குழந்தைத் திருமண தீமையில் இருந்து தப்பி ‘டாப்பர்’ ஆன ஆந்திர மாணவி!
ஜி.நிர்மலா என்ற மாணவி, கட்டாயக் குழந்தைத் திருமணம் என்னும் தீயப் பிடியிலிருந்து தப்பித்து, இப்போது ஆந்திராவின் இன்டர்மீடியட் டாப்பர் ஆகியிருக்கிறார்.
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த ஜி.நிர்மலா என்ற மாணவி, கட்டாயக் குழந்தைத் திருமணம் என்னும் தீயப் பிடியிலிருந்து தப்பித்து இன்டர்மீடியட் டாப்பர் ஆனது உத்வேகத் தருணமாகப் பார்க்கப்படுகிறது.
அத்துடன், ஐபிஎஸ் அதிகாரியாகி குழந்தைத் திருமணம் என்னும் சமூகத் தீமையை ஒழிக்கப் பாடுபடும் உயரிய லட்சியத்தையும் கொண்டுள்ளார் நிர்மலா.
இன்டர்மீடியட் வாரிய செயலர் சவுரவ் கவுர் வெளியிட்ட அறிவிப்பில், “கர்னூல் மாவட்டம் பெத்தா ஹரிவனத்தைச் சேர்ந்த ஜி.நிர்மலா என்ற மாணவி 440-க்கு 421 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார்” என்றார். நிர்மலா கடந்த ஆண்டு தனது எஸ்எஸ்சி தேர்வில் 537 மதிப்பெண்கள் பெற்றதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
“மாணவி நிர்மலாவின் குடும்பத்தினர், அவரை குழந்தைத் திருமணத்திற்குக் கட்டாயப்படுத்தியுள்ளனர். ஆனால், சரியான நேரத்தில் மாவட்ட நிர்வாகம் காத்துள்ளது. இதனையடுத்து, இடைநிலைத் தேர்வில் முதலிடம் பிடித்தார் நிர்மலா” என்று மாவட்ட நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவிக்கின்றது.
நிர்மலாவின் சகோதரிகளைப் போல் இவரும் அவ்வாறு திருமணம் செய்துகொள்ள குடும்பத்தார் கட்டாயப்படுத்தினர். இதற்கு அவர்கள் கூறிய காரணம், ‘படிக்க வைக்க வசதி போதாது’ என்பதே. ‘அருகில் ஜூனியர் கல்லூரிகள் எதுவும் இல்லாததால் உயர் கல்விக்காக நிர்மலாவை வேறு இடம் அனுப்ப முடியவில்லை’ என்றனர்.
இந்நிலையில்தான், தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத நிர்மலா, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ. சாய் பிரசாத் ரெட்டியை கடந்த ஆண்டு சந்தித்தார். உயர் கல்விக்காக தனக்கு உதவ வேண்டும் என்றார். அவரும் உடனே மாவட்ட ஆட்சியர் ஸ்ருஜனாவிடம் தெரிவிக்க, அவர் முதலில் வயது முதிரா இந்தத் திருமணத்தைத் தடுத்தார்.
பின்னர், மாவட்ட நிர்வாகம் நிர்மலாவை கஸ்தூரிபா காந்தி பாலிகலா வித்யாலயாவில் சேர்த்தது. அங்கு நிர்மலா தனது கல்வியைத் தொடர்ந்தார். அங்கிருந்து திரும்பிப் பார்க்கவேயில்லை.
பெண்களுக்கு அகத்தூண்டுதல் ஏற்படுத்தும் இந்தக் கதையின் நாயகி நிர்மலா எதிர்காலத்தில் ஓர் ஐபிஎஸ் அதிகாரியாகி, குழந்தைத் திருமணங்களை ஒழிப்பதற்காகவும், தங்கள் கனவுகளைத் தொடர விரும்பும் பெண்களுக்காகவும் பணியாற்ற விரும்புகிறார். கனவு மெய்ப்படும்.