிச்சயம் மிகவும் மகிழ்ச்சியான பிறந்தநாளாக உனது இந்தநாள் அமையட்டும். நானும் உனது அம்மாவும் உன்னை மிகவும் நேசிக்கிறோம்,” எனக் குறிப்பிட்டுள்ளார் ஜேம்ஸ்.

தனது மனைவியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களில் இருந்தது போலவே புன்னகை பூத்த முகத்துடன் இந்தப் புகைப்படங்களிலும் போஸ் கொடுத்துள்ளார் ஜேம்ஸ். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும், தற்போது மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ள புகைப்படங்களையும் அருகருகே சேர்த்து இன்ஸ்டாவில் அவர் பதிவு செய்துள்ளார்.


என்னதான் அப்புகைப்படங்களை அப்படியே அவர் மறு உருவாக்கம் செய்ய முயற்சி செய்திருந்த போதும், இப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில் இலைமறை காயாக ஒரு சோகம் இழையோடுகிறது.

baby

யெசினியாவின் புகைப்படங்களில் பின்புறத்தில் அழகிய மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. ஆனால் ஆட்லினாவுடனான புகைப்படங்களில் பின்புறத்தில் காய்ந்த மலர்கள் காய்ச்சி அளிக்கின்றன. இது மறைமுகமாக ஜேம்ஸின் வாழ்க்கையைக் குறிப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட்டில் தெரிவித்துள்ளனர்.

recreate

சமூகவலைதளத்தில் இப்புகைப்படங்கள் வைரலாகி இருக்கின்றன. இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் அந்தப் புகைப்படங்களை லைக் செய்துள்ளனர்.


தகவல் உதவி: டெயிலி மெயில், படங்கள்: இன்ஸ்ட்கிராம்