மின்சாரமில்லா கிராமத்தைச் சேர்ந்த பிரியங்கா யூபிஎஸ்சி வென்ற கதை!
பிரியங்காவின் பெற்றொர்கள் மண் குடிசை வீட்டில் வசிக்கின்றனர். அங்கு மின்சாரம், மொபைல் இணைப்பு என்று எதுவும் இல்லை.
யூபிஎஸ்சி என்னும் குடிமைப்பணிகளுக்கான தேர்வில் வெற்றிப் பெறுவது என்பது அவ்வளவு சுலபமில்லை. இந்தத் தேர்வுக்கு முயற்சிப்போர் தங்கள் நேரம், முழு உழைப்பை போட்டால் மட்டுமே வெற்றிப் பெற வாய்ப்பிருக்கிறது.
பல ஆண்டுகள் முயற்சிக்குப் பின்னரும், பலமுறை சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதியும் பலர் தோல்வியை தழுவவது இதில் சகஜம். ஆனால் மனம் தளராமல் மீண்டும் மீண்டும் தேர்வு எழுதி பாஸ் செய்யும் பலரும் நம் நாட்டில் உள்ளனர்.
இத்தனை கடினமான தேர்வாக இருந்தாலும், பல கிராமத்தைச் சேர்ந்தவர்கள் யூபிஎஸ்சி தேர்வு எழுத ஆர்வமாக இருப்பார்கள். மிகுந்த ஏழ்மை நிலையில் உள்ளவர்களும், சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதி அதில் வெற்றி பெற்றால் நாட்டுக்கும், மக்களுக்கும் சேவை புரிய வாய்ப்பு கிடைக்கும் என முயற்சிப்பார்கள்.
அதே போன்று, கடந்த ஆண்டு நடைப்பெற்ற யூபிஎஸ்சி தேர்வு எழுதிய குமாரி பிரியங்கா வெற்றிப் பெற்றுள்ளார். இவர் மிகுந்த வறுமையான குடும்பத்தைச் சேர்ந்தவர். கடின உழைப்பும், விடாமுயற்சியும் இருந்தால் எதுவும் சாத்தியம் என்பதற்கு இவரின் வெற்றி சிறந்த எடுத்துக்காட்டு.
28 வயதாகும் பிரியங்கா, உத்தராகண்ட் மாநிலம் ராம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர். அவர் சிறுவயது முதல் பள்ளிக்குச் சென்றுவிட்டு வந்து தந்தைக்கு உதவியாக விவசாயம் பார்ப்பார். இன்றும் அவரது வீடு ஒரு மண் குடிசையாக இருக்கிறது. பிரியங்காவின் வீட்டில் மின்சார இணைப்பு, மொபைல் போன் இணைப்பும் இல்லை. எல்லா வசதியுடன் இருக்கும் இடைத்தை அடைய இவர் 15 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்லவேண்டும்.
இத்தனை சிரமங்களுக்கு இடையே பிரியங்கா யூபிஎஸ்சி தேர்வுக்குத் தயாராகி, முதல் முயற்சியேலேயே வெற்றிப் பெற்றுள்ளார் என்றால் அவரின் திறமையும், முயற்சியும் தெளிவாகப் புரியும்.
10ம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்ததால், மேற்படிப்புக்கு கோபேஷ்வர் அரசுப் பெண்கள் ஜூனியர் கல்லூரியில் 11ம் வகுப்பில் சேர்ந்தார் பிரியங்கா. பின்னர் 12ம் வகுப்பை அங்கேயே முடித்தார். அதன் பின், டெஹ்ராதூனில் உள்ள டிஏவி கல்லூரியில் சட்டம் பயிலச் சென்றார்.
சிவில் சர்வீசுக்கு படிக்க முடிவெடுத்த பிரியங்கா, கோபேஷ்வர் என்ற டவுனுக்கு குடிபெயர்ந்தார். அவரின் கிராமத்தில் இருந்து 115 கிமி தூரம் உள்ள கோபேஷ்வரில் பணிபுரிந்து கொண்டே சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தயாரானார் பிரியங்கா.
“சுமார் 40 குழந்தைகளுக்கு டியூஷன் எடுத்து வருவாய் ஈட்டிக் கொண்டே தேர்வுக்கு படித்தார். ராம்பூரில் நல்ல பள்ளிக்கூடம் இல்லை, தொடக்கப் பள்ளியை அங்கே முடித்துவிட்டு மேல்நிலைப் படிப்புக்கு அருகாமை ஊருக்குச் சென்றார். என்னுடன் விவசாயமும் செய்வார். அது மட்டுமே எங்களுக்கு வருமானம்,” என்றார் பிரியங்காவின் தந்தை.
பிரியங்காவின் வீட்டில் இன்றும் மொபைல் சிக்னல் இல்லாததால், யூபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வந்ததும் தான் அதில் வெற்றிப் பெற்றதை தனது பெற்றோர்களுக்குத் தெரிவிக்க முடியாமல் தவித்தார்.
“என்னால் என் மகிழ்ச்சியை கூட என் பெற்றோர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியவில்லை. முடிவு வந்து 2 நாள் கழித்தே அவரிடம் போனில் தொடர்பு கொள்ள முடிந்தது. இது போல் பல சவால்களை நான் வாழ்வில் பார்த்துவிட்டேன். இவை அனைத்தும் என்னை இன்னும் வலிமையானவளாக ஆக்கியுள்ளது. ஆனால் இனி இந்த வெற்றியை வைத்து பலவற்றை மாற்ற விரும்புகிறேன்,” என பிரியங்கா தெரிவித்துள்ளார்.
பிரியங்காவின் இந்த ஊக்கமிகு கதை மற்றும் வெற்றி, பின்னால் வரும் பல ஏழை மாணவர்களுக்கு வாழ்வில் சாதிக்க உந்துதலாக இருக்கும் என்பதில் சந்தேமில்லை.
கட்டுரை உதவி: யுவர்ஸ்டோரி ஹிந்தி