இந்திய பொருளாதாரத்தை மீட்க ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு
லாக்டவுன் 4ம் கட்டம் பற்றிய அறிவிப்பு மே 18ம் தேதி முன்னர் அறிவிக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் இன்று உரையாற்றினார். தொற்றுநோயை எதிர்த்துப் போராடி இறந்தவர்களை நினைவு கூர்ந்த பிரதமர், கோவிட் -19 காரணமாக உருவாகியுள்ள நெருக்கடி முன்னோடியில்லாதது, ஆனால் இந்த போரில், நாம் நம்மைப் பாதுகாத்துக் கொள்வது மட்டுமல்லாமல், முன்னேற வேண்டும் என்பதையும் கூறினார்.
தன்னம்பிக்கை இந்தியா
கோவிட்-19க்கு முந்தைய மற்றும் பிந்தைய காலத்தைப் பற்றிப் பேசிய பிரதமர், இந்தியாவின் 21 ஆம் நூற்றாண்டுக் கனவை நிறைவேற்ற நாம் சுயசார்புள்ள நாடாக வேண்டும் என்றார். இந்தியா தன்னம்பிக்கை அடைவதை உறுதி செய்வதன் மூலம் முன்னோக்கிச் செல்லும் வழி கிடைக்கும் என்றார்.
“இந்த நெருக்கடியை நாம் ஒரு வாய்ப்பாக கருத வேண்டும்,” என்றார் மோடி.
இந்தியாவின் கலாச்சாரம், உலகை ஒரு குடும்பமாகக் கருதுகிறது, மேலும் இந்தியாவில் முன்னேற்றம் என்பது முழு உலகிலும் முன்னேற்றத்தின் ஒரு பகுதியாகும் என்ற அவர், ஒட்டுமொத்த மனிதகுலத்தின் வளர்ச்சிக்கு இந்தியா நிறைய பங்களிக்க வேண்டும் என்று உலகம் நம்புகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸுக்கு 3 லட்சம் உயிரிழப்பு வேதனை அளிக்கிறது. இந்த வைரஸ் மனிதர்களுக்கு நிறைய பாடத்தை கற்றுக் கொடுத்திருக்கிறது. உயிர்களை காப்பாற்ற உலகமே தற்போது முயற்சி செய்து வருகிறது, என்றார் மோடி.
தன்னம்பிக்கை இந்தியாவின் ஐந்து தூண்கள்
பூகம்பத்திற்குப் பிறகு கட்சில் ஏற்பட்ட பேரழிவை நினைவு கூர்ந்த பிரதமர், உறுதியுடனும் தீர்மானத்துடனும் அந்த பகுதி மீண்டெழுந்ததை கூறினார். நாடு தன்னம்பிக்கைக் கொள்ள இதேபோன்ற தீர்மானம் தேவை, என்றார்.
பொருளாதாரம், உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம், துடிப்பான மக்கள்தொகை, மற்றும் தேவை, ஆகிய ஐந்து தூண்களில் தன்னம்பிக்கை இந்தியா நிற்கும்,” என்று அவர் கூறினார்.
இதன் மூலம் தேவைக்கு ஏற்ப விநியோகச் சங்கிலியை வலிமையுடன் முழுத் திறனு உள்ளதாக்கவேண்டும் என்றார்.
‘ஆத்மனிர்பர் பாரத் அபியான்’ (சுயசார்பு இந்தியா)
பிரதமர் ஒரு சிறப்பு பொருளாதாரத் தொகுப்பை அறிவித்து, ‘ஆத்மனிர்பர்’ பாரதத்திற்கு ஒரு தெளிவான அழைப்பை வழங்கினார்.
கோவிட் நெருக்கடியில் ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சரிவை மீட்டெடுக்க பொருளாதாரத் திட்டத்துக்காக ஆத்மா நிர்பார் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியில் 10% ஒதுக்கப்படும். அதன் மொத்த ஒதுக்கீடு 20 லட்சம் கோடி ரூபாய் வரை இருக்கும்’ என்று தெரிவித்தார்.
நிலம், தொழிலாளர், பணப்புழக்கம் மற்றும் சட்டத்துக்கும், குடிசைத் தொழில், எம்.எஸ்.எம்.இ.க்கள், தொழிலாளர்கள், நடுத்தர வர்க்கம், தொழில்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கு இந்த ஒதுக்கீடு பயன்படுத்தப்படும். தொகுப்பின் வரையறைகளின் விவரம் நிதி அமைச்சரால் நாளை விளக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். இந்த சீர்திருத்தங்கள் வணிகத்தை ஊக்குவிக்கும், முதலீட்டை ஈர்க்கும், மேலும் மேக் இன் இந்தியாவை மேலும் பலப்படுத்தும், என்றார்.
உள்ளூர் உற்பத்தி, உள்ளூர் சந்தை மற்றும் உள்ளூர் விநியோகச் சங்கிலியின் முக்கியத்துவத்தை இந்த நெருக்கடி நமக்குக் கற்பித்திருப்பதை அவர் பகிர்ந்தார்.
“இப்போது, உள்ளூர் தயாரிப்புகளை ஊக்குவிக்கும் நேரம். அவர்களுக்கு நாம் உறுதுணை புரிந்து குரல் கொடுப்போம். இந்த உள்ளூர் தயாரிப்புகள் உலகளாவியதாக மாற்ற இது நேரம், என்றார்.
கோவிட் உடன் வாழுங்கள்
கொரோனா வைரஸ் நீண்ட காலமாக நம் வாழ்வின் ஒரு பகுதியாக இருக்கப்போகிறது என்று பல நிபுணர்களும் விஞ்ஞானிகளும் கூறியுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.
“அதனால் நாம் இனி கொரோனா உடன் வாழக் கற்றுக் கொள்ளவேண்டும் ஆனால், நம் வாழ்க்கை அதை மட்டுமே சுற்றி இல்லை என்பதையும் உறுதிப்படுத்து முக்கியம்.”
முகக்ககவசம் அணிவது, ‘2 மீட்டர் தூரம்’ பராமரிப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தும், மக்கள் தங்கள் இலக்குகளை நோக்கிச் செல்லுமாறு அவர் அறிவுறுத்தினார்.
லாக்டவுனின் நான்காவது கட்டம், அதன் வரையறைகள் இன்னும் புதுமையாகவும், முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்று கூறினார். மாநிலங்களிலிருந்து பெறப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில், புதிய விதிகள் வகுக்கப்படும் என்றும் அது குறித்த தகவல்கள் மே18 க்கு முன்னர் தெரிவிக்கப்படும், என்று கூறினார் நரேந்திர மோடி.
தகவல் உதவி: பிஐபி