கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போர் ‘மக்கள் சக்தியால்’ ஆனது: மோடி
‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இந்திய குடிமகன் ஒவ்வொருவரின் பங்கும் இந்த கொரோவை வெல்ல உதவி செய்துள்ளது என்றார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் இந்திய மக்களுடன் உரையாடினார். அதில், மக்கள் தங்களை கொரோனா தாக்காது என்றும் அவர்கள் வசிக்கும் இடங்களில் தொற்று இல்லை என்பதால் நோய் தங்களைத் தாக்காது என்று தவறாக எண்ணிவிடக்கூடாது என்று அறிவுறுத்தினார் மோடி.
“நாம் தற்போது ஒரு யுத்தத்தின் நடுவே இருக்கிறோம். மக்கள் தொடர்ந்து கொரோனாவுக்கு எதிராகப் பாதுகாப்பாகவும், சரியான முன்னெச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். தற்போது கொரோனா எதிர்த்த இந்தியாவின் போராட்டமானது, மக்களுடையதாக்கிவிட்டது. இதில் ஒவ்வொரு குடிமகனும் இந்த போரில் ஒரு பகுதியாகிவிட்டனர்,” என்றார்.
இந்த எச்சரிக்கையை பிரதமர், நாட்டில் லாக்டவுன் தளர்த்தப்படமுடியுமா என்று விவாதிக்கும் பின்னணியில் சொன்னார்.
“மக்களே நீங்கள் அதீத நம்பிக்கையில் இருந்துவிடாதீர்கள். உங்கள் ஊர், கிராமம் அல்லது தெருவில் கொரோனா இல்லை என்பதால் அது உங்கள் அருகில் இல்லை என்று எண்ணி விடாதீர்கள். அந்த ஒரு தவறை மட்டும் செய்யவேண்டாம். இது பற்றிய உலகின் அனுபவங்கள் நமக்கு பல பாடங்களைக் கற்றுத்தந்துள்ளது,” என்றார் மோடி.
30 நிமிடம் பேசிய பிரதமர், கொரோனாவை எதிர்த்த போராட்டத்தில் சிறப்பாக பணியாற்றும் மாநிலங்கள், சுகாதாரப் பணியாளர்கள், அவசர உதவி பணியாளர்கள், மற்றும் பொதுநல குழுக்களைப் பாராட்டினார். மக்கள் கொடுத்துள்ள இந்த ஆதரவால், விரைவில் நாம் அலுவலகங்கள், கல்வி நிலையங்கள் மற்றும் மருத்துவத்துறைகளை சில மாற்றங்களுடன் தொடங்க வழி செய்துள்ளது. மார்ச் 24ம் தேதி தொடங்கிய நமது இந்த ஊரடங்கு, அதில் மக்களின் பங்கு பற்றி உலகமே பின்னாளில் விவாதிக்கும் என்றார்.
“கொரோனவுக்கு எதிரான இப்போராட்டம் மக்கள் சக்தியால் உருவானதே. மக்கள், அரசு மற்றும் நிர்வாகம் ஆகியவை இணைந்து இதை நன்றாக எதிர்த்து வருகிறோம். இந்த வழி ஒன்றே வைரசை வெல்லக்கூடியது,” என்றார் மோடி.
நெருப்பு, கடன் மற்றும் நோய் இவை அனைத்தையும் நாம் சாதாரணமாக நினைத்துவிட்டால், அது வேகமாக வளர்ந்து ஒரு அபாயக்கட்டத்தை அடைந்துவிடும். அதனால் அதன் தொடக்கத்திலேயே நாம் எச்சரிக்கையாக இருப்பது அவசியம் என்றார். இக்கட்டான இந்தச் சூழலில் மக்கள் ஒவ்வொருவரும் ஒரு வீரனாக இந்தப் போர்களத்தில் பணியாற்றி வருகின்றனர் என்று பாராட்டினார் மோடி.
இந்தியாவில் இருந்து மருந்துகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் முடிவை எடுத்துள்ளது பலரிடம் இருந்து பாராட்டுக்களை பெற்றிருக்கிறது. அதேபோல் இனி முகக்கவசம் அணிவது மக்களின் பழக்கங்களின் ஒன்றாக ஆகிவிடும் என்றும், பொது இடங்களின் மக்கள் எச்சில் துப்பும் தீயப்பழக்கத்தையும் நிறுத்திக்கொள்ளவேண்டும் என்றார். இது நமது பொதுச் சுகாதாரம் மற்றும் கொரோனா போன்ற வைரசுகள் பரவாமல் இருக்க தடுக்கும், என்றார்.
'covidwarriors.gov.in' என்ற இணையதளத்தில் மக்கள் சேர கேட்டுக்கொண்ட மோடி, இது தன்னார்வலர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களை உள்ளூர் நிர்வாக அதிகாரிகளுடன் இணைக்கும் பாலமாகும் என்றார். 1.25 கோடி மக்கள் இதில் ஏற்கனவே அங்கமாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ‘அடுத்த மன் கி பாத்’ நிகழ்ச்சிக்குள் நல்லதொரு செய்தி இருக்கும் என்று கூறினார் மோடி.
“இரண்டு மீட்டர் இடைவெளி காப்போம், நாம் உடல்நலத்தோடு இருப்போம்.
இந்த உலகளாவிய பெருந்தொற்றிலிருந்து விடுதலை அடைந்தோம் என்ற செய்தி உலகெங்கிலுமிருந்து கிடைக்கப்பெறட்டும்!! மனித சமுதாயம் இந்தச் சங்கடங்களிலிருந்து வெளியே வரட்டும்!! இந்தப் பிரார்த்தனைகளுடன் உங்கள் அனைவருக்கும் பலப்பல நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன், என்று முடித்தார்.
தகவல் : பிடிஐ