சைபர் தாக்குதலுக்கு இலக்கான இளம் பெண் பக்கம் நின்ற ரத்தன் டாடா!
இன்ஸ்டாவில் ரத்தன் டாடா வெளியிட்ட போட்டோவில் கமெண்ட் செய்த இளம் பெண்ணை ட்ரோல் செய்தவர்களுக்கு எதிராக குரல் கொடுத்த டாடா.
தொழிலதிபர் ரத்தன் டாடா, இன்ஸ்டாகிராமில், இணைந்த பிறகு, பத்து லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் அவரைப் பின் தொடர்கின்றனர்.
டாடா சன்ஸ் கவுரவத் தலைவரான ரத்தன் டாடா, இன்ஸ்டாகிராம் மேடையில், சைபர் தாக்குதலுக்கு இலக்கான இளம் பெண் ஒருவர் பக்கம் நின்று ஆதரித்ததற்காக பயனாளிகளின் பாராட்டுகளை பெற்றிருக்கிறார்.
அந்த இளம் பெண், ரத்தன் டாடா சம்மணம் இட்டு அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் கொண்ட பதிவில், 'வாழ்த்துக்கள் சோட்டு’ என்று குறிப்பிட்டிருந்தார். அவரது பதிவு இப்படி அமைந்திருந்தது:
இந்த பக்கத்தை பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை ஒரு மைல்கல்லை தொட்டிருப்பதை இப்போது தான் பார்த்தேன். இன்ஸ்டாகிராமில் இணைந்த போது, இந்த அற்புதமான ஆன்லைன் குடும்பத்தை நான் எதிர்பார்க்கவில்லை. இதற்கு மிகுந்த நன்றி. இணைய உலகில் நீங்கள் உருவாக்கிக் கொள்ளும் தொடர்புகளின் தரம், எந்த எண்ணிக்கையையும் விட உயர்வானது என நினைக்கிறேன். உங்கள் சமூகத்தில் அங்கம் வகித்து, உங்களிடம் இருந்து கற்றுக்கொள்வது உற்சாகம் அளிக்கிறது மற்றும் என்னை மகிழ்ச்சியடைய வைக்கிறது. இந்த இணைந்த பயணம் தொடரும் என எதிர்பார்க்கிறேன்.”
இந்த பதிவு ஐந்து லட்சத்திற்கும் மேல் விருப்பங்களை பெற்று, நூற்றுக்கணக்கான பின்னூட்டங்களை பெற்றிருந்தது. இவற்றில் ஒரு பின்னூட்டம், கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது. பல பின் தொடர்பாளர்கள் இந்த இளம் பெண்ணை மதிப்புக்குறைவாக நடந்ததாகக் கூறியதால் அவர் தன் கருத்தை நீக்கினார்.
ஆனால் ஆச்சர்யப்படும் வகையில் ரத்தன் டாடா, தாக்குதலுக்கு இலக்கான அந்த இளம்பெண்ணுக்கு ஆதரவு தெரிவித்தார்.
“நம் எல்லோருக்குள்ளும் ஒரு குழந்தை இருக்கிறது. இந்த இளம் பெண்ணை மரியாதையுடன் நடத்துங்கள்,” என்று அவர் கூறியிருந்தார்.
அதன் பிறகு, இந்த சம்பவம் தொடர்பாக அவர் வெளியிட்ட தொடர் பதிவுகள் அவரது ஆளுமையை வெளிப்படுத்தியது. “ஒரு அப்பாவி இளம்பெண் நேற்று தன் இதயபூர்வமான உணர்வை வெளிப்படுத்தி, தனது பின்னூட்டத்தில் என்னை குழந்தை என குறிப்பிட்டிருந்தார். இதற்காக அவர் தாக்குதலுக்கு இலக்கானார். எனினும் அவரது இதயப்பூர்வமான கருத்தை நான் வரவேற்கிறேன்,” என அவர் குறிப்பிட்டிருந்தார்.
அதன் பிறகு, அந்த இளம் பெண் கருத்து தெரிவிப்பதை நிறுத்திவிட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.
“அந்த இளம் பெண் எனக்காகத் தெரிவித்திருந்த இதயப்பூர்வமான கருத்தை வரவேற்கிறேன் மற்றும் மதிக்கிறேன். அவர் தொடர்ந்து பதிவிடுவதை கட்டுப்படுத்திக்கொள்ள மாட்டார் என நம்புகிறேன்.”
சைபர் தாக்குதல் என்பது, சமூக ஊடக யுகத்தில் ஒரு அங்கமாகியிருக்கிறது. இருப்பினும், ரத்தன் டாடா பதிவின் மீது நடத்தப்பட்ட சைபர் தாக்குதலை, அவர் மிகவும் நுட்பமாகவும், நகைச்சுவை உணர்வுடனும் கையாண்டார். சோட்டு என அழைக்கப்பட்டதை அவர் தவறாகவும் எடுத்துக்கொள்ளவில்லை, அதே நேரத்தில் அப்படி கூறியதற்காக அந்த இளம் பெண் தாக்கப்படுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டும் இருக்கவில்லை.
ரத்தன் டாடா கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இன்ஸ்டாகிராமில் இணைந்தது முதல் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார். அவர் இதுவரை 17 படங்களை வெளியிட்டுள்ளார். ஒவ்வொரு படமும் அவரது பன்முக ஆளுமையை வெளிப்படுத்தி வருகிறது. அமெரிக்காவில் இருந்த இள வயது நாட்கள், போர் விமானத்தில் பயணித்தது போன்ற அனுபவங்களை அவர் பகிர்ந்து வருகிறார்.
பாட்டியின் தாக்கம்
இன்ஸ்டாகிராமில், ஹியூமன்ஸ் ஆப் பாம்பே கணக்கில் வெளியிட்ட பதிவில் ரத்தன் டாடா, தனது பாட்டியுடனான நினைவுகளை பகிர்ந்து கொண்டிருந்தார். இளம் வயதில், பாட்டி லேடி நவபாய் டாடா, தனக்கும் சகோதரருக்கும் ஊக்கமாக அமைந்ததாக அவர் தெரிவித்திருந்தார். மூன்று பகுதி கொண்ட பதிவில் அவர் இப்படி குறிப்பிட்டிருந்தார்:
“என் சிறுபிள்ளை பருவம் மகிழ்ச்சியானது. ஆனால், நாங்கள் வளர்ந்த போது, அப்போது விவகாரத்து அரிதானது என்பதால், எங்கள் பெற்றோர் விவாகரத்து காரணமாக நானும், சகோதரரும் நிறைய கேலிக்கு இலக்கானோம். இருப்பினும் எங்கள் பாட்டி நன்றாக வளர்த்தார். எங்கள் அம்மா மறுமனம் செய்து கொண்டதும், பள்ளியில் இருந்தவர்கள் தொடர்ந்து பலவற்றை கூறி தீவிரமாகத் தாக்கினர். ஆனால் எங்கள் பாட்டி எப்பாடுபட்டாவது கண்ணியத்துடன் நடக்க கற்றுக் கொடுத்தார். இன்று வரை அது கைகொடுக்கிறது.”
முன்னதாக யுவர்ஸ்டோரியின் ஷ்ரத்தா சர்மாவுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், தனது பாட்டி பற்றி அவர் பாசத்துடன் குறிப்பிட்டிருந்தார். பாம்பாயில் டாடா பேலசில், தானும் சகோதரரும் பாட்டியால் வளர்க்கப்பட்ட அனுபவத்தை தெரிவித்திருந்தார்.
“என்னையும், என் சகோதரரையும் வளர்த்த பாட்டிக்கு மிகவும் கடன் பட்டிருக்கிறேன். அவர் சரியானது என நினைத்த மதிப்புகளை எங்களில் விதைத்தார். என் மீதும், என் விழுமியங்கள் மீதும் இது மிகப்பெரிய தாக்கத்தை செலுத்துகிறது,” என்று அவர் கூறியிருந்தார்.
ஆங்கிலத்தில்: திம்மையா புஜாரி |தமிழில்: சைபர்சிம்மன்