பிளாஸ்டிக், மின் கழிவுகளைக் கோடிகளாக்கும் தொழில் முனைவோர்கள்!
பிளாஸ்டிக் மற்றும் மின்னணுக் கழிவுகள் மறுசுழற்சியை ஓர் தொழில் வாய்ப்பாக்கி, கோடிகளில் வருவாய் ஈட்டி வருகின்றனர் இளம் தொழில் முனைவோர்கள் சிலர்.
கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவில் காற்று மாசு குறித்த பிரச்னைதான் ஊடகங்களில் தலைப்புச் செய்திகளாக உலா வருகின்றன. அதேநேரத்தில் பிளாஸ்டிக், மின்னணுக் கழிவுகள் (மின் கழிவுகள்) போன்ற பிற வகையான மாசுபாடுகளும் வளரும் நாடான இந்தியாவுக்கு பெரும் தலைவலியாக உள்ளது.
இதுகுறித்த ஓர் ஆய்வில், இந்தியா ஆண்டுதோறும் 9.46 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகளை உற்பத்தி செய்வதாகவும், அதில் 40 சதவீதம் சேகரிக்கப்படாமலேயே உள்ளது என்றும் தெரிவிக்கிறது. குளோபல் இ-வேஸ்ட் மானிட்டர் 2017இன் கணிப்புபடி, இந்தியா ஆண்டுதோறும் சுமார் இரண்டு மில்லியன் டன் மின் கழிவுகளை உற்பத்தி செய்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பிளாஸ்டிக் மற்றும் மின்னணுக் கழிவுகள் கவலையளிக்கும் விதத்தில் நாட்டின் வளர்ச்சியைக் கேள்விக்குறியாக்கும் அதே வேளையில், இதனையே ஓர் தொழில் வாய்ப்பாக கொண்டு, சில தொழில் முனைவோர்கள், இவற்றை மறுசுழற்சி செய்து கோடிகளில் வருவாய் ஈட்டி வருகின்றனர் என்பதும் கவனிக்கத்தக்கது.
இவ்வாறு மின் கழிவுப் பொருள்களை மறுசுழற்சி செய்வதன் கோடிகளில் வருமானம் ஈட்டும் தேஷ்வால் கழிவு மேலாண்மை நிறுவனத்தின் நிறுவனர் ராஜ்குமார் ஓர் வளர்ந்து வரும் தொழில்முனைவோர் ஆவார். இவர், இதற்கு முன்பு தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிந்தபோது, மின் கழிவுகள் பெருமளவுக்கு பெருகி, மிகச் சிக்கலான ஓர் சூழ்நிலை ஏற்படுவதைக் கண்டார். இதனை சமாளிக்க இந்த கழிவுகளை மறுசுழற்சி செய்வதொன்றே வழியென அறிந்து அதற்காக திட்டமிட்டார்.
இதுகுறித்து அவர் கூறும்போது,
"2018 ஆம் ஆண்டில் இந்தியா கிட்டத்தட்ட மூன்று மில்லியன் மெட்ரிக் டன் மின் கழிவுகளை தன்னகத்தே கொண்டிருந்தது. தேசத்தின் மறுசுழற்சித் திறன் இந்த தொகையில் ஐந்து சதவிகிதம் மட்டுமே. இதையடுத்து, நான் எனது முதல் மின் கழிவு மறுசுழற்சி ஆலையை ராஜஸ்தானின் குஷ்கேராவில், தேஷ்வால் மின் கழிவு மறுசுழற்சி ஆலை என்ற பெயரில் நிறுவினேன். இதன்மூலம் சமூகத்திற்கு சேவை செய்வதற்கும், உலக நலனுக்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் பங்களிக்க முடியும் என முடிவு செய்தேன்," என்கிறார்.
2010 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட மின் கழிவு வரைவால் உந்துதல் பெற்ற ராஜ்குமார், தனது சொந்த பணத்தை முதலீடு செய்து, 2013ஆம் ஆண்டு, தேஷ்வால் கழிவு முகமைத்துவத்தை தொடங்க முடிவு செய்தார். அவரது முதல் நடவடிக்கை மானேசரில் மற்றொரு பெரிய அளவிலான மறுசுழற்சி மையத்தை நிறுவுவதாகும். இந்த இரண்டு மையங்களும் பல்வேறு வகையான மின் கழிவுகளை மறுசுழற்சி செய்யத் தொடங்கின. பயன்படுத்தப்பட்ட பேட்டரிகள், பிளாஸ்டிக் போன்றவற்றை இந்த மையங்கள் மறுசுழற்சி செய்தன.
இதையடுத்து, தகவல் தொழில்நுட்பத் துறை, கனரக தொழில்கள், ஆட்டோமொபைல்கள், நுகர்வோர் பொருள்கள், நிதித்துறை, ஆலோசனை, மருந்துகள், தொலைத்தொடர்பு மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட கார்ப்பரேட் வாடிக்கையாளர் தளத்துடன், ராஜ்குமாரின் நிறுவனம் ஆண்டுக்கு 50 சதவீதம் என்ற விகிதத்தில் வளர்ந்து வருகிறது.
இதுவரை, ராஜ்குமார், தேஷ்வாலில் ரூ.15 கோடியை முதலீடு செய்துள்ளார். 2018-19 ஆம் ஆண்டில் ரூ.23 கோடி வருவாய் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிறுவனத்தைத் தொடங்கியதில் இருந்து சுமார் 1,000 மெட்ரிக் டன்களுக்கும் அதிகமான மின், பிளாஸ்டிக் கழிவுகள் மறுசுழற்சி செய்யப்பட்டுள்ளன. மேலும் 2019-க்குப் பிறகு ஆண்டுக்கு 500 டன்களுக்கு மேல் மறுசுழற்சி செய்ய இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருகிறார் ராஜ்குமார்.
இவரைப் போலவே டீலக்ஸ் மறுசுழற்சி நிறுவனத்தின் நிறுவனர் ஜிக்னேஷ் ஷா, ஒரு காகித உற்பத்தி மற்றும் மறுசுழற்சி குறித்த தொழில் பின்னணியைச் சேர்ந்தவர். 1999ஆம் ஆண்டு, பேக்கேஜிங் தொழிற்சாலைகளில் இருந்து வரும் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் வாய்ப்பு, அவரது வாழ்க்கையின் போக்கையே மாற்றி விட்டது எனலாம்.
மும்பையைச் சேர்ந்த டீலக்ஸ் மறுசுழற்சி வணிகத்தை அவர் தொடங்கியபோது, பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு ஆலோசனைகளை மட்டுமே இவரது நிறுவனம் வழங்கியது. சிறிய அளவில் மாதத்துக்கு 75 டன் கொள்ளளவு கொண்ட ஒரு சிறிய ஆலையாக தொடங்கப்பட்ட இந்நிறுவனம்,
ஏறக்குறைய 20 ஆண்டுகால பயணத்தில் தற்போது ஆண்டுக்கு 13,000 மெட்ரிக் டன்களை மறுசுழற்சி செய்யும் அளவுக்கு விரிவடைந்துள்ளது. இன்று, இந்நிறுவனம் ஆண்டுக்கு சுமார் ரூ.40 கோடி விற்றுமுதல் ஈட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து ஜிக்னேஷ் கூறுகையில், “தொடக்கத்தில், டெட்ராபாக் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை கழிவுகளை மட்டுமே மறுசுழற்சி செய்தோம். 2004ஆம் ஆண்டு முதல், முன்று சக்கர வண்டி, ஆட்டோ ரிக்ஷா துறையில் பயணிகள் மற்றும் ஓட்டுநர்களுக்கு சீட் பேக் மற்றும் பேக்ரெஸ்ட் போன்றவைகளை தயாரித்து வழங்கி வருகிறோம் என்கிறார்.
இவர்களைப் போன்றே கவுரவ் ஜலான், பேக்மேன் பேக்கேஜிங் நிறுவனத்தின் நிறுவனர். இவர் பிளாஸ்டிக் போன்ற அன்றாட வாழ்வை அச்சுறுத்தும் பொருள்களை மறுசுழற்சி செய்து வருகிறார். அமேசான் இந்தியா, பிளிப்கார்ட், சாம்சங், போஷ் மற்றும் பிற வாடிக்கையாளர்களுக்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த மக்கும் பேக்கேஜிங் தயாரிப்புகளை இவரின் நிறுவனம் வழங்குகிறது.
கிரேட்டர் நொய்டாவில் உள்ள இவரின் தொழிற்சாலையில், பேக்மேன் பேக்கேஜிங் பல்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகளில் காகித அடிப்படையிலான நெளி பெட்டிகளை (காற்று நெடுவரிசைகளுடன் கூடிய காகித பலகைகள்) தயாரிக்கிறது. எலக்ட்ரானிக்ஸ், ஷூக்கள், உணவுப் பொருள்கள், உடைகள் போன்றவற்றை தொகுக்கப் பயன்படுத்தப்படும் பழக்கமான, பழுப்பு நிற அட்டைப் பெட்டிகளான இவை ஏற்கெனவே சந்தையில் பிரபலம்.
பேக்மேன் நெளி சுருள்கள், குமிழி சுருள்கள், குமிழி பைகள், கூரியர் பைகள், பிஓடி ஜாக்கெட்டுகள், குழாய் நாடாக்கள் உள்ளிட்ட பலவிதமான பைகளை இந்நிறுவனம் தயாரிக்கின்றது. வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக விற்பனை செய்வதைத் தவிர, இந்த தயாரிப்புகளை வாங்கக்கூடிய ஒரு இணையவழிக் கடையும் உள்ளது.
“பேக்கேஜிங் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பொருள் மறுசுழற்சி செய்யப்பட்ட தரமான காகிதத்திலிருந்து உருவாக்கப்படுகிறது. இன்று, பேக்மேன் ஒவ்வொரு நாளும் 1 லட்சம் நெளி பெட்டிகளையும், ரோல்களையும் தயாரித்து 300-க்கும் மேற்பட்ட இந்திய நகரங்களுக்கு அனுப்பி வருகிறது,” என்று கவுரவ் ஜலான் கூறுகிறார்.
டெல்லியில் பதிவு செய்யப்பட்ட நிறுவனமான பேக்மேன், ஆண்டுக்கு ரூ.20 கோடி வருவாய் ஈட்டுகிறது, 105 ஊழியர்களைக் கொண்டு செயல்படுகிறது. மேலும் இந்நிறுவனம் சோளத்திலிருந்து சூழலுக்கு உகந்த காகிதப் பைகளையும் தயாரிக்கிறது. சோளப் பைகள் மக்கும் தன்மை கொண்டவை, மேலும் பொதுவான பாலிமர்களின் மறுசுழற்சி செயல்முறையை மாசுபடுத்தாது என்று கவுரவ் ஜலான் கூறுகிறார்.
அமேசான் இந்தியா உள்பட இன்று பல்வேறு முன்னணி நிறுவனங்கள் சோளத்தை அடிப்படையாகக் கொண்ட சுற்றுச்சுழலுக்கு உகந்த இந்த காகிதப் பைகளின் முக்கிய வாடிக்கையாளர்கள் என கவுரவ் ஜலான் கூறுகிறார்.
கழிவுகள் என நாம் கைவிட்டவைகளையே ஓர் தொழிலாக மேற்கொண்டு கோடிகளில் லாபம் ஈட்டும் இந்த இளம் தொழில் முனைவோர்களின் செயல்களில் லாப நோக்கமிருந்தாலும், நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக உள்ள பிளாஸ்டிக், மின் கழிவுகளின் விகிதமும் பெருமளவுக்கு குறைவதால் இது ஓர் சமூக நோக்கோடு கூடிய தொழில் என்றும் நாம் கருதலாம்.
ஆங்கிலத்தில் ரிஷப் மன்சூர் | தமிழில் திவ்யாதரன்.