ஜின்பிங்-மோடி சந்திப்பு: இந்திய பெருமையை அழகாய் மொழிபெயர்த்த தமிழர் மதுசுதன்!
சீன அதிபர் ஜின்பிங்கின் தமிழக வருகையின் மூலம் உலகளவில் பிரபலமாகி இருக்கும் மதுசுதன் ரவீந்திரன் பின்னணி பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
சீன அதிபர் ஜின்பிங் வருகையால் சென்னை மற்றும் மாமல்லபுரமே விழாக்கோலம் பூண்டுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அந்தளவுக்கு கண்ணைக் கவரும் அலங்காரங்கள் மனதைக் கொள்ளை கொள்கிறது. சீன அதிபரும் நம் பாரம்பரியக் கலைகளின், பழந்தமிழரின் வாழ்வியலைப் பற்றித் தெரிந்து கொண்டு அதிசயித்துத் தான் போயுள்ளார்.
அவர் இந்த அளவுக்கு ஆழமாக நம் கலாச்சாரத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள பெரும் உதவியாக இருந்தது மதுசுதன் ரவீந்திரன் என்ற அதிகாரி தான். இவர் தான், சீன அதிபர் ஜின்பிங்குக்கு பழந்தமிழர் வாழ்வியலையும் பிரதமர் மோடியின் அரசியல் கருத்துகளையும் மொழிபெயர்த்து எடுத்துக் கூறியவர்.
இதனாலேயே மோடி - ஜின்பிங் சந்திப்பின் போது கவனம் ஈர்த்த மூன்றாவது நபராகி இருக்கிறார் மதுசுதன். குறிப்பாக மாமல்லபுரத்தில் பழந்தமிழரின் சிற்பக் கலையின் உன்னதத்தை சீனா அதிபருக்கு அவர் விளக்கிய விதம் அனைவரது பார்வையும் அவர் பக்கம் திரும்ப முக்கியக் காரணமாகி விட்டது.
இப்படி ஒரே நாளில் ஊடகங்களில், சமூகவலைதளங்களில் ஹீரோவாகி விட்ட மதுசுதன், சீனாவில் உள்ள இந்திய தூதரகத்தின் முதன்மை செயலாளராக பதவி வகித்து வருகிறார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் மாணவரான மதுசுதன் ரவீந்தரனின் தந்தை கோவையைச் சேர்ந்தவர்; தாய் திருவண்ணாமலையைச் சேர்ந்தவர். டேராடூன் ராணுவக் கல்லூரியிலும் கல்வி கற்றவர் மதுசுதன் ரவீந்தரன். கடந்த 2007ஆம் ஆண்டு மத்திய குடிமை பணி தேர்வில் தேர்ச்சி பெற்று, இந்திய வெளியுறவுப் பணியில் சேர்ந்தார்.
தொடக்கத்தில் சீனாவில் உள்ள இந்திய தூதரகத்தில் 3-வது நிலை செயலராக பணியில் அமர்ந்தார். இதனைத் தொடந்து சான்பிரான்சிஸ்கோவில் சில காலம் பணி புரிந்தார். பின்னர் மீண்டும் 2013ம் ஆண்டு சீனாவுக்கே திரும்பினார். தற்போது பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகத்தின் முதன்மைச் செயலராக பணியாற்றி வருகிறார் மதுசுதன்.
நீண்டகாலம் சீனாவிலேயே பணிபுரிவதால், அந்நாட்டு அதிகாரப்பூர்வ மொழியான மாண்டரின் உள்பட பல மொழிகளில் தேர்ச்சி பெற்றார் மதுசுதன். அதனால் தான், சீன அதிபரின் இந்த இந்திய பயணத்தின் போது, மொழிபெயர்ப்பாளர் பொறுப்பு அவருக்கு கொடுக்கப்பட்டது.
அதன்படி, தனது வேலையைச் சிறப்பாகச் செய்து, தமிழக பாரம்பரியத்தையும், பிரதமர் மோடியின் அரசியல் பயணத்தையும் சரியாக இரு தலைவர்களுக்கும் மொழிபெயர்ப்பு செய்து, பாராட்டுகளை அள்ளி வருகிறார். அதோடு, மாமல்லபுரம் மற்றும் கோவளத்தில் இரு தலைவர்களின் உரையாடலையும் அவர்கள் அருகிலேயே இருந்து அவர்களுக்கு கவனமாக மொழி பெயர்த்து தந்துள்ளார் மதுசுதன்.
இப்படி மதுசுதன் மொழிபெயர்ப்பாளராக இருப்பது இது முதன்முறையல்ல. கடந்த முறை பிரதமர் மோடி, ஜின்பிங் சந்திப்பின் போதும் மொழிபெயர்ப்பாளராக இருந்தவரும் இவரே தான் என்பது இங்கே நினைவுக்கூரத்தக்கது.