47 பச்சிளம் குழந்தைகள்; 10 தாய்மார்கள் உயிர்களைக் காப்பாற்றிய நிஜ ஹீரோ; ‘அண்ணா பதக்கம்’ பெற்ற ஆண் செவிலியர்!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகேயுள்ள நல்லூர்பேட்டையைச் சேர்ந்த ஆண் செவிலியர் ஜெயக்குமார் பொன்னரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம், ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் சான்றிதழை வழங்கினார்.
குடியரசு தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள காந்தி சிலை அருகே ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசின் சார்பில் குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வருவது வழக்கம். ஆனால், அந்த பகுதியில் தற்போது மெட்ரோ ரெயில் பணிகள் நடக்கின்றன. எனவே, இந்த ஆண்டு குடியரசு தின விழா, மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே நடைபெற்றது.
தென்னிந்திய பகுதிகளின் ராணுவ மேஜர் ஜெனரல், கடற்படை அதிகாரி, தாம்பரம் வான்படை நிலைய தலைமை அதிகாரி, கடலோர காவல்படை (கிழக்கு) கமாண்டர், தமிழக டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனர், கூடுதல் டி.ஜி.பி. (சட்டம் ஒழுங்கு) ஆகியோரை ஆளுநர் ரவிக்கு, சம்பிரதாயப்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார்.
அதைத்தொடர்ந்து, காலை 8 மணிக்கு தேசிய கொடியை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றினார். அப்போது இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் பறந்து வந்து மலர் தூவப்பட்டது. தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 49 படைப்பிரிவுகளின் அணிவகுப்பு நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக, அணி வகுப்பு மேடைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்து பதக்கங்களை வழங்கினார். அதன்படி, வீரதீரச் செயலுக்கான அண்ணா பதக்கம், சென்னை அமைந்தகரை காவல் நிலையத்தில் பணிபுரியும் தலைமைக் காவலர் பெ.சரவணன் என்பவருக்கும், வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆண் செவிலியர் ஜெயகுமார் பொன்னரசுக்கும், பொதுமக்கள் பிரிவில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஜெ.அந்தோணிசாமி, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த செல்வன்.நா. ஸ்ரீ கிருஷ்ணன், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த அ.செல்வம் ஆகியோருக்கும் வழங்கப்பட்டது. கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம், கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த எம்.ஏ.இனயத்துல்லாவு வழங்கப்பட்டது.
ஆண் செவிலியருக்கு அண்ணா பதக்கம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகேயுள்ள நல்லூர்பேட்டையைச் சேர்ந்த ஆண் செவிலியர் ஜெயக்குமார் பொன்னரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம், ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் சான்றிதழை வழங்கினார்.
ஆண் செவிலியரான ஜெயக்குமார் பொன்னரசுக்கு வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம் வழங்கப்பட காரணம் என்னவென விரிவாகp பார்க்கலாம்...
யார் இந்த ஜெயக்குமார் பொன்னரசு?
கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் 26ம் தேதி சென்னை திருவல்லிக்கேணியில் செயல்பட்டு வரும் கஸ்தூரிபாய் காந்தி சமூக நல மகப்பேறு மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டது. மருத்துவமனையின் இரண்டாம் தளத்தில் 36 பச்சிளம் குழந்தைகள் இன்குபேட்டரிலும், 7 குழந்தைகளுடன் 11 தாய்மார்களும் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்த அறைக்கு அருகேயுள்ள மருத்துவர் அறையில் மின்கசிவு காரணமாக இரவு 8.30 மணி அளவில் தீப்பற்றியுள்ளது.
அப்போது மருத்துவமனையில் இருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து நிற்க, அப்போது அருகில் இருந்த அறுவை அரங்கு ஆண் செவிலியர் ஜெயக்குமார், குழந்தைகள் மருத்துவ அதிகாரி (NICU) அறையில் தீ பற்றி எரிந்தது கொண்டிருப்பதை பார்த்து தனது உயிரைப் பற்றியும் கவலைப்படாமல் களத்தில் இறங்கினார்.
தீப்பிடித்த அறையில் இருந்த ஜன்னல் கண்ணாடிகளை எல்லாம் உடைத்துவிட்டு, அங்கிருந்த தீயணைப்புக்கருவியைக் கொண்டு தீயை அணைக்க முயற்சி செய்துள்ளார். தீ மளமளவென பரவியதை அடுத்து கரும்புகையானது குழந்தைகள் இருந்த அறைக்கு பரவத் தொடங்கியுள்ளது. ஏசியில் இருந்த மின் உபகரணங்களும் பற்றி எரிந்த நிலையில், தனி ஆளாக 12 புகை அணைப்பான் சிலிண்டர்கள் மூலமாக தீயை அணைத்துள்ளார்.
சுமார் 20 நிமிடம் போராடி 46 பச்சிளம் குழந்தைகள் மற்றும் தாய்மார்களை மீட்டு உள்ளார். இதில் அவர் கையாண்ட தீயணைப்பு உருளையில் இருந்து வெளியேறிய கார்பன் டை ஆக்ஸைடு (CO2) அதிகப்படியாக இவரும் சுவாதித்ததால் சுயநினைவு இழந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மீண்டுள்ளார்.
நேரில் அழைத்து பாராட்டிய முதல்வர்:
மே மாதம் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், 47 குழந்தைகள் உட்பட 58 பேரின் உயிரை காப்பாற்றிய செவிலியர் ஜெயகுமாரை ஜூன் மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது வீட்டிற்கு அழைத்து பாராட்டியுள்ளார்.
ஜெயக்குமாரை குடும்பத்துடன் அழைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், முகாம் அலுவலகத்தில் வைத்து பாராட்டு பத்திரம் மற்றும் பொற்கிழிகளை வழங்கி கெளரவித்தது குறிப்பிடத்தக்கது.
இதன் தொடர்ச்சியாக இன்று குடியரசு தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், தீ விபத்தில் தன்னுயிரைப் பற்றியும் கவலைப்படாமல் துரிதமாக செயல்பட்டு அங்கிருந்த குழந்தைகள் மற்றும் தாய்மார்களை காப்பாற்றிய ஜெயக்குமாருக்கு வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கத்தை வழங்கி கெளரவித்துள்ளார்.
'ஐன்ஸ்டனை மிஞ்சும் அறிவாற்றல்' - 8 வயது ஆன்ட்ராய்டு டெவலப்பருக்கு ‘பால புரஸ்கார் விருது’