ஏழ்மையை வென்ற கிரிக்கெட் ஹீரோ - 5 பந்துகளில் 5 சிக்சர்கள் பறக்கவிட்ட ரிங்கு சிங்-ன் இன்ஸ்பிரேஷன் கதை!
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், கடைசி ஓவரில் தொடர்ந்து 5 சிக்சர்கள் அடித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை மாபெரும் வெற்றி பெற வைத்த ரிங்கு சிங் யார் என்பதை அறிந்து கொள்ள ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் ஆர்வத்துடன் உள்ளனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை தனி ஒருவனாக ஜெயிக்க வைத்த ரிங்கு
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், கடைசி ஓவரில் தொடர்ந்து 5 சிக்சர்கள் அடித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை மாபெரும் வெற்றி பெற வைத்த ரிங்கு சிங் யார் என்பதை அறிந்து கொள்ள ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் ஆர்வத்துடன் உள்ளனர்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை தனி ஒருவனாக ஜெயிக்க வைத்த ரிங்கு சிங் வாழ்க்கையின் சுவாரஸ்யமான விஷயங்களைப் பார்க்கலாம்...
கிரிக்கெட் போட்டியின் போது ஒரே ஓவரில் தொடர்ச்சியாக ஒவ்வொரு பந்திலும் சிக்ஸர் அடிப்பதை நாம் பார்த்திருக்கிறோம். அதாவது, ஆறு பந்துகளில் ஆறு சிக்ஸர்கள் அடிப்பது போன்ற அரிய சாதனைகளை ரவி சாஸ்திரி, யுவராஜ் சிங், ஹெர்ஷல் கிப்ஸ் போன்ற வீரர்கள் செய்துள்ளனர்.
ஆனால், தொடர்ச்சியாக ஐந்து சிக்ஸர்கள் அடித்து அபார ஸ்கோரை முறியடிப்பது என்பது மிகவும் அரிதான விஷயம். 2016 ஆம் ஆண்டு, இங்கிலாந்துக்கு எதிரான டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் கார்லோஸ் பிராத்வைட் அந்த சாதனையைப் படைத்தார்.
அதன்பிறகு, 2020ம் ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக பேட்டிங் செய்த ராகுல் தெவாடியா, பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக அந்த சாதனையை நிகழ்த்தினார். சமீபத்திய 2023 ல், நம் இந்தியாவிலிருந்து மற்றொரு பேட்ஸ்மேன் அந்த பட்டியலில் இணைந்தார். தற்போது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இந்த சாதனை படைத்து ரிங்கு சிங் அசத்தியுள்ளார்.
ரிங்கு சிங் யார் தெரியுமா?
உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் வீடு, வீடாக கேஸ் சிலிண்டர் டெலிவரி செய்யும் தொழிலாளிக்கு 5வது குழந்தையாக பிறந்தார். இவருடைய மூத்த அண்ணன் ஆட்டோ ரிக்ஷா ஓட்டிவருகிறார். பள்ளிப் படிக்கும் காலத்தில் கூட வீட்டிற்கு வந்ததும் அப்பாவுக்கு உதவியாக கேஸ் சிலிண்டர் போடும் வேலையை ரிங்கு சிங் பார்த்து வந்துள்ளார்.
ரிங்குவிற்கு சின்ன வயதில் இருந்தே கிரிக்கெட் தான் உயிர் மூச்சாக இருந்துள்ளது. படிப்பை விட விளையாட்டை அதிகம் நேசித்த ரிங்கு சிங், 9ம் வகுப்பில் ஃபெயில் ஆனதை அடுத்து பள்ளி படிப்பை கைவிட்டார்.
பொருளாதார ரீதியாக ரிங்குவின் குடும்பம் மிகவும் பின்தங்கியது. எனவே, பெரிய கிரிக்கெட் வீரராக வந்தால் அதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து குடும்பத்தின் கடனை அடைக்கவும், சகோதர்களை நல்ல நிலைக்கு கொண்டு வரவும் முடியும் என ரிங்கு கனவு கண்டார்.
இருப்பினும் அப்போதைய குடும்பக் கஷ்டத்தை சமாளிப்பதற்காக பள்ளிப் படிப்பை கைவிட்ட ரிங்கு, தனது அண்ணனுடன் சேர்ந்து வேலை தேடி அலைந்தார். கடைசியில் அவருக்கு ஒரு கோச்சிங் சென்டரில் துப்புரவுப் பணியாளர் வேலை கிடைத்தது.
“எனது மூத்த சகோதரர் மூலமாக பயிற்சி நிறுவனம் ஒன்றில் துப்புரவு பணியாளர் வேலை கிடைத்தது. தினமும் அங்கு காலையில் சென்று தரையை சுத்தம் செய்ய வேண்டியது என் வேலை. ஆனால் கிரிக்கெட்டை தொடர விரும்பியதால் வேலையை விட்டுவிட்டேன்,” என்கிறார்.
ஐபிஎல் நுழைவு:
2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. கடைசியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ.80 லட்சத்துக்கு ஏலம் ரிங்கு சிங்கை ஏலத்தில் எடுத்தது.
“அது 20 லட்சமா இருக்கும்னு நினைத்தேன். ஆனா எதிர்பாராமல் 80 லட்ச ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டேன். அந்த பணத்தில் இருந்து என் அண்ணன் கல்யாணத்திற்கு உதவினேன். என் அக்காவின் திருமணத்திற்காகவும் சேமித்து வைத்தேன். அதன் பின்னர் ஒரு நல்ல வீட்டிற்கு குடியேறினோம்.”
கிரிக்கெட் வீரராக ரிங்கு சிங் எப்படி வளர்ந்தார்?
2013ம் ஆண்டு உத்தரபிரதேச 16 வயதுக்குட்பட்டோருக்கான அணிக்கு ரிங்கு சிங் தேர்வு செய்யப்பட்டார். அதன்பிறகு, ரிங்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 19 வயதுக்குட்பட்டோருக்கான அணிக்கும் தேர்வானார்.
2013ல் மும்பை இந்தியன்ஸ் நடத்திய முகாமில் ரிங்கு சிங் பங்கேற்று 31 பந்துகளில் 95 ரன்கள் எடுத்தார். 2018 விஜய் ஹசாரே டிராபி போட்டியில், ரிங்கு சிங் 44 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 91 ரன்கள் எடுத்தார்.
அலிகாரைச் சேர்ந்த மசூத் அமின் என்பவர்தான் ரிங்குவை சிறு வயது முதலே வழிநடத்தி வந்துள்ளார். இப்போதும் அவர் தான் ரிங்குவை வழிநடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்கள் இதயத்தை கொள்ளையடித்த ரிங்கு:
நேற்று குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி வெற்றி பெற கடைசி ஓவரில் 29 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்தை சந்தித்த உமேஷ் யாதவ் ஒரு ரன் எடுத்து ரிங்கு சிங்கை பேட்டிங் முனைக்கு அனுப்பினார்.
இடது கை பேட்ஸ்மேன் மற்றும் சுழற்பந்துவீச்சாளரான ரிங்கு சிங், அடுத்தடுத்து 5 பந்துகளில் சிக்ஸர்களை விளாசி, கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை வெற்றி வாகை சூட வைத்தார். இந்த வரலாற்று சிறப்பு மிக்க சம்பவத்தின் மூலமாக ரிங்கு தான் கனவு கண்டதை போலவே கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார்.
தொகுப்பு: கனிமொழி
ஏழ்மை; வறுமை; 1 ஆண்டு தடை; முழங்கால் சர்ஜரி; சின்னப்பம்பட்டி டூ ஐபிஎல் அடைந்த நடராஜன்!