அமெரிக்காவில் பிரதமர் மோடி: வெள்ளை மாளிகை விருந்து முதல் முக்கியப் பிரபலங்களின் சந்திப்பு வரை!
பிரதமர் மோடி நான்கு நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். பிரதமர் மோடி அங்கெல்லாம் யாரையெல்லாம் சந்திக்க உள்ளார் உள்ளிட்ட நிகழ்ச்சி நிரல்களை பார்க்கலாம்...
பிரதமர் மோடி நான்கு நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். பிரதமர் மோடி அங்கெல்லாம் யாரையெல்லாம் சந்திக்க உள்ளார் உள்ளிட்ட நிகழ்ச்சி நிரல்களை பார்க்கலாம்...
பிரதமர் மோடி நான்கு நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். நேற்று காலை டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் புறப்பட்ட மோடி, இன்று முதல் அமெரிக்காவில் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்கிறார். இந்தியா-அமெரிக்க கூட்டுறவை மேலும் வலுப்படுத்த இந்த பயணம் உதவும் என்று புறப்படும் முன் பிரதமர் தெரிவித்தார்.
சுற்றுப்பயணத்தின் சிறப்பம்சங்கள்:
அமெரிக்க பயணத்தின் போது முக்கியப் பிரபலங்களுடன் சந்திப்பு, பிரமாண்ட ஒப்பந்தங்கள் உள்ளிட்டவை நிகழ உள்ளன.
ஜூன் 20:
அமெரிக்காவில் உள்ள நியூயார்க் ஆண்ட்ரூஸ் விமானப்படை தளத்தை பிரதமர் மோடி சென்றடைந்தார். மோடிக்கு இந்திய அமெரிக்கர்கள் அமோக வரவேற்பு அளித்தனர்.
ஜூன் 21:
சர்வதேச யோகா தினத்தையொட்டி, நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சிகளுக்கு பிரதமர் பங்கேற்றார்.
முதலில் மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் மோடி, அதன் பிறகு ஐ.நா தலைமையகத்தின் வடக்கு புல்வெளியில் யோகாசனம் செய்ய உள்ளார். இந்த நிகழ்வில் ஐநா பொதுசபை தலைவர் சாபா கொரோஷி உள்ளிட்ட 180 நாடுகளின் பிரமுகர்கள் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐநா சபை தலைமையாக்தில் நடைபெறும் இந்த நிகழ்வு இந்திய நேரப்படி மாலை 5.30 மணி அளவில் தொடங்கும்.
ஜூன் 22:
பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தின் மிக முக்கியமான நாளாக ஜூன் 22ம் தேதி அமைந்துள்ளது. வியாழக்கிழமை காலை வெள்ளை மாளிகைக்கு செல்கிறார். அங்கு அவருக்கு அதிகாரப்பூர்வ வரவேற்பு அளிக்கப்படுகிறது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான இந்திய வம்சாவளியினர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்பிறகு, வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இடையே உயர்மட்ட சந்திப்பு நடைபெறுகிறது. இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் அவர்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்தப்படும். பொருளாதாரம், தொழில்நுட்பம், பாதுகாப்பு ஆகிய துறைகளில் பல முக்கிய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட வாய்ப்புள்ளது. சப்ளை செயின் அமைப்பில் உள்ள பிரச்னைகளை களைய, அரச தலைவர்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்தப்படும்
இந்த இருதரப்பு சந்திப்புக்குப் பிறகு, அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரதமர் உரையாற்றுகிறார். அமெரிக்க காங்கிரஸில் இரண்டாவது முறையாக உரையாற்றிய முதல் இந்தியர் என்ற பெருமை பிரதமருக்கு கிடைத்துள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு பராக் ஒபாமா அமெரிக்க அதிபராக இருந்தபோது, அமெரிக்கா சென்ற மோடி, நாடாளுமன்றத்தில் உரையாற்றியது குறிப்பிடத்தக்கது.
ஜூன் 23:
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் மற்றும் வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் ஆகியோர் மோடிக்கு மதிய உணவு விருந்து அளிக்க உள்ளனர். பின்னர், பல்வேறு நிறுவனங்களின் சிஇஓக்கள் மற்றும் பங்குதாரர்களை பிரதமர் மோடி சந்திக்கிறார்.
23ஆம் தேதி மாலை ரொனால்ட் ரீகன் மையத்தில் மெகா நிகழ்வு நடைபெறுகிறது. இதில் இந்திய வம்சாவளியினரிடையே மோடி உரையாற்றுகிறார். மோடியின் அமெரிக்க பயணம் இத்துடன் முடிவடைகிறது.
சிறப்பு விருந்து:
யோகா நிகழ்ச்சி முடிந்ததும், பிரதமர் நரேந்திர மோடி வாஷிங்டன் செல்கிறார். அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், அவரது மனைவி ஜில் பைடனும் மோடிக்கு தனிப்பட்ட விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர். கலிபோர்னியாவைச் சேர்ந்த பிரபல சமையல் கலைஞரான நினா கர்டீஸ் விருந்துக்கான ஸ்பெஷல் சைவ மெனுக்களை தயார் செய்துள்ளார். வயலின் இசையுடன் பிரதமர் மோடிக்கு தடபுடலாக விருந்துவைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. சிறப்பான வயலின் இசைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உலகின் மிக நெருங்கிய நட்பு நாடுகளின் தலைவர்களுக்கு மட்டுமே வெள்ளை மாளிகையில் விருந்து அளிக்கப்படும். அதிபர் ஜோ பைடன் பதவியேற்ற பிறகு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோல் ஆகியோருக்கு மட்டுமே அங்கு சிறப்பு இரவு விருந்து அளித்துள்ளார். வெள்ளை மாளிகையில் அவர் விருந்து அளிக்கும் 3-வது உலகத் தலைவர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெறுகிறார்.
அமெரிக்க நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு, வரும் 24, 25-ம் தேதிகளில் எகிப்தில் மோடி பயணம் மேற்கொள்கிறார்.