வறட்சியின் கோரப்பிடி, மழைநீர் சேகரிப்பின் மகத்துவம் உணர்ந்த மக்கள்: சென்னை ரெயின் மேனின் ஆதங்கம்!
நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பதுபோல மழைநீரின் அருமையை கடும் தண்ணீர் பற்றாக்குறையும், வறட்சியும் நிலவும் போதுதான் உணர்கின்றனர் சென்னைவாசிகள் என்கிறார் ரெயின் மேன் சேகர் ராகவன்.
1995ஆம் ஆண்டில் இருந்து மக்கள் மழைநீரை சேமித்துவர வேண்டும் என கடந்த 24 ஆண்டுகளுக்கும் மேலாக பிரச்சாரம் செய்து வருகிறார் சென்னையின் ’மழை மனிதர்’ என மக்களால் செல்லமாக அழைக்கப்படும் 72 வயதான சேகர் ராகவன்.
மழை நீர் சேகரிப்பை வலியுறுத்தி இவர் வீடு வீடாகச் சென்று விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தபோது, இவரை வீட்டிக்குள் அனுமதிக்காமலும், காவலாளியை வைத்து விரட்டியடித்தவர்களும் இன்று இவரது பிரச்சாரத்தின் உண்மையை, அவர் கூறிய பிரச்னையின் தீவிரத்தை உணர்ந்து இன்று இவரைத் தேடி வந்து எவ்வாறு மழை நீரை சேமிப்பது, எப்படி சேமிப்பது என ஆலோசனை பெற்றுச் செல்கின்றனர்.
இதுகுறித்து முனைவர் சேகர் ராகவன் நமக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,
“நான் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை பெசன்ட் நகர் பகுதியில் வசித்து வருகிறேன். இப்பகுதி முழுவதும் மணற்பாங்கான இடமாதலால் மழை பெய்தால் தண்ணீர் முழுவதும் பூமிக்கடியில் சென்றுவிடும். இதனால் இப்பகுதியில் எப்போதும் நிலத்தடி நீர் மட்டம் நன்றாக இருக்கும்.”
ஆனால் காலப்போக்கில் இப்பகுதி மட்டுமன்றி சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் கட்டப்படும் தனி வீடுகளாகட்டும் அல்லது அடுக்குமாடி குடியிருப்புகளாகட்டும், கட்டடத்தைச் சுற்றி துளியளவு கூட இடமின்றி முழுக்க முழுக்க சிமெண்ட் கொண்டு பூசி விடுகின்றனர்.
இதனால் மழைநீர் பூமிக்கடியில் செல்ல வழியின்றி, வாருகால் கால்வாய் மூலம் வடிந்தோடி இறுதியில் கடலில் சென்று கலந்துவிடுகிறது. இதனால் ஆண்டுதோறும் கோடைக்காலத்தில் குடிநீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. நிகழாண்டு இப்பிரச்னை பூதாகரமாக வெடித்துள்ளது, என்கிறார்.
இவ்வாறு நமது மழைநீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வற்ற நிலை காரணமாகவே இன்று சென்னை முழுவதும் நீரின்றி கடும் வறட்சி நிலவி வருகிறது. மக்கள் வறட்சியின் கோரப் பிடியில் சிக்கி, தங்களின் அன்றாட தேவைகளுக்கான தண்ணீருக்கும் கூட அல்லல்படும் அவலநிலை உருவாகியுள்ளது.
”இது இயற்கையாக உருவான தட்டுப்பாடு அல்ல. செயற்கையாக மக்களால், அவர்களின் அறியாமையால், அசட்டையால் உருவான தண்ணீர் தட்டுப்பாடாகும் எனக் கூறும் அவர், நமது வருங்கால தலைமுறைகளை மனதிற்கொண்டாவது, இதே தவறைத் தொடராமல் வரும் வட கிழக்கு பருவமழை காலத்துக்குள் மக்கள் அனைவரும் மழைநீர் சேகரிப்பு அமைப்பை தங்கள் குடியிருப்புகளில் பொருத்தி இனி வரும்காலத்தில் இதுபோன்ற நிலை ஏற்படாது தவிர்க்கவேண்டும்,” என்கிறார்.
இதற்கான அறிவுரை மற்றும் வழிகாட்டுதல்களை மட்டும் வழங்காமல், விரும்புவோருக்கு தாமே முன் நின்று மழைநீர் சேகரிப்பு அமைப்பையும் உருவாக்கித் தருகிறார் சேகர் ராகவன்.
மேலும் இதுகுறித்து அவர் கூறியதாவது, சென்னையில் 39 குளங்கள் உள்ளன. அவற்றை நாம் முறையாக தூர்வாரி பயன்படுத்தவில்லை. ஆனால் நான் விடாமுயற்சியுடன் மாநகரில் என்னால் முடிந்தளவுக்கு மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டு வந்தேன். அப்போது எனது பணிகளின் முக்கியத்துவத்தை உணர்ந்த சென்னையைச் சேர்ந்த வெளிநாடு வாழ் நண்பர்கள் சிலர் இதனை ஓர் இயக்கமாக்கி, மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூறி சிறிதளவு நிதியுதவி அளித்தனர். அதைக் கொண்டு 2002 ஆம் ஆண்டு சென்னையில் மழை இல்லம் எனும் அமைப்பை உருவாக்கி மக்களிடம் விழி்ப்புணர்வுப் பணிகளை மேற்கொண்டு வந்தேன்.
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா எனது மழைநீர் சேகரிப்பு பணிகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து, மழை இல்லத்தை திறந்து வைத்ததோடு மட்டுமன்றி, அடுத்த ஓரிரு மாதங்களில் தமிழகம் முழுவதும் அனைத்து கட்டிடங்களிலும் கட்டாயமாக மழைநீர் சேகரிப்பு அமைப்பை ஏற்படுத்த உத்தரவிட்டார்.
இதையடுத்து, பெரும்பாலான மக்கள் இதனை செயல்படுத்தினர். ஒரு சிலர் இதனை பெயரளவுக்கு மட்டுமே ஏற்படுத்தினர். காலப்போக்கில் மக்கள் இதன் முக்கியத்துவத்தை மறந்து கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர்.
சென்னையில் சராசரியாக 1.4 மி.மீட்டர் அளவு மழை பெய்யும். ஆனால் 2005ஆம் ஆண்டு 2.5 மி.மீட்டர் மழை பெய்தது. அப்போது நாங்கள் மேற்கொண்ட புள்ளவிவரப்படி 70 சதவீதம் அளவுக்கு நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்திருந்தது. மக்கள் மழைநீர் சேகரிப்பு அமைப்பை முறையாக உருவாக்கி பயன்படுத்தி வந்திருந்தால் தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் என்ற வார்த்தைக்கே இடமிருக்காது என்கிறார்.
இந்நிலையில், மீண்டும் 2013ஆம் ஆண்டு அரசு, மழைநீர் சேகரிப்பு அமைப்புகளுக்கு புத்துணர்வு அளித்து இந்த திட்டம் குறித்து ஆய்வு செய்து புள்ளிவிவரங்களை சேகரித்து அறிக்கை சமர்பிக்க அரசு சாரா அமைப்பான எங்களை நியமித்தனர்.
நாங்களும் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டு, அதன் அடிப்படையில் சில முக்கிய பரிந்துரைகளை சமர்ப்பித்தோம். அதில் முக்கியமாக தற்போது நடைமுறையில் உள்ள மழைநீர் சேகரிப்பு முறை தவறானது. அதனை மாற்றவேண்டும். மேலும், மழைநீர் சேகரிப்பை ஊக்குவிக்கவும், கண்காணிக்கவும் தனியாக ஓர் துறையை அமைக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளை வழங்கினோம்.
அதற்குள் நிகழ்ந்த பல்வேறு அரசியல் மாற்றங்களால் எங்களது பரிந்துரைகள் கிடப்பில் போடப்பட்டன. இந்நிலையில், கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரியில் அரசு மீண்டும் எங்களது பரிந்துரைகளை பரிசீலித்து, தமிழ்நாடு கட்டிட விதிகளில் (Tamilnadu building rules) மழைநீர் சேகரிப்பு அமைப்பை கட்டாய விதிமுறையாக்கியிருக்கிறது என்கிறார்.
இது சென்னையின் பிரச்னை மட்டும் கிடையாது. நாளடைவில் தமிழகம் முழுவதும் இதுபோன்ற வறட்சி, தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது. அதற்கு முன் நாம் விழித்துக் கொள்ளவேண்டும்.
அதற்கு முதல்கட்டமாக தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் அரசு சாரா தன்னார்வ அமைப்புகள் மூலம் மழை இல்லம் போன்ற அமைப்புகளை உருவாக்கி, மக்கள் அனைவருக்கும் மழை நீர் சேகரிப்பின் அவசியத்தை உணர்த்தவேண்டும் என்பதே எனது ஆசை எனக் கூறுகிறார் இந்த மழை மனிதர் சேகர் ராகவன்.
மழைநீர் சேகரிப்பு அமைப்பு தொடர்பாக இவரிடம் ஏதேனும் விவரங்களை பெற விரும்பினால், இவரது சென்னை மழை இல்லத்தை 044 – 24416134, 044 – 24918415 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேலும், இவரை 9677043869 என்ற அவரின் செல்பேசியிலும் தொடர்பு கொண்டு விவரங்களை அறியலாம். [email protected] என்ற அவரின் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொண்டாலும், அவர் அனைவரின் சந்தேகங்களுக்கும் விடையளிக்கிறார்.
இனியாவது மக்கள் மழைநீரை வீணாக்காது, அதனை சேகரித்து தாங்களும் பயன்படுத்தி, தங்களின் எதிர்காலத் தலைமுறைக்கும் விட்டுச் செல்லவேண்டும் என்பதே அனைவரின் ஆசையுமாகும்.