கழிவுகளில் இருந்து பயனுள்ள பொருட்களை உருவாக்கும் ‘மறுசுழற்சி மனிதர்’
‘மறுசுழற்சி மனிதர்’ பினிஷ் தேசாய் பல வகையான தொழிற்சாலை கழிவுகளை மறுசுழற்சி செய்து பயனுள்ள பொருட்களாக மாற்றியிருப்பதுடன் 1996 மெட்ரிக் டன் கழிவுகள் நிலத்தில் கொட்டப்படுவதை தவிர்த்துள்ளார்.
உலகில் மாற்றத்தை ஏற்படுத்த வயது ஒரு தடையல்ல என்பார்கள். 26 வயதான டாக்டர் பினிஷ் தேசாய் இதற்கு மிகச்சரியான உதாரணம்.
பினிஷ் குஜராத்தின் வலசத் பகுதியில் பிறந்தார். புதிய விஷயங்களை ஆர்வமாகக் கற்றுக்கொள்வார். மற்ற குழந்தைகளைப் போன்றே இவரும் வெளியில் விளையாடுவதிலும் கார்டூன் பார்ப்பதிலும் காமிக்ஸ் படிப்பதிலும் நேரம் செலவிட்டு வந்தார். இருப்பினும் டெக்ஸ்டர்ஸ் லெபோரேட்டரி (Dexter’s Laboratory) இவருக்கு விருப்பமான நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் ஒரு சிறுவன் வீட்டிலேயே ரகசியமாக ஒரு அறிவியல் ஆய்வகம் நடத்தி வருவான். இந்த நிகழ்ச்சி பினிஷிற்கு பொழுதுபோக்காக மட்டுமல்லாமல் புதுமையான சிந்தனையைத் தூண்டுவதாகவும் அமைந்தது.
10 வயதான பினிஷ், சொந்தமாக சிறு சிறு சோதனைகள் மேற்கொள்ள இதுவே ஆரம்பப் புள்ளியாக அமைந்துள்ளது. வீட்டு சமையலறையில் நீராவியை நீராக மாற்றுவதற்கான முதல் இயந்திரம் தொடங்கி தொழிற்சாலை பேப்பர் கழிவுகளைக் கொண்டு P-பிளாக் கட்டுவது வரை பல்வேறு புதுமைகள் படைத்துள்ளார். இவர் 'மறுசுழற்சி மனிதர்’ என்றே அழைக்கப்படுகிறார்.
ஆர்வம், மாறுபட்ட யோசனைகள், கடின உழைப்பு போன்றவை இவர் தொழில்முனைவராகவும் சுற்றுச்சூழல் ஆர்வலராகவும் புதுமை படைப்பவராகவும் இன்று உருவாக உதவியுள்ளது.
“என்னுடைய குழந்தைப் பருவத்தில் இருந்து எனக்கு ஆர்வமுள்ள பகுதியில் செயல்பட்டு வருகிறேன். மருத்துவராகவோ பொறியாளராகவோ ஆகவேண்டும் என்பதில் எனக்கு விருப்பம் இருந்ததில்லை. ஆனால் சமூக நலனில் பங்களிக்கவேண்டும் என்கிற ஆர்வம் எப்போதும் இருந்தது. அதுவே இன்றைய நிலையை எட்ட உதவியுள்ளது,” என்று சோஷியல்ஸ்டோரி உடனான உரையாடலில் பினிஷ் தேசாய் குறிப்பிட்டுள்ளார்.
திருப்புமுனை
பினிஷின் வாழ்க்கையில் 2004-ம் ஆண்டு திருப்புமுனை ஏற்பட்டது. அப்போது செயிண்ட் ஜோசப் ET உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அவரது நண்பரின் பேண்டில் சூயிங் கம் ஒட்டிக்கொண்டது. பினிஷ் பேப்பர் கொண்டு அதை அகற்றினார். வீட்டை விட்டு கிளம்பத் தயாரானபோது கம், பேப்பர் இரண்டும் கடினமாக மாறிப்போனதை கவனித்தார்.
“எனக்கு அந்த நாட்கள் இன்றும் பசுமையாக நினைவில் உள்ளது. நான் அந்தக் கடினமான பொருளை வீட்டிற்குக் கொண்டு சென்றேன். அதிலிருந்து ஏதேனும் பயனுள்ள பொருளை உருவாக்க முடியுமா என்று ஆராய்ந்தேன். அதை மேலும் உறுதிப்படுத்த ஒவ்வொரு நாளும் ஒரு மூலப்பொருளை சேர்த்து சோதனை செய்தேன். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குப் பிறகு செங்கல் உருவாக்கும் எண்ணம் தோன்றியது. உலகின் மலிவு விலை வீடு உருவாக்கும் கனவுடன் இந்தப் புதிய சிந்தனை வெகுவாக ஒத்திருந்தது. அதை நோக்கி என் முயற்சிகளைத் தொடர்ந்தேன்,” என்று பினிஷ் நினைவுகூர்ந்தார்.
கட்டமைப்புப் பயன்பாடுகளுக்கான மலிவு விலை செங்கல் உருவாக்க இரண்டாண்டுகள் கடினமாக உழைக்கவேண்டியிருந்தது. 16 வயது நிரம்பிய அந்த சமயத்திலேயே தொழில்முனைவு குறித்தும் சொந்த நிறுவனத்தை நிறுவுவது குறித்தும் திட்டமிட்டார். இந்தப் பயணம் எளிதாக அமைந்துவிடவில்லை.
“உறவினர்கள், நண்பர்கள், குடும்பத்தினர் என அனைவரும் விமர்சித்தனர். இது பயனற்ற முயற்சி என நினைத்தார்கள். எனக்கு வருத்தமாக இருந்தாலும் என் மனதின் விருப்பத்திற்கேற்ப செயல்படத் தீர்மானித்தேன். என்னிடமிருந்த 1,600 ரூபாயைக் கொண்டு BDream Foundation தொடங்கினேன்,” என்றார் பினிஷ்.
பினிஷிடம் நிறுவனத்தை நடத்தத் தேவையான நிலம், ஊழியர்கள் உள்ளிட்ட வளங்கள் இல்லை. இருப்பினும் எப்படியோ தொடங்கினார். அவர் உருவாக்கிய P-பிரிக்ஸ் பேப்பர் கழிவுகள், சூயிங் கம், ஆர்கானிக் பைண்டர், தாவர சாறு போன்றவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. எனவே முதலில் சில பேப்பர் மில்களை அணுகி ஸ்கிராப் மற்றும் செங்கல் தயாரிக்கத் தேவையான இடம் ஆகியவற்றைக் கோரினார்.
“ஒரு மில்லில் வாகன நிறுத்துமிடத்தில் இடம் கொடுத்தார்கள். கிட்டத்தட்ட 11 மாதங்கள் காலை நேரங்களில் கல்லூரியிலும் மாலை நேரங்களில் P-பிரிக்ஸ் உருவாக்குவதிலும் நேரம் செலவிட்டேன். இறுதியாக கிட்டத்தட்ட 3,000 செங்கல் உருவாக்கி அவற்றைக் கொண்டு வீட்டின் முன்வடிவத்தை உருவாக்கினேன். இன்னொவேஷன் மேலா ஒன்றில் அதை அறிமுகப்படுத்தியபோது தனிநபர்கள், கார்ப்பரேட்கள், என்ஜிஓ-க்கள் போன்றோரிடமிருந்து ஆர்டர் வரத் தொடங்கியது,” என பினிஷ் விவரித்தார்.
இத்தனை ஆண்டுகளில் குஜராத், மகாராஷ்டிரா, ஆந்திரப்பிரதேசம் ஆகிய பகுதிகளில் உள்ள கிராமப்புறங்களில் பினிஷின் BDream நிறுவனம் 11,000 கழிப்பறைகள், வீடுகள், கட்டிடங்கள் போன்றவற்றைக் கட்டியுள்ளது.
இத்தனை முயற்சிகள் எடுத்திருப்பினும் விரைவில் பிரச்சனைகள் ஏற்பட்டது. 2016-ம் ஆண்டு P-பிரிக்ஸ் தொடர்பாக பினிஷ் பெற்றிருந்த காப்புரிமையை கொடுத்துவிடுமாறு சில முதலீட்டாளர்கள் கட்டாயப்படுத்தத் தொடங்கினார்கள். எனவே வேறு வழியின்றி தனது சொந்த நிறுவனத்திலிருந்து விலக வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்தச் சூழலை எதிர்த்துப் போராடி மீண்டெழ இரண்டு மாதங்கள் ஆனது. மற்றவர்களுடன் தொடர்புகளை தவிர்த்துவிட்டார். இரவுகளை தூக்கமின்றி கழித்துள்ளார்.
கழிவு மேலாண்மை
ஆனால் விரைவில் அதே ஆண்டில் Eco Eclectic Technologies தொடங்கினார்.
பினிஷ் கழிவு மேலாண்மை பிரிவில் புதிய நிறுவனத்தைத் தொடங்கினார். இவரது பணியும் ஆராய்ச்சியும் பாராட்டைப் பெற்றுத் தந்தது. நிதியுதவியும் கிடைத்தது. 26 வயதான இவர் தொழிற்சாலையை அமைத்ததுடன் தொழிற்சாலைக் கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கான புதிய வழிமுறைகளை ஆராய பிரத்யேகமான ஆய்வகத்தையும் அமைத்தார்.
“பேப்பர் கழிவுகளை மறுசுழற்சி செய்து P-பிரிக்ஸ் தயாரிப்பதுடன் என் செயல்பாடுகளை நிறுத்திக்கொள்ள நான் விரும்பவில்லை. எனவே நானும் என் குழுவும் உலோகம், மரம், ஜவுளி கழிவுகள் உள்ளிட்ட 50 வகையான தொழிற்சாலைகளைக் கழிவுகளையும் ஆராயத் தொடங்கினோம். நாங்கள் அவற்றைக் கொண்டு செயற்கை மரக்கட்டை, ஜவுளி இழைகள், ப்ரீகாஸ்ட் மேற்கூரை, ஒலிபுகாத பேனல்கள், ஒலி சார்ந்த பேனல்கள், சுவர் பேனல்கள், கச்சா எண்ணெய் மாதிரியான உறிஞ்சக்கூடிய பொருட்கள் போன்ற பல்வேறு பொருட்களைத் தயாரிக்கப் பயன்படுத்தினோம்,” என்றார்.
பினிஷ் தொடங்கிய மற்றொரு நிறுவனம் Eco Light Studio. கணவனை இழந்தவர்கள், கல்வியறிவில்லாத கிராமப்புறப் பெண்கள் ஆகியோர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி சக்தியளிப்பதே இந்த நிறுவனத்தின் நோக்கம். குஜராத் பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த நலிந்த பிரிவைச் சேர்ந்த பெண்கள் பலருக்கு கழிவுகளைக் கொண்டு கடிகாரங்கள், பைகள் மற்றும் இதர துணைப் பொருட்களைத் தயாரிக்க பயிற்சி அமர்வுகள் ஏற்பாடு செய்தார்.
கடந்த ஒராண்டில் பினிஷ் 1996 மெட்ரிக் டன் கழிவுகள் நிலத்தில் கொட்டப்படாமல் பயனுள்ள பொருட்களாக மாறும் வகையில் மறுசுழற்சி செய்துள்ளார். இதனால் 3,592 டன் கார்பன் வெளியேற்றம் குறைந்துள்ளது.
பினிஷ் 2018-ம் ஆண்டு ஃபோர்ப்ஸ் ‘30 அண்டர் 30’ ஆசியாவின் வெற்றிகரமான சமூக நிறுவனங்களை நிறுவிய நிறுவனர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். அதே ஆண்டு தொழில்முனைவர் மற்றும் நூலாசிரியரான நிகில் சந்துவானி ‘தி ரீசைக்கிள் மேன்’ என்கிற பெயரில் பினிஷின் பயணத்தை ஆவணப்படுத்தினார்.
ரோட்டரி இண்டர்நேஷனல் என்கிற லாப நோக்கமற்ற நிறுவனம் தனது வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்துள்ளதாகக் கூறுகிறார் பினிஷ்.
“ரோட்டரி இண்டர்நேஷனல் என்னுடைய ஆளுமையை வடிவமைப்பதிலும் சமூக நலனில் ஈடுபடவும் முக்கியப் பங்கு வகித்துள்ளது. இந்தியாவில் கோவிட்-19 தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் தனிமைப்படுத்தப்படுவதற்கு உதவும் வகையில் குறைந்த விலை பேனல்களை உருவாக்கும் முயற்சியில் உள்ளேன். போதிய மருத்துவ வசதிகள் இல்லாத இடங்களில் இவை சிறப்பாஅக பலனளிக்கும்,” என்றார் பினிஷ்.
ஆங்கில கட்டுரையாளர்: ரோஷ்னி பாலாஜி | தமிழில்: ஸ்ரீவித்யா