‘தொழில் முனைவர்களே இந்த நெருக்கடியை ஏற்றிடு... புதியதை உருவாக்கு’ - ரத்தன் டாடா
இன்றைய சூழல் பல்வேறு சவால்களை ஏற்படுத்தியிருப்பினும் புதுமையான, மேம்பட்ட வழிமுறைகளை ஆராய்ந்து செயல்பட தொழில் முனைவர்களுக்கு நம்பிக்கை தெரிவித்துள்ளார் டாடா.
கோவிட்-19 தொற்று ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளுக்கிடையே தொழில்முனைவோர்களும் ஸ்டார்ட் அப்'களும் தங்களை ஆயத்தப்படுத்திக்கொள்ள உதவும் வகையில் ரத்தன் டாடா ஊக்கமளிக்கும் வரிகளை தனது இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பதிவு ஆயிரக்கணக்கானோரின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.
தற்போதைய நெருக்கடியான சூழலை நிறுவனங்கள் எதிர்கொண்டு திறம்பட செயல்படுவதற்கான புதிய வழிமுறைகளை தொழில்முனைவோர்கள் ஆராயவேண்டும். இதற்கு படைப்பாற்றலையும் புதுமையையும் புகுத்தவேண்டியது அவசியமாகிறது என்கிறார் ரத்தன் டாடா.
“இதற்கு முன்பு ஏற்பட்ட கடினமான சூழல்களை தொழில்முனைவோர்கள் தொலைநோக்கு பார்வையுடனும் படைப்பாற்றலுடனும் எதிர்கொண்டனர். இந்தத் தீர்வுகள் கற்பனைக்கும் அப்பாற்பட்டதாக இருந்தது. இந்த முன்னெடுப்புகள் இன்றைய புதிய தொழில்நுட்பங்களின் மைல்கல்லாக மாறியது,” என்றார்.
இன்றைய சூழல் பல்வேறு சவால்களை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் இது புதுமையான, அதேசமயம் மேம்பட்ட வழிமுறைகளை ஆராயவும் வழிவகுக்கும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்.
"தற்போதைய நெருக்கடியான சூழலானது மாறுபட்ட வகையில் ஒரு தயாரிப்பை உருவாக்குவதற்கும், நிறுவனத்தை திறம்பட நடத்துவதற்கும், சிறந்த முறையில் செயல்படுவதற்கும் வழிவகுக்கும் என்று நம்புகிறேன்.
இன்றைய சூழலுடன் தொடர்புடைய சிக்கல்களையும் சவால்களையும் நான் குறைத்து மதிப்பிடவில்லை. அதேசமயம் தொழில் முனைவோர்களின் புதுமை படைக்கும் திறன் மீது எனக்கு அதிக நம்பிக்கை உள்ளது. இவர்கள் வருங்காலத்திற்கு முன்னுதாரணமாகத் திகழக்கூடிய புதிய மாறுபட்ட நிறுவனங்களை உருவாக்குவதற்கான வழிமுறைகளை ஆராய்வார்கள்,” என்றார்.
அவர் தனது பதிவில் இறுதியாக குறிப்பிடுகையில்,
“எதுவும் எழுதப்படாத ஒரு வெள்ளைக் காகிதத்தில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கப்படுவதுபோல் இதுவரை நாம் சிந்தித்துப் பார்க்காத வகையில் செயல்படுவதற்கான வழிமுறைகளை ஆராயலாம். இந்த நெருக்கடியானது தொழில் முனைவோர்கள் புதிய சூழலுக்கேற்ப தங்களைத் தகவமைத்துக்கொள்ளவும் புதிய தேவைகளுக்கேற்ப புதுமை படைக்கவும் அவசியத்தை ஏற்படுத்தியுள்ளது,” என்று தெரிவித்துள்ளார்.
தகவல்: இன்ஸ்டாகிராம்