#100UNICORNS | ‘யுனிக்’ கதை 23 - DREAM11: இந்திய ஃபேன்ட்ஸி கேமிங் துறையின் கிங் ஆன கதை!
மொபைல் மற்றும் இன்டர்நெட் புரட்சியால் ஃபேன்டஸி கேமிங் தொழில் இந்தியாவிலும் வளர்ந்து வருகிறது என்றாலும், இந்தப் பிரிவில் முன்னோடியாக விளங்குவது Dream11. யூனிகார்ன் கிளப்பில் நுழைந்த முதல் இந்திய கேமிங் நிறுவனம் பற்றிய கதை இது!
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) ஃபீவர் தொடங்கிவிட்டது. சரியான நேரத்தில் சொல்லப்பட வேண்டிய ஒரு கதையே இந்த யூனிகார்ன் எபிசோட். நாளுக்கு நாள் ரசிகர்களை என்டெர்டெயின்மென்ட்டின் உச்சத்தில் உட்கார வைத்துக்கொண்டு இருக்கும் ஐபிஎல் விளையாட்டை சிலர் மைதானத்திலும், பலர் டிவியிலும் பார்த்து வருகிறார்கள்.
ஆனால், இதையெல்லாம் தாண்டி ஒரு பெருங்கூட்டம் 'ஃபேன்டஸி கேமிங்' (Fantasy gaming) வழியாக விளையாடி வருகிறார்கள். இந்திய ஃபேன்டஸி கேமிங் சந்தையில் கிங் ஆக வலம்வந்து கொண்டிருக்கும்
(ட்ரீம்11) பற்றியதே இந்த அத்தியாயம்.ஃபேன்டஸி கேமிங்... இந்த வார்த்தை 2008-க்கு முன்பு வரை இந்தியாவில் பிரபலம் இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால், ஐபிஎல் எப்படி கிரிக்கெட்டின் வரலாற்றை மாற்றியமைத்ததோ அதைப்போலவே இந்திய ஃபேன்டஸி கேமிங் சந்தையையும் மாற்றியது.
“களத்தில் நிஜத்தில் ஒரு விளையாட்டு நடந்துகொண்டிருக்க, அதிலிருக்கும் வீரர்கள் எப்படி ஆடுவார்கள் என்பதை கணித்து, கற்பனையாக பார்வையாளர்களான நாமும் ஆடும் விளையாட்டே ஃபேன்டஸி கேமிங் அல்லது ஃபேன்டஸி ஸ்போர்ட்ஸ்.”
ஃபேன்டஸி ஸ்போர்ட்ஸ் இன்று பெரும்பாலான விளையாட்டு பிரியர்களால் பைத்தியமாக விளையாடப்படுகிறது. இந்த வகையான கற்பனை விளையாட்டின் மூலம், விளையாட்டுப் பிரியர்கள் பார்வையாளராக இருந்து விளையாட்டை ரசிப்பதோடு, தங்கள் விருப்பப்படி ஒரு கற்பனை அணியை உருவாக்கி வெகுமதி பெற்றுவருகின்றனர்.
மொபைல் மற்றும் இன்டர்நெட் புரட்சியால் ஃபேன்டஸி கேமிங் தொழில் இந்தியாவிலும் வளர்ந்து வருகிறது என்றாலும், ஃபேன்டஸி கேமிங் பிரிவில் முன்னோடியாக விளங்குவது ட்ரீம்11. யூனிகார்ன் கிளப்பில் நுழைந்த முதல் இந்திய கேமிங் நிறுவனம் ட்ரீம்11 ஆகும்.
Dream11 ஐடியா இதுதான்...
ட்ரீம்11 சகாப்தத்தின் தொடக்கத்தை பார்ப்பதற்கு முன்னர் ட்ரீம்11 எப்படிச் செயல்படுகிறது என்பதை பார்க்கலாம். ஏனெனில், யூனிகார்ன் கிளப்பில் நுழைந்த முதல் இந்திய கேமிங் நிறுவனமாக ட்ரீம்11 உயர்ந்தது அந்த ஐடியா மூலமாகவே.
உதாரணமாக, சமீபத்தில் நடந்த சென்னை - ராஜஸ்தான் இடையேயான ஐபிஎல் போட்டியே எடுத்துக்கொள்ளுங்கள். சென்னை - ராஜஸ்தான் அணிகளில் இடம்பெற்றிருந்த 22 வீரர்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான (மொத்தம் 11 வீரர்கள்) பேட்ஸ்மென், பவுலர், கீப்பர் அடங்கிய ஒரு கற்பனை அணியை நாம் உருவாக்க வேண்டும். போட்டி தொடங்கும் முன்பே உருவாக்கிக் கொண்ட அந்த அணிக்கு ஒரு கேப்டன் மற்றும் துணை கேப்டன் அவசியம்.
வீரர்கள் களத்தில் எடுக்கும் ஒவ்வொரு ரன்னுக்கும், விக்கெட்டுக்கும், கேட்ச்சுக்கும் பாயின்ட்ஸ் உண்டு. நாம் தேர்வு செய்திருக்கும் கற்பனை அணியில் உள்ள வீரர்கள் யார் யார் எவ்வளவு ரன், விக்கெட் எடுக்கிறார்கள் என்பதை வைத்து நமக்கான பாயின்ட்ஸ் கிடைக்கும். கேப்டன் எடுக்கும் பாயின்ட்ஸ் இரண்டு மடங்காகக் கிடைக்கும் அதேவேளையில், துணைக் கேப்டன் எடுக்கும் பாயின்ட்ஸ் ஒன்றரை மடங்காக கிடைக்கும்.
ட்ரீம் 11-ல் நடத்தப்படும் பல போட்டிகளில் (Contest) நமது கற்பனை அணியை இணைத்துக்கொள்ள முடியும். ஒரே அணியை, பல போட்டிகளில் (Contest) விளையாட முடியும். எனினும், யாருடைய அணி அதிக பாயின்ட் எடுக்கிறதோ அதுவே வெற்றிபெறும். பணமே இதில் பிரதானம். ட்ரீம் 11-ல் நடத்தப்படும் போட்டிகளில் பங்கேற்க நுழைவுக்கட்டணம் உண்டு. பணமில்லாத போட்டிகளும் நடத்தப்படுகின்றன. எனினும், கட்டணம் உள்ள போட்டிகளுக்கே மவுசு.
இதில் எப்படி பரிசு கிடைக்கும் எனத் தோன்றுகிறதா, இதோ அதற்கும் விளக்கம் தருகிறேன். 100 அணிகள் கொண்ட ஒரு போட்டி நடத்தப்படுகிறது என வைத்துக்கொள்ளுங்கள். இதில் கலந்துகொள்ள ஒவ்வொரு அணிக்கும் தலா 10 ரூபாய் நுழைவுக்கட்டணம். அப்படி என்றால் மொத்தம் 1000 ரூபாய் வரவு. இதில், அதிக பாயின்ட் எடுத்து முதலில் வரும் சில அணிகளுக்கு அவர்கள் எடுக்கும் பாயின்டை பொறுத்து குறிப்பிட்ட தொகை பரிசாக அளிக்கப்படும். மீதமுள்ள தொகை அனைத்தும் கம்பெனிக்கு, அதாவது, ட்ரீம்11 எடுத்துக்கொள்ளும். ஐடியா எப்படி இருக்கிறது?
இது சூதாட்டம் எனத் தோன்றுகிறதா? இந்திய அரசின் வரையறையின்படி, “எந்தவிதத் திறனும் ஆராய்ச்சியும் இல்லாமல் அதிர்ஷ்டத்தை மட்டுமே நம்பி அதன் மூலம் பணம் வெல்வதே சூதாட்டம்” ஆகும். சொல்லப்போனால் இச்சட்டமே ட்ரீம் 11 காப்பாற்றி கொண்டுவருகிறது எனலாம். ஏனென்றால், ட்ரீம்11 ஃபேன்டஸி கேமிங்கை விளையாட அதிர்ஷ்டம் மட்டும் இருந்தால் போதாது. கிரிக்கெட் குறித்த அறிவும் ஆராய்ச்சியும் மிக நுட்பமாக தேவை.
ட்ரீம்11-க்கு தடை கேட்டு உச்ச நீதிமன்றம் வரை பலர் நீதிமன்ற படியேறியபோது இந்த வாதத்தை முன்வைத்தே அந்த வழக்குகளை தகர்த்தெறிந்தது அந்நிறுவனம். அதோடு, நில்லாமல், இதே வாதத்தை விளம்பரம் மூலமாகவும் மக்களிடம் கொண்டு சேர்த்தது, அதுவும் தோனி மூலம்.
சில ஆண்டுகள் முன்பு, ட்ரீம் 11 விளம்பரத்துக்கு தோன்றிய தோனி ஒவ்வொரு முறையும் 'கேலோ திமாக் சே' என்றார் அல்லவா, அதன் அர்த்தம் 'மூளையை பயன்படுத்தி விளையாடு...' என்பதே.
ட்ரீம் 11 உருவாக்கிய ஹர்ஷ் ஜெயின்...
இந்தியாவின் முதல் கேமிங் யூனிகார்ன் என்ற அந்தஸ்த்தை ட்ரீம் 11 பெற முழுமுதற் காரணம் இந்த ஹர்ஷ் ஜெயின். மும்பையில் பிறந்து வளர்ந்த ஹர்ஷ், ஒரு பெரிய இடத்து பையன். இன்னும் சொல்வதென்றால் திருபாய் அம்பானி பெற்றெடுக்காத வாரிசு அல்லது அம்பானியின் மூன்றாவது மகன் எனச் சொல்லப்படும் பிரபல தொழிலதிபர் ஆனந்த் ஜெயினின் வாரிசுதான் ஹர்ஷ்.
மும்பையில் தொடக்கக் கல்வி, இங்கிலாந்தில் உள்ள செவெனோக்ஸ் பள்ளியில் உயர்நிலை கல்வி, பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் இளங்கலை பொறியியல் படிப்பு, மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பயிற்சியாளர் என ஹர்ஷ் ஜெயினின் தொடக்க வாழ்க்கை அமைந்தாலும் 2007-08-ல் தனது தந்தையுடன் தங்களின் குடும்ப நிறுவனமான ஜெய் கார்ப் லிமிடெட் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் மேலாளராக 13 மாதங்கள் பணிபுரிந்த சமயம்தான் அவரின் வாழ்க்கையின் முக்கியமான கட்டம்.
2008ல் தான் ஐபிஎல் எனப்படும் இந்தியாவின் மிகப் பெரிய பிரீமியர் லீக் தொடங்கியது. இக்காலகட்டத்தில் உலகம் முழுவதும் ஃபேன்டஸி கேமிங் பிரபலம். ஆனால் இந்தியாவில்? இயல்பாகவே, இந்திய கிரிக்கெட் அணியின் தீவிர ரசிகரும், 2001 முதல் EPL ஃபேன்டஸி கால்பந்து விளையாட்டை விளையாடி வரும் அமெரிக்க ரிட்டர்ன் ஹர்ஷ் ஜெயின் இந்தக் கேள்வியை தனக்குள்ளும் எழுப்பி தேடலைத் தொடங்கினார்.
மில்லியன் கணக்கானவர்களால் கிரிக்கெட் ஒரு மதமாக போற்றப்படும் இந்தியாவில் ஆன்லைன் ஃபேன்டஸி கிரிக்கெட் விளையாட ஏற்ற தளம் எதுவும் இல்லை என்பதே அவரின் தேடலுக்கான விடையாக கிடைத்தது. விடையோடு நில்லாமல் தீர்வு காண யோசித்தவருக்கு, ஆன்லைன் ஃபேன்டஸிக்கான ஓர் இணையதளத்தை தொடங்கினால் நிச்சயம் சக்ஸஸ் என்பது ஸ்பார்க்காக தெறிக்க கோதாவில் குதிக்க ரெடி ஆனார், தனியாக இல்லாமல் கூட்டணியோடு குதித்தார்.
கிரிக்கெட்டில் தனியாக ஓடினால் ரன் கிடைக்காது அல்லவா. அதையும் யோசித்திருப்பாரோ என்னவோ, பென்சில்வேனியா பல்கலைக்கழகம் மற்றும் கொலம்பியா பிசினஸ் ஸ்கூலில் தன்னுடன் பயின்ற தனது சகா பவித் சேத் உடன் பார்ட்னர்ஷிப் அமைத்தார். ட்ரீம் ஸ்போர்ட்ஸ் என்ற நிறுவனத்தின் கீழ் ட்ரீம் 11 உதயமானது. இதற்கு மூலதனம் கையிலிருந்த பணம், குடும்பத்தார் தந்த பணம் மட்டுமே.
இப்போது ட்ரீம்11-ல் கேம் ஃபார்மெட் தொடக்கத்தில் இல்லை. அப்போது இதில் இருந்து முற்றிலும் வேறுமாதிரியான ஃபார்மெட். பயனர்கள் அப்போது விளையாட பணம் கட்டவும் தேவையில்லை. விளம்பரங்கள் மூலமே வருமானம் என்பது வந்தது. கிட்டத்தட்ட சாம்பியன்ஸ் லீக் போன்ற கால்பந்துத் தொடர்கள் பின்பற்றிய பார்மெட் அது. லட்சக்கணக்கான பேர் ஒரு போட்டியில் பங்கேற்றால் அதில் ஒரு சிலருக்கு மட்டும் சிறப்புப் பரிசுகள். அதோடு, ஒவ்வொரு போட்டியையும் விளையாட முடியாது. மாறாக, ஒரு தொடர் முழுவதும் விளையாடுவதற்கு மட்டுமே வாய்ப்பு.
இந்த ஃபார்மெட் ஹர்ஷ் எதிர்பார்த்தது போல வெற்றியை கொடுக்கவில்லை. 10, 15 பேர் மட்டும் வெற்றிபெறும் ஒரு விளையாட்டை லட்சக்கணக்கானோர் ஒரு தொடர் விளையாடச் சொன்னால் எப்படி வொர்க் அவுட் ஆகும், முடியாதல்லவா... இதை புரிந்துகொண்ட மாற்றி சிந்தித்தார்.
போதாத காலத்துக்கு ஐபிஎல்லும் தனது சொந்த ஃபேன்டஸி லீக் தளத்தை ஆரம்பிக்க போட்டி கடுமையானது. இருந்த நிதியையும் வளரும் முன்பே விளம்பரத்துக்கு செலவானதால் பண ரீதியாகவும் சிக்கல். ட்ரீம்11-ன் மோசமான காலகட்டம் என இதைச் சொல்லலாம்.
முதலீட்டுக்காக பல நிறுவன கதவுகளை தட்டிய ஹர்ஷுக்கு ஏமாற்றமே. எனினும், இந்தியாவின் மிகப் பெரிய டிஜிட்டல் ஏஜென்சிகளில் ஒன்றாக ‘ரெட் டிஜிட்டல்’ கைகொடுத்தது. இதுவும் ஹர்ஷ் தொடங்கிய ஸ்டார்ட் அப்தான். ட்ரீம்11-ஐ கரைசேர்க்கும் கப்பலாகவே ரெட் டிஜிட்டலை நினைத்தார். அதேபோல், அது கரையும் சேர்க்க மீண்டும் உயிர்பெற்றது ட்ரீம்11. நிதியை சமாளித்தவர், அடுத்ததாக ட்ரீம்11-இன் ஃபார்மெட் பக்கம் கவனம் செலுத்தினார்.
சில அதிரடி முடிவுகள். அதில் முதன்மை... தொடர் முழுவதும் விளையாடுவதற்கு பதிலாக ஒரு போட்டியில் விளையாடினாலே பரிசு. இரண்டாவது விளம்பர வருவாய் இல்லாமல், பயனர்களிடம் இருந்தே பணம் பெறுவது. வெற்றி பெற்றவர்களுக்கான பரிசும் பணமே. ஒரு விஷயத்தில் மட்டும் ஹர்ஷ் சமரசம் செய்யவில்லை. அது கிரிக்கெட் திறமையை எடுத்துச் சொல்லும்படியான டிசைன் என்பதே. அப்போதுதான் ட்ரீம்11 கிரிக்கெட் ரசிகர்களை அதிகளவு ஈர்க்கும் என நம்பினார். நம்பிக்கை வீண் போகவில்லை.
இந்த சின்ன மாற்றங்கள் ட்ரீம்11-ஐ அடுத்த சில ஆண்டுகள் உச்சத்தில் ஏற்றவைத்தது. அதுவும் கடந்த ஆண்டுகளில் ட்ரீம்11 ஐடியா செம ஹிட். ட்ரீம்11-ன் பிசினஸ் மாடலை பின்பற்றி புற்றீசல் போல் ஃபேன்ட்ஸி நிறுவனங்கள் மொய்க்கத் தொடங்கிவிட்டன. எத்தனை நிறுவனங்கள் வந்தால் என்ன, இந்திய ஃபேன்ட்ஸி கேமிங் துறையில் கிங் நான்தான் ட்ரீம்11 உரக்க சொல்லிவருகிறது.
இதற்கு ஒரு சின்ன உதாரணம்... 2016-ல் ட்ரீம்11-ன் பயனர்கள் எண்ணிக்கை 2 மில்லியன். 2020-ல் 100 மில்லியன். 2021-ல் 140 மில்லியன், தற்போது 160+ மில்லியன். இந்த அசுர வளர்ச்சிக்கு ஏற்ப வருமானம் கொட்ட வேண்டும் இல்லையா..? கடந்த நிதி ஆண்டு (2022) மட்டும் இந்நிறுவனம் பெற்ற வருவாய் ரூ.3,840 கோடி. நிகர லாபம் மட்டும் ரூ.141 கோடிக்கும் அதிகம்.
இதுமட்டுமில்லாமல், டைகர் குளோபல், டி1 கேபிடல், ஃபால்கன் எட்ஜ், டிஎஸ்டி குளோபல் மற்றும் ரெட்பேர்ட் கேபிடல் போன்ற நிறுவனங்களின் உதவியால் கடந்த 2021-ல் ட்ரீம்11 பெற்ற முதலீடு 840 மில்லியன் டாலர். இந்த முதலீடுகளால் 2021-ல் ட்ரீம்11 நிறுவனத்தின் மதிப்பு 8 பில்லியன் டாலராக உயர்ந்தது. கடந்த 2018 செப்டம்பர் தொடங்கி ஏப்ரல் 2019 வரையான ஏழு மாதங்களில், ஒவ்வொரு மாதமும் இந்த நிறுவனத்தின் மதிப்பு சுமார் 100 மில்லியன் டாலர் அதிகரித்துக் கொண்டே வந்திருக்கிறது குறிப்பிடத்தக்கது.
சர்ச்சைகள்...
நூற்றுக்கணக்கில் உள்ள ஊழியர்களைக் கொண்டு இயங்கும் ட்ரீம்11 நிறுவனத்தில் சரிவு, வளர்ச்சிகளை தாண்டி சர்ச்சைகளும் சுற்றி நிறைய உண்டு. குறிப்பாக, அதிகத் தொகையை தாங்களே வைத்துக்கொள்ளும் நோக்கில் செயற்கை நுண்ணறிவு bots மூலம் அணிகளை உருவாக்கி ட்ரீம்11 மனிதர்களுடன் ஆட வைக்கிறது என்பது.
அடுத்தது, உண்மையில் முதல் பரிசு கொடுக்கப்படுகிறதா என்பதும். ஏற்கனவே சூதாட்டம் என்கிற மிகப் பெரிய குற்றச்சாட்டு விடாகொண்டனாக சுற்றி வருகிறது. சட்டத்தின் ஓட்டையைப் பயன்படுத்தி சூதாட்டத்தை மிகவெளிப்படையாக ட்ரீம்11 ஊக்கப்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டுக்கு வலுசேர்க்கும் விதமாக கூகுள் பிளேஸ்டோர் ட்ரீம்11-ஐ இதுவரை அனுமதிக்கவில்லை.
எல்லாம் ஒருபுறம் இருந்தாலும், இதுவரை ட்ரீம் ஸ்போர்ட்ஸ் தரப்பில் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பெரிதாக பதில் கொடுக்கப்பட்டதில்லை. மாறாக,
“நான் அடிப்படையில் மிகத் தீவிரமான விளையாட்டு ஆர்வலர். என்னால் விளையாட்டில் ஏமாற்றுவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. நான் கண்டிப்பாக அதைச் செய்யவும் மாட்டேன்,” என வாதுரைக்கும் ஹர்ஷ் ஜெயின், தனது வாதத்துக்கான வலுவை தனது பயனர்களிடமே விட்டுவிட்டு அடுத்த வேலைகளை பார்த்து வருகிறார்.
பயனர்களுக்குத் தெரியும் பரிசு வருகிறதா இல்லையா என்று என்பதுதான் அவரின் தொனிக்கான மீனிங்.
அவரின் ரிப்ளை போலவே, செயல்களும் உள்ளன. குற்றச்சாட்டுகளை கண்டுகொள்ளாமல், ஐ.பி.எல்-இன் அதிகாரபூர்வ ஸ்பான்சர், பார்ட்னர் அடுத்தகட்ட பாய்ச்சலில் உள்ள ட்ரீம்11 கிரிக்கெட் என்பதை தாண்டி கால்பந்து, ஹாக்கி, ரக்பி, கூடைப்பந்து மற்றும் பல விளையாட்டுகளை ஃபேன்ட்ஸி கேமிங் பார்மெட்டை கொண்டுவந்து வெற்றிக்கொடி நாட்டிவருகிறது.
எதிர்மறை விமர்சனங்களை, விளையாட்டு ஆர்வலர்கள் மத்தியில் அதி பயங்கர வரவேற்பு பெற்ற ஸ்டார்ட்அப் என வலம்வருகிறது. வரவேற்பும், மதிப்பும் கூடகூட பரிசும் கூட வேண்டும் அல்லவா..?
2023 ஐபிஎல் தொடரில் முதல் பரிசுத்தொகை ரூ.2 கோடி. அதிலும் முதல் சில நாட்கள் ஆடி கார் ஒன்றும் முதல் பரிசோடு இணைப் பரிசாக வழங்கப்பட்டது.
யூனிகார்ன் தொடரும்...
#100Unicorns | ‘யுனிக்’ கதை 22 - Delhivery: சாஹில் அணியினரின் கொரியர் புரட்சியும்; வெற்றியும்!