Repo Rate: 3வது முறையாக உயரும் ரெப்போ வட்டி விகிதம்: பணவீக்கத்தின் தாக்கம்!
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ரெப்போ வட்டி விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி 5.4 சதவீதமாக அறிவித்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ரெப்போ வட்டி (Repo rate) விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி 5.4 சதவீதமாக அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் அதிகரித்து வரும் பண வீக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நாடுகளில் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அண்டை நாடான இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, இந்தியாவில் ஏற்படக்கூடாது என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறிப்பாக பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு வழங்கும் ரெப்போ வட்டி விகிதத்தை இரண்டு முறை உயர்த்தியது. இந்நிலையில், நடப்பு ஆண்டில் மூன்றாவது முறையாக ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியின் வட்டி விகித நிர்ணயக் குழு அடுத்த இரண்டு மாதத்திற்கான நாணயக் கொள்கை குறித்த மூன்று நாள் ஆலோசனை கூட்டத்தை கடந்த புதன்கிழமை அன்று தொடங்கியது. மத்திய வங்கி ஏற்கனவே தனது இணக்கமான பணவியல் கொள்கை நிலைப்பாட்டை படிப்படியாக திரும்பப் பெறுவதாக அறிவிருந்தது.
ஆனால், உலக அளவில் பணவீக்கம் அதிகரித்து வருவதால், அதனை கட்டுப்படுத்தும் வகையில் 3வது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளதாக ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா அறிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டி 0.50 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. கூட்டத்தில் பேசிய ஆளுநர் சக்திகாந்த தாஸ்,
“கணிக்க முடியாத நிகழ்வுகள், பல அதிர்ச்சிகரமான விஷயங்கள் இருந்த போதிலும் இந்திய பொருளாதாரம் ஸ்திரத் தன்மையுடன் திகழ்கிறது. பணவீக்கமானது எதிர்பார்க்காத அளவுக்கு உச்சத்தை அடைந்து வருகிறது. இருப்பினும் தற்போதைய சூழ்நிலையை சமாளிக்கும் திறன் ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவிடம் உள்ளது. எனவே உயர்ந்து வரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த, ரெப்போ விகிதத்தை 5.40 சதவீதமாக உயர்த்த பணவியல் கொள்கைக் குழு முடிவு செய்துள்ளது,” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பின் மூலமாக வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 4.9 சதவீதத்தில் இருந்து 5.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. ரெப்போ வட்டி விகிதம் உயர்வால் வீடு, வாகனம், தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதம் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் நுகர்வோர் பணவீக்கம் 7.1 சதவிகிதமாக இருக்கும் என்று கூறியுள்ளார். அக்டோபர்-டிசம்பர் காலத்தில் நுகர்வோர் பணவீக்கம் 6.4 சதவிகிதமாகவும், ஜனவரி-மார்ச் காலத்தில் இது 5.8 சதவிகிதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 2022-23 நிதியாண்டில் நாட்டின் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 7.2 சதவீதமாக இருக்கும் என்றும், பணவீக்க வீகிதமும் 6.7 சதவீதமாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
பணவீக்கத்தை சுட்டிக்காட்டி கடந்த மே மாதம் ரெப்போ வட்டி விகிதம் 40 அடிப்படை புள்ளிகள் அதிகரிப்பட்டதை அடுத்து, ரெப்போ விகிதம் 4 சதவீதத்திலிருந்து 4.40 சதவீதமாக உயர்ந்தது. அதனைத் தொடர்ந்து ஜூன் மாதத்தில் ரெப்போ விகிதம் 50 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 4.90% ஆக நிர்ணயிக்கப்பட்டது.
தற்போது மீண்டும் 50 புள்ளிகள் உயர்த்தப்பட்டுள்ளதால், கடந்த 3 மாதத்தில் மட்டுமே 130 அடிப்படை புள்ளிகள் அதிகரிப்பட்டுள்ளன. அதாவது, கடந்த மே மாதம் 4 சதவீதமாக இருந்த ரெப்போ விகிதம் தற்போது 5.4 சதவீதமாக உயர்ந்துள்ளது.
கடந்த செவ்வாய்கிழமை அன்று மாநிலங்களவையில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “இந்திய ரிசர்வ் வங்கியும், மத்திய அரசாங்கமும் இணைந்து, பணவீக்க விகிதம் 7 அல்லது அதைவிட சிறந்ததாக இருப்பதை உறுதிசெய்ய போதுமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது,” எனத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.