காப்பர் மாஸ்க், யுவி சானிடைசர்: உலகளவில் 'மேட் இன் இந்தியா' தயாரிப்புகளை உருவாக்கும் கவின் கந்தசாமி!
கோவையைச் சேர்ந்த கவின் குமார் கந்தசாமி, My என்ற நிறுவனம் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வரும் இவர், யுவி சானிடைசர், ஆண்டி வைரல் மாஸ்க் என மக்களின் ஆரோக்கியத்திற்குத் தேவையான பொருட்களாகத் தயாரித்து விற்பனைச் செய்து வருகிறார்.
கொரோனாவால் நம் வாழ்க்கைமுறையே பெரும் மாற்றத்தைச் சந்தித்து இருக்கிறது. ஆடைகளின் ஒரு பகுதியாக மாஸ்க் மாறி இருக்கிறது. இது போன்று ஏராளமான நோய்களை இதற்கு முன் உலகம் பார்த்திருக்கிறது தான். ஆனால் கொரோனா கற்றுக் கொடுத்த பாடம் இனி எதிர்கால வாழ்க்கை முறைக்கான ஒரு எச்சரிக்கையாகத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதனாலேயே மக்களின் கவனம் தங்களின் ஆரோக்கியத்தின் மீது திரும்பியுள்ளது என்று தான் கூற வேண்டும். தடுப்பூசி போட்டுக் கொண்டாலும் கூட, மாஸ்க் அணிவது, சானிடைசர் கொண்டு சுத்தம் செய்வது அவசியம் என்பதை ஒவ்வொரு நாடும் தங்களது மக்களுக்கு வலியுறுத்தி வருகின்றன.
ஆனால், தாங்கள் பயன்படுத்தும் மாஸ்க் சரியானது தானா? அது வைரஸ், பாக்டீரியா தொற்றுகளில் இருந்து தங்களைக் காப்பாற்றுமா என்ற சந்தேகம் எல்லோருக்கும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. தரமான மாஸ்க், சானிடைசர் வாங்க வேண்டுமென்றால் அதிக விலை கொடுக்க வேண்டி இருக்கிறதே என்ற கவலையும் உள்ளது.
ஆனால் இனி அப்படிக் கவலைப்பட வேண்டியதில்லை என்கிறார் கோவையைச் சேர்ந்த கவின் குமார் கந்தசாமி. 'My Protection' என்ற நிறுவனத்தை ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்தி வரும் இவர். யுவி சானிடைசர், ஆண்டி வைரல் மாஸ்க் என மக்களின் ஆரோக்கியத்திற்குத் தேவையான பொருட்களாகத் தயாரித்து விற்பனைச் செய்து வருகிறார்.
33 வயதான கவினின் சொந்த ஊர் பவானி அருகே உள்ள அந்தியூர் என்ற கிராமம். அவரது தந்தை விவசாயப் பின்னணியில் இருந்து வந்து டெக்ஸ்டைல் தொழிலில் சாதித்தவர். கூடவே கல்வி நிறுவனங்களையும் ஆரம்பித்து நடத்தி வருகிறார்கள். இதனாலேயே கவினுக்கும் தொழில்முனைவோர் ஆக வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. ஆனால் பள்ளிப் படிப்பை முடித்ததும் உடனடியாக கல்லூரிக்குச் செல்லவில்லை. தனக்கான பாதை எது என்பதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள அந்த ஒரு வருடத்தை பயன்படுத்திக் கொண்டார் கவின்.
பின் ஆஸ்திரேலியா சென்று ஸ்காலர்ஷிப்பில் தன் கல்லூரிப் படிப்பை முடித்தார். அதனைத் தொடர்ந்து பிரான்ஸில் மேற்படிப்பு முடித்தவர் 2013ம் ஆண்டு இந்தியா திரும்பினார். தந்தையின் தொழிலை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கான வேலைகளில் அவர் ஈடுபட்டார்.
“அப்பா விவசாயக் குடும்பப் பின்னணியில் இருந்து வந்தவர். அவர்தான் எங்கள் குடும்பத்தின் முதல் தொழில்முனைவோர். நாலைந்து தொழில் செய்த அவர், அப்போதே வசதி இல்லாத பிள்ளைகளுக்காக ஒரு பள்ளியைத் தொடங்கினார்.
”2013ல் நான் இந்தியா வந்தபோது, எங்களது எல்லா நிறுவனங்களிலும் சேர்த்து மொத்தம் 84 ஊழியர்கள் பணிபுரிந்து வந்தனர். அப்போது சில கடன் பிரச்சினைகளும் இருந்ததால் அப்பாவின் தொழில்களை நானும் கவனிக்கத் தொடங்கினேன். இப்போது 7 கல்வி நிறுவனங்களை நாங்கள் நடத்தி வருகிறோம். அதில் சுமார் 7 ஆயிரம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்போது எங்களிடம் சுமார் ஆயிரம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்,” என்கிறார் கவின்.
கல்வி நிறுவனங்கள், அப்பாவின் தொழில் என பிஸியாக இருந்த போதும் 2015ம் ஆண்டு தனியாக கே3 (K3) என்ற கன்சல்டிங் கம்பெனியையும் ஆரம்பித்துள்ளார். அதன் மூலம் மற்ற தொழில் நிறுவனங்களுக்கான அனைத்து ஆலோசனைகளையும், மாணவர்களுக்கான எதிர்கால வழிகாட்டுதலையும் வழங்கத் தொடங்கினார்.
ஜனவரி 2020ல் பேண்டமிக், அதாவது கொரோனா சர்வதேச பரவல் பற்றிய விழிப்புணர்வு இல்லாத காலகட்டத்திலேயே பிபிஇ உபகரணங்கள் தயாரிப்பது தொடர்பான 'மை பிபிஇ வெல்னஸ் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட்' என்ற கம்பெனியை ஆரம்பித்துள்ளார் கவின். ஏதோ உள்ளுணர்வினால் சமூகத்திற்கும், மக்களுக்கும் பயன்படும் வகையில் ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அதனை ஆரம்பித்திருக்கிறார். ஆனால் அப்போது கொரோனா பற்றிய விழிப்புணர்வு அவ்வளவாக இல்லாததால், கவினின் முயற்சிக்கு அவ்வளவாக வரவேற்பு இருக்கவில்லை.
தன் நண்பர் ராஜா பழனிச்சாமி என்பவருடன் சேர்ந்து தனது மொத்த சேமிப்பையும், அதாவது தலா ஆளுக்கு ஒரு கோடி ரூபாய் முதலீட்டில் ‘மை புரொடக்ஷன்’ என்ற நிறுவனத்தை அவர்கள் தொடங்கினர். தொடர்ந்து பிபிஇ உபகரணங்களை தயாரித்து வந்தனர்.
அதன்பலனாக மார்ச் மாதம் இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது, 7 மாநிலங்களுக்கு மை புரொடக்ஷனால் பிபிஇ உபகரணங்களை எளிதாகத் தர முடிந்துள்ளது. இந்தியா மட்டுமின்றி உலக சுகாதார நிறுவனம் மற்றும் வெளிநாடுகளுக்கும் தங்களது பொருட்களை இந்நிறுவனம் ஏற்றுமதி செய்துள்ளது.
“ஜனவரி மாதத்திலேயே நாங்கள் பிபிஇ கிட் தயாரிப்பை ஆரம்பித்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதும் தரமான பொருட்களை சரியான விலையில் தர முடிந்தது. இதனால் சந்தையில் எங்களது பொருட்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. லாக்டவுன் ஆரம்பித்த போது, ஒடிசா அரசுக்கு 2 லட்சம் கவச உடை கண்ணாடி தேவைப்பட்டது. சந்தையில் ஒரு கண்ணாடி ரூ.180க்கு மட்டுமே கிடைத்தது. குறைந்த விலையில் மற்றும் சப்ளை செய்யும் அளவு கம்பெனிகளும் இல்லை. எனவே அதனை நாங்களே தயாரித்து விற்பனை செய்ய முடிவெடுத்தோம்,” என்றார் கவின்.
அதன் பலனாக ஒரு கண்ணாடியை எங்களால் ரூ.45க்கு தர முடிந்தது. சரியான லாபத்தோடு, தரமான பொருளை உற்பத்தி செய்த நிம்மதியும் ஏற்பட்டது. இதனால் ஒடிசா அரசுக்கும் ஒரு கோடி ரூபாய் வரை மிச்சம் ஆனது.
அப்போது தான் நாங்கள் முடிவெடுத்தோம், இனி நாமே தேவையான பொருட்களைத் தயாரிக்கும் போது, தரமானதாக அதே சமயத்தில் குறைவான விலையில் விற்பனையும் செய்ய முடியும் என்பதை, என்கிறார் கவின்.
இப்படியாக பிபிஇ உபகரணத் தொழில் ஒரு புறம் வெற்றிகரமாகச் சென்று கொண்டிருக்க, ஜூன் மாதத்தில் கவினுக்கு புதிய சிந்தனை ஒன்று உதித்துள்ளது. அதாவது, நாம் இப்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு பயன்படும் விதத்திலான பொருட்களைத்தானே தயாரிக்கிறோம். இனி எதிர்காலத்தில் இது போன்ற பேரழிவுகளை மனிதகுலம் சந்திக்காமல், வரும் முன் காப்பதற்கான முன்னெச்சரிக்கை நோய்த் தடுப்பு உபகரணங்களை ஏன் தயாரிக்கக் கூடாது என சிந்தித்திருக்கிறார்.
அதனைத் தொடர்ந்து அதற்கான வேலைகளை ஆரம்பித்து, ஜூன் மாதத்தில் தங்களது My Production என தங்களது கம்பெனியை அவர் ரிஜிஸ்டர் செய்திருக்கிறார்.
இனி வரும் காலங்களிலும் புதுப்புது வைரஸ்கள் உருவாகலாம். அதைத் தடுக்க முடியாது. ஆனால் இப்போது மக்கள் சந்தித்தது போல் பாதிப்புகளை இனி நாம் சந்திக்கக்கூடாது. இந்த நோக்கத்தில் தான் ’மை புரொடக்ஷன்’ ஆரம்பித்தோம். இதில், பிபிஇ பொருட்கள் மட்டுமில்லாது, மக்கள் அன்றாட வாழ்வில் பயன்படுத்தக்கூடிய பொருட்களை தொழிநுட்ப உதவியுடன் தயாரிக்கத் தொடங்கினோம்.
“தற்போது மக்கள் பயன்படுத்தும் மாஸ்க்குகள் பாக்டீரியா, வைரஸ்களில் இருந்து வேண்டுமானால் பாதுகாக்கலாம். ஆனால், மக்கள் முன் தற்போதுள்ள பெரிய சவாலே காற்று மாசுபாடு தான். எனவே அதற்கும் தகுந்த மாதிரியான காப்பர் மாஸ்க்குகளை இந்தியாவிலேயே முதன்முறையாக நாங்கள்தான் உருவாக்கியுள்ளோம்,” என்கிறார் கவின்.
வைரஸ், பாக்டீரியா மட்டுமின்றி நச்சுத்தன்மை மிகுந்த காற்றுமாசுபாட்டில் இருந்தும் மனிதர்களை தற்காத்துக் கொள்ளும்வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுதான் இவர்களது மாஸ்க்கின் தனிச்சிறப்பு.
தரமானதாக, அதே சமயத்தில் விலை குறைவானதாகவும் இருக்க வேண்டும் என்ற நோக்கில் ரூ.200 முதல் மாஸ்க்குகளை விற்பனை செய்கிறது My. இந்த மாஸ்க்குகளை சுமார் ஆறு மாதம் வரை அப்படியே பயன்படுத்தலாம் என்பது அதன் கூடுதல் சிறப்பு.
காப்பர் மாஸ்க்குகள் மட்டுமின்றி யுவி சானிடைசரும் தயாரித்து விற்பனை செய்து வருகிறது மை புரொடக்ஷன். திரவ நிலையில் உள்ள சானிடைசர்களில் ஆல்கஹால்கள் கலந்திருப்பதால், அதனை உணவு உட்கொள்ளும் போது பயன்படுத்துவது ஆபத்தானது, எளிதில் தீப்பற்றிக் கொள்ளும் வாய்ப்பும் அதிகம் உள்ளது. ஆனால், அதற்கு மாற்றாக எதைப் பயன்படுத்துவது எனத் தெரியாமல் இருப்பவர்களுக்காகத் தான் யுவி சானிடைசர்.
கடந்த அக்டோபர் மாதம் மை புரொடக்சனில் உருவாக்கிய பொருட்களை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளனர். சரியாகத் திட்டமிட்டு, முறையான ஆய்வுகள் செய்து உருவாக்கிய பொருட்களை வெளிநாட்டு ஆய்வகங்களுக்கு அனுப்பி தரச் சான்றுகளைப் பெற்றுள்ளனர். தரத்தில் சமரசம் கூடாது என்பதற்காக இந்தப் பணிகளுக்கு பல மாதங்கள் உழைத்து, லட்சக்கணக்கில் செலவு செய்திருக்கிறார் கவின்.
சார்ஜ் செய்து பயன்படுத்திக் கொள்ளும் வசதியோடு இருக்கிறது ‘மை’ தயாரிக்கும் யுவி சானிடைசர்கள். எங்கும் எடுத்துச் செல்லும் வகையில் பாக்கெட்டில் வைத்துக் கொள்ளும் அளவில் இருப்பது தான் இதன் மற்றுமொரு சிறப்பு. இந்தியாவிலேயே இந்த சிறிய அளவில் யுவி சானிடைசரை வடிவமைத்து, விற்பனை செய்யும் கம்பெனி தங்களது மை புரொடக்ஷன் தான் என பெருமையுடன் கூறுகிறார் கவின்.
"சீனாவில் 3 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகும் இது போன்ற பாக்கெட் சானிடைசர்களை நாங்கள் 2 ஆயிரம் ரூபாய்க்கு தருவதால் எங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தியா மட்டுமின்றி தற்போது துபாய், போர்ச்சுக்கல் போன்ற நாடுகளுக்கும் எங்களது பொருட்களை ஏற்றுமதி செய்து வருகிறோம்," என்றார்.
மாஸ்க் மற்றும் யுவி சானிடைசர்கள் மட்டுமின்றி அடுத்ததாக உலகத்திலேயே மிகச் சிறிய, அதே சமயம் ஒரு வருடம் சார்ஜ் நிற்கக்கூடிய அளவு ஜிபிஎஸ் கருவிகளையும் மை தயாரித்து விற்பனை செய்ய இருக்கிறது.
இதுவரை, சுமார் 80க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களும், 20க்கும் மேற்பட்ட கார்ப்பரேட் நிறுவனங்களும் மை புரொடக்சனின் வாடிக்கையாளர்களாக உள்ளனர். இரண்டு லட்சம் காப்பர் மாஸ்க்குகளையும், 11 ஆயிரத்திற்கும் அதிகமான யுவி ஒன் பாக்கெட் சானிடைசர்களையும், கிட்டத்தட்ட 500 யுவி சேப்களையும் தயாரித்துள்ளது மை.
பாதுகாப்பான வாழ்க்கை முறைக்காக (safty lifestyle) உருவாகி இருக்கும் முதல் கம்பெனி எங்களுடையது தான். இனி வரும் காலங்களில் சுய பாதுகாப்பு என்பது நிச்சயம் மனிதர்களின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாததாக இருக்கும். எனவே, இதுபோன்ற பொருட்களைப் பயன்படுத்தும் போது இனி எதிர்காலத்தில் கொரோனா போன்ற லாக்டவுனை சந்திக்க வேண்டிய அவசியம் இருக்காது.
”இந்த வருட இறுதிக்குள் 10 லட்சம் மாஸ்க்குகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பது தான் மை புரொடக்ஷனின் இலக்கு என்கிறார் கவின். ஒருமுறை தங்களிடம் மாஸ்க் வாங்கினால் நிச்சயம் அடுத்த ஆறு மாதங்களுக்குப் பிறகு தங்களுடைய மாஸ்க்கையே வாங்கும் அளவிற்கு தரமானது தங்களுடைய படைப்பு,” என நம்பிக்கையுடன் பேசுகிறார்.
மாஸ்க், ஆண்டி வைரல் கோட், யுவி ஒன் பாக்கெட் சானிடைசர், யுவி சேப் டேபிள் டாப் சானிடைசர், ஆண்டி வைரல் ஸ்கார்ப், ஜிபிஎஸ் லாக், புளூடூத் லாக் என மக்களின் அன்றாட பாதுகாப்பான வாழ்க்கைக்குத் தேவையான பல பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது மை புரொடக்சன்.
“ஒரு புதிய இடத்திற்கு நீங்கள் செல்லும் போது அது எவ்வளவு பாதுகாப்பானது என்பதை உறுதி செய்து கொள்ளும் அளவிற்கு எங்களது பொருட்கள் இருக்கும். இது முதல் கட்டம் தான். இன்னும் ஆறு மாதத்தில் அடுத்தது வரும். அப்போது இதைவிட சிறப்பான தொழில்நுட்பங்களைக் கொண்ட பொருட்களை அறிமுகப்படுத்த இருக்கிறோம்,” என்கிறார் கவின்.
இப்போதைக்கு பி2பி எனப்படும் முறையில் தொழில் நிறுவனங்களுக்கு மொத்தமாக தங்களது தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறது மை புரொடக்சன்.
17 மாநிலங்களிலும், 3 நாடுகளிலும் தங்களுக்கான டீலர்களை நியமித்துள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் ரூ.80 கோடி வரை விற்பனை இலக்காக நிர்ணயித்து, அதை அடைவதற்கான வேலைகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இம்மாத இறுதியில் இருந்து நேரடியாக பொதுமக்களிடம் விற்பனை செய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. வெளிநாடுகளிலும் சில கம்பெனிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம்.
சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை மற்றும் டெல்லியில் ஆகஸ்ட் மாதத்திற்குள் தங்களது சொந்தக் கடையை ஆரம்பிக்கும் முயற்சிகளும் ஒருபுறம் நடந்து வருகிறது.
“முயற்சி பண்ணிப் பார்த்தால் மட்டுமே ஒரு தொழில் வெற்றியடையுமா இல்லையா என்பது தெரியும். இது முடியுமா என யோசித்துக் கொண்டே இருந்தால், எதையுமே செய்ய முடியாது. ஒரு அடி நாம் முன்னோக்கி எடுத்து வைத்தால் நிச்சயம் மற்ற விசயங்கள் தானாகவே நடக்கும். கஷ்டங்கள், நஷ்டங்கள் ஏற்பட்டால் அதனை அனுபவமாக எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர, நமது முயற்சியில் இருந்து பின்வாங்கக் கூடாது,” என புதிதாக தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு தன் அனுபவங்கள் மூலம் கூறுகிறார் கவின்.
எதிர்காலத்தில் சுகாதார சவால்களை எதிர்கொள்வதற்கு நாம் உலக நாடுகளை நம்பியிருக்காமல், நாமே அவற்றை குறைந்த செலவில் எதிர்கொள்ள எங்களது தயாரிப்புகள் உதவும். இதை உறுதி செய்வதற்காக ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் உற்பத்தி ஆகியவற்றில் நாங்கள் அதிக அளவில் முதலீடு செய்துள்ளோம்.
“இனி எந்தவொரு நோய்க் காரணங்களாலும் கல்வி நிறுவனங்களோ அல்லது தொழில் நிறுவனங்களோ மூடப்படக்கூடாது. கல்வி கற்கும் இடம், வேலை பார்க்கும் சூழல் மட்டுமல்ல மக்களுக்கு தங்களைச் சுற்றியுள்ள அனைத்துமே பாதுகாப்பானது என்ற உணர்வினை எங்களது பொருட்கள் உருவாக்கும்,” என உறுதிப்படக் கூறுகிறார் கவின்.