ஸ்பெஷல் சைவ உணவு, வைரக்கல், வெள்ளை எள், தங்க நாணயம் - மோடிக்கு பைடன் கொடுத்த பிரம்மாண்ட விருந்து!
நான்கு நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடிக்கு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பிரம்மாண்ட விருந்து கொடுத்துள்ளார். விருத்தில் ஸ்பெஷலாக பறிமாறப்பட்ட மெனு முதல் இருநாட்டு தலைவர்களும் கொடுத்துக்கொண்டு பரிசு பொருட்கள் வரை சுவாரஸ்யமான தகவல்களை பார்க்கலாம்...
நான்கு நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடிக்கு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பிரம்மாண்ட விருந்து கொடுத்துள்ளார்.
விருத்தில் ஸ்பெஷலாக பறிமாறப்பட்ட மெனு முதல் இருநாட்டு தலைவர்களும் கொடுத்துக் கொண்டு பரிசுப் பொருட்கள் வரை சுவாரஸ்யமான தகவல்களை பார்க்கலாம்...
அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை பால் ரோமர், எழுத்தாளர் நிக்கோலஸ் நாசிம் தலீப், விண்வெளி விஞ்ஞானி நீல் டிகிராஸ் டைசன், முதலீட்டாளர்கள் ரே டேலியோ, ஸ்டீபன் கிளாஸ்கோ, சந்திரிகா டாண்டன், டேனியல் ரசல், மைக்கேல் ஃபுரோமேன் உள்ளிட்ட முக்கிய பிரபலங்களை இன்று காலை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
அதனை தொடர்ந்து நியூயார்க்கில் டெஸ்லா நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் புதன்கிழமை (ஜூன் 21) பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.
வெள்ளை மாளிகையில் விருந்து:
ஜூன் 21ம் தேதி மாலை ஐ.நா.வில் நடைபெற்ற சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, அங்கிருந்து வாஷிங்டன் புறப்பட்டார். வாஷிங்டன் டிசியில் உள்ள ஆண்ட்ரூஸ் விமான நிலையத்துக்கு பிரதமர் மோடி வந்தடைந்ததும், விமானப்படை தளத்தில் இரு நாட்டு தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டன. மேலும், தூறல் மழைக்கு மத்தியில் அவருக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.
மழையிலும் வாஷிங்டனில் கூடியிருந்த ஏராளமான இந்திய வம்சாவளியினர் பிரதமர் மோடிக்கு உற்சாகத்துடன் வரவேற்பளித்தனர். தன்னை வரவேற்க கூடியிருந்தவர்களை பார்த்து பிரதமர் மோடி உற்சாகத்துடன் கையசைத்தார்.
அங்கிருந்து காரில் புறப்பட்ட பிரதமர் மோடி வெள்ளை மாளிகை சென்றடைந்தார். அங்கு பிரதமர் மோடியை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கை குலுக்கி வரவேற்றார். இருநாட்டு தலைவர்களும் போட்டோவிற்கு போஸ் கொடுத்தனர். பின்னர், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், அவரது மனைவி ஜில் பைடனும் ஏற்பாடு செய்திருந்த தனிப்பட்ட விருந்தில் மோடி பங்கேற்றார்.
உலகின் மிக நெருங்கிய நட்பு நாடுகளின் தலைவர்களுக்கு மட்டுமே வெள்ளை மாளிகையில் விருந்து அளிக்கப்படும். அதிபர் ஜோ பைடன் பதவியேற்ற பிறகு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோல் ஆகியோருக்கு மட்டுமே அங்கு சிறப்பு இரவு விருந்து அளித்துள்ளார். வெள்ளை மாளிகையில் அவர் விருந்து அளிக்கும் 3-வது உலகத் தலைவர் என்ற பெருமை பிரதமர் மோடிக்கு கிடைத்துள்ளது.
ஸ்பெஷல் சைவ விருந்து:
பிரதமர் மோடிக்கு அளிக்கப்பட்ட ஸ்பெஷல் சைவ மெனு தொடர்பான அதிகாரப்பூர்வ பட்டியலை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது. இந்த விருந்தில் சுவைமிக்க வட மாநில மற்றும் ஐரோப்பிய புகழ்பெற்ற உணவுகள் இடம் பெற்றிருந்தன. குறிப்பாக இந்திய தேசியக்கொடியை நினைவுபடுத்தும் வகையில் உணவுகள் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
சத்து நிறைந்த தினையில் செய்யப்பட்ட பல்வேறு உணவு வகைகள், மில்லட்கேக்ஸ், தர்பூசணியுடன் கிரில்டு கார்ன் கர்னல் சாலட், டாங்கி அவகொடாசாஸ், ரோஸ் மற்றும் ஏலக்காய் கலந்த ஸ்ட்ராபெரி ஷார்ட்கேக், தேங்காய் கிரீம் கலந்த பிஸ்கட், ஸ்டப்புடு புரோட்பெல்லோ மஸ்ரூம் ஆகியவை பறிமாறப்பட்டுள்ளன.
கலிபோர்னியாவைச் சேர்ந்த பிரபல சமையல் கலைஞரான நினா கர்டீஸ் விருந்துக்கான ஸ்பெஷல் சைவ மெனுக்களை தயார் செய்திருக்கிறார். வயலின் இசையுடன் பிரதமர் மோடிக்கு தடபுடலாக விருந்தளிக்கப்பட்டுள்ளது. இந்த விருந்தில் 400 முதல் 450 பேர் வரையிலான மிக முக்கியமான நபர்கள் பங்கேற்றிருப்பார்கள் எனக்கூறப்படுகிறது.
பிரதமர் மோடி வழங்கிய பரிசுகள்:
மைசூர் சந்தன கட்டையால் வடிவமைக்கப்பட்ட சந்தனப் பெட்டியை ஜோ பைடனுக்கு பிரதமர் மோடி பரிசளித்தார். ஜெய்ப்பூரைச் சேர்ந்த ஒரு தலைசிறந்த கைவினைஞரின் பிரத்யேக உருவங்களை கொண்டு உருவாக்கப்பட்ட பெட்டியில், கொல்கத்தாவைச் சேர்ந்த ஐந்தாம் தலைமுறை வெள்ளித் தொழிலாளிகளின் கைவண்ணத்தில் உருவாக்கப்பட்ட சிறிய அளவிலான வெள்ளி விநாயகர் சிலை, வெள்ளி விளக்கு, காப்பர் தட்டு, வெள்ளியால் செய்யப்பட்ட பத்து சிறிய டப்பாக்கள் வைக்கப்பட்டிருந்தது.
உத்தர பிரதேசம் மாநிலத்தில் இருந்து தாம்பர தட்டு, அதில் ஸ்லோகம் எழுதப்பட்டிருக்கும். மேலும், இந்த சந்தனப் பெட்டியில் இந்தியாவின் பாரம்பரியத்தை எதிரொலிக்கும் வண்ணம், தமிழ்நாட்டிலிருந்து வெள்ளை எள், ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து 24 காரட் தங்க நாணயம், பஞ்சாப் மாநிலத்திலிருந்து நெய், ஜார்காண்டிலிருந்து பட்டு துணி, உத்தரகாண்ட் மாநிலத்தின் அரிசி, மகாராஷ்டிராவில் இருந்து வெல்லம், ராஜஸ்தானில் வடிவமைக்கப்பட்ட 99.5 சதவிகிதம் தூய்மையான மற்றும் ஹால்மார்க் வெள்ளி நாணயம், குஜராத் மாநிலத்தில் இருந்து உப்பு ஆகியவை சந்தனப்பெட்டியில் இடம்பெற்றிருந்தன.
அமெரிக்க முதல் பெண்மணி ஜில் பைடனுக்கு 7.5 காரட் பச்சை வைரத்தை மோடி பரிசளித்தார். இந்த வைரமானது சூரிய சக்தி மற்றும் காற்றாலை போன்ற பல்வேறு சுற்றுச்சூழல் வளங்களை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டது ஆகும். கர்-இ-கலாம்தானி என்று அழைக்கப்படும், காஷ்மீரின் நேர்த்தியான பேப்பியர் மச்சே, சக்த்சாசி அல்லது காகிதக் கூழ் மற்றும் நக்காஷி ஆகியவற்றை சேர்த்து உருவாக்கப்பட்ட பெட்டியில் வைத்து பரிசளிக்கப்பட்டது.
அமெரிக்க அதிபர் வழங்கிய பரிசுகள்:
அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் முதல் பெண்மணி ஜில் பைடனும் தங்களது பங்கிற்கு அமெரிக்காவின் பழமையை பறையாற்றும் வகையிலான பரிசுகளை வழங்கினர். 1930களில் யீட்ஸின் இறுதிப் படைப்புகளில் ஒன்றான ‘தி டென் பிரின்சிபல் உபநிடதங்கள்’ புத்தகத்தை தான் மோடி பரிசளித்தார். லண்டனைச் சேர்ந்த M/s பேபர் மற்றும் ஃபேபர் லிமிடெட் வெளியிட்டு, கிளாஸ்கோ பல்கலைக்கழக அச்சகத்தில் அச்சிடப்பட்ட முதல் பதிப்பாகும்.
அத்துடன் விண்டேஜ் அமெரிக்க கேமரா, ஜார்ஜ் ஈஸ்ட்மேன் காப்புரிமை பெற்ற முதல் கோடாக் கேமரா, அமெரிக்கன் வைல்டுலைஃப் புகைப்படங்கள் அடங்கிய புத்தகம், புகழ்பெற்ற கவிஞர் ராபர்ட் ஃப்ராஸ்ட் எழுதிய “ராபர்ட் ஃப்ரோஸ்டின் கவிதைகள்” புத்தகத்தின் முதல் பதிப்பு அவரது கையெழுத்துடன் வழங்கப்பட்டது.