72 விமானங்களுக்கு ஆர்டர் செய்த ராகேஷ் ஜுன்ஜுன்வாலா ஆதரவு நிறுவனம்!
போயிங் நிறுவனத்துக்கு கிடைத்த ‘பல்க்' ஆர்டர்!
இந்தியாவின் 'வாரன் பப்பெட்' ராகேஷ் ஜுன்ஜுன்வாலா. இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய்து பிரபலமானவர், ஆப்டெக் லிமிடெட் கணினி மையத்தின் நிறுவனராகவும், பல பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் இயக்குனர் குழுவிலும் பங்கு வகித்து வருகிறார். இந்தியப் பங்குச்சந்தையில் இவருடைய முதலீட்டின் மதிப்பு சுமார் 18,000 கோடி ரூபாய்க்கு மேல் எனக் கூறப்படும் நிலையில் இவர் சொந்தமாக விமான நிறுவனம் ஆரம்பிக்கப் போவதாக தகவல் வெளியானது.
இந்தத் தகவல் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவரின் ஆதரவு பெற்ற இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனமான ’ஆகாசா’ தற்போது போயிங் நிறுவனத்திடம் 72 விமானங்களுக்கு ஆர்டர் செய்துள்ளது. வணிக விமானங்களாக இது தயாரிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. ஒப்பந்தம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆகாசா நிறுவனம்,
"2022 கோடையில் வணிக விமானங்களை இயக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்தியா முழுவதும் வளர்ந்து வரும் தேவையை பூர்த்தி செய்ய எங்கள் புதிய 737 போயிங் விமானங்களை பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளோம்," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
போயிங் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“கிட்டத்தட்ட 9 பில்லியன் டாலர் மதிப்புள்ள பட்டியல் விலையில் இந்த ஆர்டர் பெறப்பட்டுள்ளது. இந்த ஆர்டர் வேகமாக வளர்ந்து வரும் இந்திய சந்தைக்கு சேவை செய்யும் திறனுக்கான முக்கிய அங்கீகாரமாகும். ’ஆகாசா’விற்கு இது ஒரு பெரிய படி. மேலும், போயிங் நிறுவனத்துக்குக் கிடைத்த மாபெரும் பாய்ச்சலுக்கான வாய்ப்பு இது," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய விமான ஆணையமான டிஜிசிஏ இணையத்தில் தெரிவிக்கப்பட்ட தகவல்படி, இந்தியாவில் 700 பயணிகள் விமானங்கள் குறைவாகவே உள்ளன. மேலும், இந்தியாவில் தற்போது இருக்கும் வணிக விமானங்களில் 65% ஏர்பஸ் ஆகும். என்றாலும், போயிங் நிறுவன விமானங்களே இந்திய சந்தையில் ஆதிக்கம் செலுத்தவில்லை.
இந்தியாவில் 540 விமானங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன, அவற்றில் 83% (451) ஏர்பஸ் மற்றும் 89 மட்டுமே போயிங். இந்தியா மட்டுமல்ல, அண்டை நாடுகளிலும் ஏர்பஸ் ஆதிக்கம் செலுத்துகிறது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அனைத்து ஏர்பஸ் விமானங்களைக் கொண்டுள்ளது, மேலும், பாகிஸ்தானிலும் இதுவே உள்ளது. இதனை மாற்ற இதுவே சரியான தருணம் என போயிங் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனிடையே, ராகேஷ் ஜுன்ஜுன்வாலா ஆதரவு பெற்ற இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனமான ஆகாசா நிறுவனத்தை வழிநடத்தும் அனைத்து உயர்மட்டத் தலைவர்களும் முன்னாள் ஜெட் ஏர்வேஸ் நிர்வாகிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
தொகுப்பு: மலையரசு