அகமதாபாத்தில் 1.25லட்ச மக்கள் முன் 'நமஸ்தே ட்ரம்ப்’ நிகழ்ச்சி!
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், இந்தியா சுற்றுப் பயணத்தில் மோடி பாணியில் ‘ஹௌடி டிரம்ப்’ நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, கடந்தாண்டு, செப்டம்பர் மாதம் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டார். அங்கு, ஹூஸ்டன் நகரில் நடைபெற்ற பிரம்மாண்ட கூட்டம் ஒன்றில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புடன் சேர்ந்து பங்கேற்றார். அப்போது, டிரம்ப் தனது குடும்பத்தினருடன் இந்தியாவுக்கு வருமாறு மோடி அழைப்பு விடுத்திருந்தார்.
அதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு இறுதியில் அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் அமெரிக்க அரசின் மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு, ட்ரம்பை சந்தித்து அவரை இந்தியா வருமாறு மீண்டும் வலியுறுத்தினர்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் ஆகிய இருவரும் வருகிற 24 மற்றும் 25 ஆகிய இரு நாட்கள் இந்தியாவில் பயணம் மேற்கொள்கின்றனர் என வெள்ளை மாளிகை ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளது.
மேலும், அமெரிக்க அதிபரின் இந்த பயணம், அமெரிக்கா - இந்தியா இடையிலான உறவை மென்மேலும் பலப்படுத்தும் என்றும், இருநாட்டு மக்களுக்கிடையே இருக்கும் வலுவான மற்றும் நீடித்த பிணைப்பை வெளிப்படுத்தும் வகையில் அமையும் என்றும் அந்த ட்விட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்காக, ட்ரம்ப்பின் பயணத் திட்டங்களும் இறுதிசெய்யப்பட்டுவருகிறது. அதன்படி, அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்திலிருந்து அதிபரின் பயணம் தொடங்குகிறது. காந்திநகரின் மூத்த அதிகாரிகளின் கூற்றுபடி,
அதிபர் டொனால்டு ட்ரம்ப் நேரடியாக அகமதாபாத்திற்கு வந்தடைகிறார். விமான நிலையத்தில் அதிபரையும், முதல் பெண்மணி மெலானியா ட்ரம்ப்பை வரவேற்கும் மோடி, அவர்களை சபர்மதி ஆசிரமத்திற்கு அழைத்துச் செல்கிறார். பரந்த ஆசிரமத்தில் மகாத்மா காந்தியின் வீடான ஹிரிடே குஞ்ச்-ஐ சுற்றிப் பார்க்கும் அவர்கள், அங்கு சுழல் சக்கரத்தினையும் இயக்கவுள்ளனர். அவர்கள் ஆசிரமத்தில் சுற்றி பார்க்கும்போது, மகாத்மா காந்தியின் விருப்பமான பாடலான ’வைஷ்ணவ் ஜனது...” இசைப் பின்னணியில் இசைக்கப்படும்.
அங்கிருந்து, ட்ரம்ப்பும் அவருடைய மனைவியும் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் அரங்கமான புதிய சர்தார் வல்லபாய் படேல் ஸ்டேடியத்தின் தொடக்க விழாவில் கலந்து கொள்கின்றனர். உயர்மட்ட கலைஞர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கலாச்சார நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
கடந்தாண்டு பிரதமர் மோடி, அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் ஹௌடி மோடி (மோடி நலமா?) என்ற பிரமாண்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றினார். அதேபோன்று ‘கெம் சோ டிரம்ப்?’ (குஜராத்தியில் டிரம்ப் நலமா என்று பொருள்) என்ற பிரமாண்ட நிகழ்ச்சியினை வல்லபாய் படேல் அரங்கில் நிகழ்த்த ஏற் பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மோடி-டிரம்ப் இடையே உள்ள வலவான நட்பை பிரதிபலிக்கும் நோக்கில் நடக்கவுள்ள நிகழ்ச்சியில் 1.25 லட்சம் மக்கள் பங்கேற்க உள்ளனர்.
அரங்கத்தில் இருக்கைத் திறன் 1.10 லட்சமாகும். 15,000 பேர் மேடைக்கு எதிரிலுள்ள இருக்கைகளில் அமருவர். நிகழ்ச்சியில் உயர் வணிக நிர்வாகிகள் உட்பட நாடு முழுவதுமுள்ள மக்கள் கலந்து கொள்வார்கள் என்று நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கும் பணிகளை மேற்கொண்டு வரும் அதிகாரி ஒருவர் தி இந்துவிடம் தெரிவித்துள்ளார்.
இதற்காக, கடந்த இரண்டு வாரங்களாக அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமம் மற்றும் கிரிக்கெட் மைதானத்திற்கு அருகிலுள்ள பகுதிகளை அலங்கரித்தல், சாலைகளின் செடிகளை நட்டல் போன்ற பணிகளை பல்வேறு ஏஜென்சிகள் மேற்கொண்டு வருகின்றன.
விஐபி நிகழ்விற்கு உள்துறை அமைச்சகம் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்நிலையில், இந்திய விஜயம் குறித்து ட்ரம்பிடம் நேற்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு,
‘இப்போது தான் மோடியுடன் போனில் பேசினேன். அவர் ஒரு சிறந்த மனிதர். நான் இந்தியா செல்ல ஆவலுடன் காத்திருக்கிறேன். அகமதாபாத்தில் நடைபெற உள்ள பெரிய வரவேற்பு பற்றி மோடி கூறினார். சரியானதாக இருந்தால் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட தயாராக இருக்கிறோம். ‘அவர்கள் (இந்தியர்கள்) ஏதாவது செய்ய விரும்புகிறார்கள், நாங்கள் பார்ப்போம் ... சரியான ஒப்பந்தம் செய்ய முடிந்தால், நாங்கள் அதைச் செய்வோம்,’ என்று ட்ரம்ப் கூறினார்.
ட்ரம்பின் இந்திய வருகை அரசியல் சார்ந்த முக்கிய நகர்வாகப் பார்க்கப்பட்டாலும், இரு நாடுகளின் பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கைகள் அமைச்சகங்களின் பேச்சுவார்த்தை மூலம் உருபெற்றுவருகின்றன. அத்துடன் இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகுமா என்பது முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.
2014ம் ஆண்டு மோடி பிரதமரானதிலிருந்து, அகமதாபாத் வெளிநாட்டுத் தலைவர்களை நடத்துவதற்கான விருப்பமான இடமாக உருவெடுத்துள்ளது.