சுற்றுச் சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறையை ஊக்குவிக்கும் ஐஏஎஸ் அதிகாரி!
ஐஏஎஸ் அதிகாரி ராம் சிங், தன் மனைவி, குழந்தையுடன் ஒவ்வொரு வாரமும் 10 கி.மீ நடந்து சென்று உள்ளூர் சந்தையில் விவசாயிகளிடம் இருந்து ஆர்கானிக் பொருட்களை வாங்குகிறார்.
பருவநிலை மாற்றம் தொடர்பாக போராடி வரும் க்ரேடா தன்பெர்க் நியூயார்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மாநாட்டில் உலகத் தலைவர்களிடம் பருவநிலை மாற்றங்களின் விளைவுகள் குறித்து ஆக்ரோஷமாகவும் உணர்ச்சிப்பூர்வமாகவும் முழக்கமிட்டார். வெப்பநிலையும் கடல் மட்டமும் அதிகரித்து வருவது, பனிப்பாறைகள் உருகுவது, கடல் மாசுபடுவது, சுவாசிக்க உகந்ததாக இல்லாத காற்று, காட்டுத்தீ என சுற்றுச்சூழலை பாதுகாக்க தவறியதற்காக உலகத் தலைவர்களை குற்றம்சாட்டி பேசினார்.
பருவநிலை மாற்றம் தொடர்பான விவாதங்கள் உச்சத்தில் இருக்கும் வேளையில் நாம் ஒவ்வொருவரும் இதற்காக பொறுப்பேற்கவேண்டும். பொது போக்குவரத்தைப் பயன்படுத்துவது, பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக துணிப்பைகளைப் பயன்படுத்துவது என நாம் ஒவ்வொருவரும் நம் அன்றாட பழக்கவழக்கங்களில் சிறு மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் ஒட்டுமொத்தமாக பூமியைப் பாதுகாக்கமுடியும். இந்தக் கருத்தில் நம்பிக்கைக் கொண்டு அவற்றைப் பின்பற்றியும் வருகிறார் ஐஏஎஸ் அதிகாரியான ராம் சிங்.
மேகாலயாவின் வெஸ்ட் கரோ ஹில்ஸ் பகுதியின் துணை ஆணையர் ராம் ஒவ்வொரு வாரமும் 10 கி.மீ நடந்து சென்று உள்ளூர் விவசாயிகளிடம் இருந்து ஆர்கானிக் பொருட்களை வாங்குகிறார். இவர் சூப்பர்மார்கெட் சென்று ஷாப்பிங் செய்வதில்லை. அத்துடன் பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக மூங்கில் கூடையை தோள் மீது சுமந்து செல்கிறார்.
சுற்றுசூழலுக்கு உகந்த நடைமுறை குறித்து இவர் East Mojo உடன் உரையாடுகையில்,
“காய்கறிகளை சுமந்துகொண்டு நடப்பது கடினம் என்று பலர் கூறினர். அவர்கள் மூங்கில் கூடை எடுத்துச்செல்லலாம் என நான் பரிந்துரை செய்தேன். இதனால் பிளாஸ்டிக் பயன்பாடும் தவிர்க்கப்படும். ஆனால் அவர்கள் இதைக் கேட்டு சிரித்தனர். நானும் என் மனைவியும் மூங்கில் கூடையை சுமந்துகொண்டு சந்தைக்குச் செல்கிறோம். இது பல விதங்களில் பலனளிக்கிறது. இன்றைய இளைய சமூகத்தினர் பலர் ஆரோக்கியமாக இருப்பதில்லை. அவர்கள் நடக்கவேண்டும். உணவுக் கட்டுப்பாட்டையும் பின்பற்றவேண்டும்,” என்றார்.
ஹிமாச்சலபிரதேசத்தைச் சேர்ந்த ராம் 2017ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி முதல் துணை ஆணையராக பணியாற்றி வருவதாக ’இண்டியன் எக்ஸ்பிரஸ்’ அறிக்கை தெரிவிக்கிறது.
”வார இறுதியில் 21 கிலோ காய்கறி ஷாப்பிங். பிளாஸ்டிக் இல்லை. வாகன மாசு இல்லை, போக்குவரத்து நெரிசல் இல்லை, ஆரோக்கியமான இந்தியா, ஆரோக்கியமான மேகாலயா, ஆர்கானிக் உணவு, சுத்தமான பசுமையான ஊர். காலை நேரத்தில் 10 கி.மீ நடைபயிற்சி,” என ராம் தனது புகைப்படத்துடன் சமூக ஊடகங்களில் குறிப்பிட்டுள்ளார்.
இதில் ராம் தனது மனைவி குழந்தையுடன் நடப்பது போன்ற புகைப்படம் பதிவிடப்பட்டுள்ளது. ராம் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கைமுறையை ஊக்குவிப்பதுடன் ஆரோக்கியம் குறித்தும் வலியுறுத்துகிறார். நடைபயிற்சியை மக்களிடையே ஊக்குவிக்க சந்தைக்கு நடந்து செல்கிறார்.
துரா நகரில் போக்குவரத்து நெரிசல் குறைய உதவுகிறார். இவ்வாறு மற்றவர்கள் பின்பற்ற ஒரு சிறந்த முன்னுதாரணமாக இவர் விளங்குகிறார். அத்துடன் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கும் வகையில் அலுவலகத்தில் இனிப்புகள் பரிமாறிக் கொள்ளப்படுவதை தடை செய்துள்ளார். கடந்த ஆறு மாதங்களாக இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
”நவீன சவால்களுக்கு பாரம்பரிய முறையிலான தீர்வு அவசியம். பாரம்பரிய முறைகளைப் பின்பற்றினால் நம்மால் ஆரோக்கியமாக இருக்கமுடியும்,” என ராம் தெரிவிப்பதாக என்டிடிவி குறிப்பிடுகிறது.
கட்டுரை: THINK CHANGE INDIA