மற்ற தொழிலதிபர்களை விட ரத்தன் டாடா ஏன் மதிப்புமிக்கவராக இருக்கிறார்?
தொழில் உலகில் அதிகம் மதிக்கப்படுபவராக இருக்கிறார் ரத்தன் டாடா. அவரது கனிவான அணுகுமுறை, பணிவான குணம் ஆகியவற்றால் தனித்து தெரிகிறார். அதுமட்டுமில்லாமல், செல்லப்பிராணிகள் மீது அதீத அன்புகொண்டவர் டாடா. குறிப்பாக நாய்கள்.
ரத்தன் டாடாவின் கடந்த கால பேட்டிகள் மற்றும் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை பார்த்தாலே தெரியும், அவர் நாய்கள் மீது எந்த அளவுக்கு அன்பு கொண்டிருக்கிறார் என்பது. அவர் தனது இன்ஸ்டாகிராமில் தான் வளர்க்கும் நாய்கள் பற்றி மட்டும் பதிவிடாமல், காயமடைந்த, கைவிடபட்ட நாய்களின் குடும்பத்தைக் கண்டுபிடிக்க உதவுவது பற்றியும் பல்வேறு பதிவுகளை பகிர்ந்திருப்பார்.
அதேபோலத்தான் ஸ்ப்ரைட் என்ற பெயரிடப்பட்ட நாய் குறித்தும், அதன் குடும்பத்தை கண்டறிய உதவக் கோரியும் இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்தார். மேலும் அந்த நாயின் புகைப்படம் மற்றும் வீடியோவையும் வெளியிட்டிருந்தார். அந்த பதிவில்,
“நீங்கள் எனக்கு இதற்கு முன்னர் இரண்டு முறை தாராளமாகவும், வெற்றிகரமாகவும் உதவியுள்ளீர்கள். அதற்கு நான் நன்றியுள்ளவனாக இருப்பேன். ஸ்ப்ரைட்டுக்கு ஒரு அன்பான குடும்பத்தைக் கண்டுபிடிக்க மீண்டும் ஒரு முறை எனக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். ஒரு விபத்துக்குப் பிறகு நாயின் பின்னங்கால்கள் முடங்கிப்போயுள்ளன. தத்தெடுப்பு இணைப்பு பயோவில் உள்ளது," என்று பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவு உடனே வைரலாக பரவியது. ஏராளமானோர் கமெண்ட் மற்றும் லைக் செய்திருந்தனர். அதில் ஒருவர், ‘உங்களுடைய பெரும்பாலான ஆடியன்ஸ்களை நல்ல நோக்கத்திற்காக பயன்படுத்துகிறீர்கள். உங்களைப்போன்ற பலரும் இருக்கவேண்டும்,’ என்று தெரிவித்துள்ளார்.
காயம் மற்றும் அதிர்ச்சி காரணமாக ஸ்ப்ரைட்டின் இரண்டு கால்களும் நிரந்தரமாக முடங்கியுள்ளன. சக்கர நாற்காலி உதவியுடன் நாய் நடக்கிறது. டாட்டாவின் பதிவுக்கு இன்ஸ்டாவில் கமெண்ட் செய்த ஒருவர்,
“சார்! தவறாக நினைத்துக்கொள்ளாதீர்கள். நான் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். ஸ்ப்ரைட் சிறுநீர் வெளியேற்றுவதில் சிரமம் இருக்கிறதா? அது உதவிக்கு யாரையாவது அழைக்கிறதா?” என்று கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த டாடா, ‘நல்ல வேளையாக சமீபத்திய சிகிச்சை காரணமாக ஸ்ப்ரைட்டால் தானாக சிறுநீர் கழிக்க முடிகிறது!’ என்று பதிலளித்துள்ளார்.
ஒரு நாய்க்காக டாடா இவ்வளவு மெனக்கெடுப்பதும், அதன் குடும்பத்தையும், வீட்டையும் கண்டறிவதில் மக்களின் உதவியை கேட்பதும் அவருக்கு முதல்முறை அல்ல. கடந்த மார்ச் மாதம், ‘சர்’ என்ற பெயர்கொண்ட நாயின் புகைப்பட்டத்தை பகிர்ந்தவர், ’பல குடும்பங்கள் மாறிய பின்பு, ’சர்’ அவளை கவனிக்க எந்த குடும்பமும் இல்லை. யாரோ ஒருவர் மீது அது இன்னும் அன்பும் நம்பிக்கையும் வைத்து காத்திருக்கிறது,” என்று பதிவிட்டிருந்தார்.
“கடைசியாக, மைராவுக்காக ஒரு அன்பான குடும்பத்தைக் கண்டுபிடிக்க நீங்கள் அனைவரும் தாராளமாக உதவினீர்கள். ‘சர்’ க்காக நாம் இதைச் செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன். உங்கள் வீட்டை அவளுக்குத் திறக்க முடியும் என்று உங்களுக்கு தோன்றினால், அல்லது உங்களுக்கு தெரிந்து யாராவது இருந்தால், தகவல் கொடுத்து உதவுங்கள். நான் உண்மையில் அந்த நாளுக்காக காத்திருக்கிறேன்," என்று அவர் கூறியிருந்தார்.
கடந்தாண்டு நவம்பர் மாதம் கூட அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டிருந்தார். அதில், ”குடும்பத்தால் கைவிடப்பட்டு, பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகும் விலங்குகளைக்கண்டால் உண்மையில் எனக்கு கஷ்டமாக இருக்கிறது. ஒருநாள் வீட்டிலிருக்கும் பிராணிகளுக்கு அடுத்தநாள் அந்த வீடு இல்லை என்பதை என்னால் கற்பனை செய்து கூட பார்க்கமுடியவில்லை. கைவிடப்பட்ட 9 மாத ‘மைத்ரா’ வின் கண்களில் ஒரு பரிவு இருக்கிறது. நான் அதன் குடும்பத்தை கண்டறிய உங்கள் உதவி எனக்கு நிச்சயம் தேவை. உங்களுக்கு யாராவது தெரிந்தால் அல்லது நீங்கள் தயாராக இருந்தால் பயோவிலிருக்கும் படிவத்தை நிரப்புங்கள்,” என்று பதிவிட்டிருந்தார்.
கடந்த மாதம், தீபாவளி கொண்டாட்டத்தின்போது, சில அபிமான படங்களை தனது வளர்ப்பு நாய்களுடன் பகிர்ந்து கொண்டார் டாடா. அவர் தனது இன்ஸ்டா பதிவில்,
தத்தெடுக்கப்பட்ட பம்பாய் ஹவுஸ் நாய்களுடன் ஒரு சில மனதைக் கவரும் தருணங்கள். இந்த தீபாவளி, குறிப்பாக என் அலுவலகத் தோழர் ’கோவா’ உடன் என்று பதிவிட்டிருந்தார். டாடா குழுமத்தின் தலைமயகமான மும்பையில் இருக்கும் தனது நாய்களுள் ஒன்றான கோவா-வைத்தான் அப்படி குறிப்பிடிருந்தார்.
படங்கள் உதவி: இன்ஸ்டாகிராம் | தொகுப்பு: மலையரசு